Friday, August 28, 2015

சிலம்பு!
-------------
சோழநாட்டை விட்டேதான் பாண்டிய நாட்டிற்குக்
கோவலனும் கண்ணகியும் வாழ்வாங்கு வாழ்வதற்கே
ஆவலுடன் வந்தனர்! காற்சிலம்பை விற்பதற்குக்
கோவலனும் மாமதுரை வீதியிலே சென்றிருந்தான்!
ஏவலர்கள் கள்வனென்றே கோவலனைக் கொண்டுசென்றார்!
கோவலனைக் கொல்வதற்குப் பாண்டியனும் ஆணையிட்டான்!
கோவலனைக் கொன்றுவிட்ட செய்திகேட்டுக் கண்ணகியோ
பூவொன்று பூகம்பம் ஆனதுபோல் ஆர்த்தெழுந்தாள்!
காவலன் ஆண்ட அரண்மனைக்குள் சென்றிருந்தாள்!
காவலனே என்பரல்கள மாணிக்கம் என்றுரைத்தாள்!
ஏளனமாய்க் காவலனோ தேவியது முத்தென்றான்!
ஆவேச மாகத்தான் தன்சிலம்பைப் போட்டுடைத்தாள்!
மாணிக்கம் மன்னவனைத் தீண்டியதும், அய்யகோ!
பாவிநான் நீதி தவறினேன் என்றுரைத்தே
சாவைத் தழுவினான்! கண்ணகியோ மூண்டெழுந்தாள்!
சூளுரைத்தே மாமதுரை ஊருக்கே தீவைத்தாள்!
வாழவந்தாள்! வாழ்விழந்தாள்! காவியமாய் மாறிவிட்டாள்!
காலத்தின் நீதி! வணங்கு.

நிகரற்ற கம்பன்!
-------------------------------
எடுத்தது கண்டனர்! இற்றது கேட்டார்!
அடுத்துநாண் பூட்டியதைப் பார்க்கவில்லை! ஆகா
இதுவன்றோ கம்பன் கவித்திறன்! தாயே
இதுவரை விஞ்சியவர் யார்?

நம்பவேண்டாம்!
----------------+-----------
பத்துபே ருக்குப் பகிர்வனுப்பி னாலுடனே
நற்செய்தி உங்களுக்கு வந்துசேரும் என்கின்றார்!
எப்படிச் சொன்னாலும் நம்புவோரும் உள்ளனர்!
நற்றமிழே! நம்பலாமா? சொல்.

பதுமைகள்!
-----------------------
இன்று சிறியவர்! நாளை பெரியவர்!
என்றிங்கே எப்படி யாராவார்? என்பதைக்
கண்முன்னே காலமோ காய்நகர்த்திக் காட்டிவிடும்!
அன்பே! பதுமைகள் நாம்.

அளவு மீறினால்?
-----------------------------------
காதிலே கைபேசி!கண்கள் கணினியில்
மோதிமோதி பார்த்திருக்கும் கோலத்தில்  வீடிங்கே!
மேதினியில் இக்கோலம் என்றுதான் மாறுமோ?
காதுக்கும் கண்களுக்கும் கேடு.

Monday, August 24, 2015

இளவல் கெஜராஜ்

இளவல் கெஜராஜ்
இமயம்போல் உயர்க!
-----------------------------------
மருந்தில் தொடங்கி கலையின் நடிப்பில்
விருந்தளிக்கும் ஆற்றல் மிளிரும் நிலையில்
பெரும்புகழ் ஏந்தும் ரஜினிகாந்த் போற்றித்
தருகின்ற வாய்ப்பில் கபாலி படத்தில்
வருகின்றார் என்தம்பி தான்

விவேகம்!
----------------------
இருளைக் குறித்துப் புலம்புவதை விட்டே
இருளை அகற்ற மெழுகுவர்த்தி ஒன்றை
இருட்டறையில் ஏற்றி ஒளிகொடுக்கும் பண்பே
அருமை! விவேகம்! உணர்.

தமிழில்
மதுரை பாபாராஜ்

இன்பச் சுரங்கம்!
-----------------------------
கரத்தில் எடுத்தேன்! புரட்டி ரசித்தேன்!
புரட்டப் புரட்டப் புதுமை! புதுமை!
இரவு முடிந்து விடியலைக் கண்டேன்!
புரட்டிய புத்தகத்தைப் பார்த்தேன்! அறிவுச்
சுரங்கத்தை வாழ்த்தினேன்  நான்.

NONE CAN DESTROY IRON, BUT ITS
OWN RUST CAN.
LIKEWISE NONE CAN DESTROY A PERSON,
BUT  HIS  OWN MINDSET.

இரும்பை அழித்தல் மிகவும் கடினம்!
இரும்பின் துருவே இரும்பை அழிக்கும்!
ஒருவர் அழிதல் அவர்தம் மனத்தால்!
செருக்கே வாழ்வின் துரு.
------------------------------------------------
UPS AND DOWNS IN LIFE ARE VERY IMPORTANT
TO KEEP US GOING, BECAUSE A STRAIGHT LINE EVEN
IN AN E.C.G. MEANS WE ARE NOT ALIVE.

வாழ்வதற்கு வாழ்க்கையில் ஏற்றமும் தாக்கும்
தாழ்வுகளும் முக்கியம் ஆகும்! இதயத்தின்
நோய்காட்டும் எந்திரத்தில் நேர்கோடு காட்டினால்
நோயாளி இங்கே உயிருடன் இல்லையென்று
சாரமுடன் காட்டுவதைப் பார்.
--------------------------------------------------


THE SAME BOILING WATER THAT HARDENS THE EGG,
WILL SOFTEN THE POTATO!
IT DEPENDS UPON INDIVIDUALS REACTION TO STRESSFUL
CIRCUMSTANCES.

கொதிக்கின்ற நீராலே முட்டை கடினமாகும்!
அதேநீர் உருளைக் கிழங்கை மிருதுவாக்கும்!
அதேபோல வாழ்வில் உளைச்சலான நேரத்தில்
சேதமின்றி வாழ்வதும் சேதமுடன் வாழ்வதும்
தூதுவிடும் நம்வினைகள் தாம்.

தமிழில்
மதுரை பாபாராஜ்
------------

Sunday, August 23, 2015

நீதியின் உயிர்!
------------------------------
நடுநிலையைத் தள்ளி ஒருநிலையை நீதி
எடுத்தால், அநீதி மகிழ்ச்சியில் துள்ளும்!
கொடுமைகள் கைதட்டிப் பாடும்! திளைக்கும்!
நடுநிலையே நீதிக்(கு) உயிர்.

ஒன்று முதல் பத்து!
-----+-------------------------
ஒன்றாய் இருப்பதே ஒற்றுமை! வேற்றுமை
வந்தால் இரண்டாகி மூன்றாம் நபர்களின்
வஞ்சகத்தால் வம்பாக மாறியே நாலாகி
ஐந்தாகி சண்டையால். காயத்தால் ரத்தமோ
தன்பங்கில் ஆறாக ஏழுபேர்  கூட்டமாக
நின்றே இணக்கத்தை எட்டுகூறாய் வெட்டிவிட
ஒன்பதில் கோபத்தை ஓடவிட்டால் பத்துவகைப்
பண்புகளைப் பந்தாடும் பார்.

கதிரவன்!
---------------------------------
கிழக்கில்  எழுந்தே  உலகை உசுப்பிப்
பரபரப் பாக்கியே அனைத்தும் இயங்க
சுழன்று கடமை முடித்துக் குடகில்
அலையுள் மறையும் கதிர்.


முதுமையின்
விளிம்பில்!
-----------------------------
நீயின்றி நானிங்கே! நானின்றி நீயிங்கே!
தூரிகை நீதானே! தாளாக நான்தானே!
ஓவியத்தைக் காண்பதற்கே ஏக்கத்தில் தத்தளிக்கும்!
யாரொருவர் வாழ்ந்தாலும் உள்ளத்தில் வாட்டந்தான்!
பாரிலே வாழ்வின் இயல்பு.


கொக்கரக்கோ சேவல் குளம்பியைக் கோப்பையிலே
அக்கறையாய் ஊற்றி உலகம் விடிந்தது
மக்களே இன்னுமா தூங்குகின்றீர் என்றிங்கே
சுட்டி உரைக்கிறது பார்.


பயன்படுதல் நன்று
--------------------------------
வாழை இலைகளும், காய்கள், பழங்களும்,
வாழையின் பூக்களும் தண்டும் அனைத்துமே
நாளும் பயன்படும் மக்களுக்கே! வாழைபோல்
வாழ்வில் பயன்படுவோம் நாம்.

Friday, August 21, 2015

உன்னை உணர்!
-------------------------------
மற்றவர்கள் செய்வதெல்லாம் தப்பென்றும் தான்செய்யும்
குற்றங்கள் கூட தவறில்லை என்றேதான் சொல்பவர்
சுட்டும் விரல்களில் மூன்றோ அவரைத்தான்
சுட்டிச் சிரித்திருக்கும் சொல்.

வளைந்து கொடு!
----------------------------
வாழ்வென்னும் பம்பரத்தை காலமென்னும் சாட்டைதான்
நாள்தோறும் சுற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறது!
தேள்கொட்டா? தேன்சொட்டா? காலம் உனக்களிக்கும்
கோலத்தை ஏற்கப் பழகு

இப்படித்தான் நாம்!
-------------------------------
வண்டி வரவில்லை என்றே முணுமுணுப்போம்!
வண்டிவந்தே ஏறி அமர்ந்து நகர்ந்ததும்
கொஞ்சதூரம் சென்றதும் எப்பொழுது ஊர்வருமோ
என்றே முணுமுணுப்போம் நாம்.

மனித இயல்பு!
--------------------- -----
தேவைக்கே அல்லாடும் நேரத்தில் மாந்தர்கள்
ஆவலுடன் ஆன்மிகத்தை நாடுவார்---தேவை
நிறைவேறி நிம்மதி வந்ததும் மக்கள்
இறைவனை ஒத்திவைப்பார் பார்.

தூண்டல்

தூண்டலும் துலங்கலும்!
-------------------------------+-----
பாடுபொருள் தேடிவந்து பாவெழுதத் தூண்டிவிட்டுப்
பாடுகின்ற தேனருவி ராகத்தில் மெய்மறந்தே
போடுகின்றேன் இங்கே முகநூல், இணையத்தில்!
பாடுபொருள் துள்ளிவரும் பா.

வட்டரங்கம்!
(சர்க்கஸ்)
----------  ----------------------
சாலையைப் போடுவார்! நன்றாகக் காய்வதற்குள்
சாலையைத் தோண்டுவார்! மீண்டுமிங்கே மூடமாட்டார்!
சாலையில் வண்டிகள், மக்கள் படும்பாடோ
நாள்தோறும் சர்க்கஸ்தான் பார்.

ஓய்ந்துவிட்டால்!
-------------------------------
காற்றுள்ள மட்டும் பலூனுக்கும் வாழ்வுண்டு!
காற்றிறங்கிப் போனால் மதிப்பில்லை! --போற்றுவார்
வாழ்வில் நடமாட்டம் உள்ளவரை! ஓய்ந்துவிட்டால்
பாய்கூட பார்க்கும் நகைத்து.

Monday, August 17, 2015

அரபு நாட்டில் மாண்புமிகு
 பிரதமர் மோடி
அவர்களின் கருத்துச் சுருக்கம்!
    17.08.2015
--------------------------------------------------------
விற்பனைச் சந்தையல்ல இவ்வுலகில் இந்தியா!
அற்புத ஆற்றலுடன் ஆக்கபூர்வ சாதனைகள்
வெற்றிநடை போடும் உழைப்பால் உயர்ந்தநாடு!
ஒற்றுமையே நாட்டின் உயிர்.

மதுரை பாபாராஜ்

Sunday, August 16, 2015

குழந்தையிடம் செல்லாது!
----------------------------------------------------
நாட்டிலே மற்றவரை ஆட்டிப் படைத்திருப்பார்!
வீட்டிலே குழந்தை அவரை ஆட்டுவிக்கும்!
ஆட்டிப் படைக்கும்! ஆட மறுத்தாலோ
லூட்டிதான் தூள்பறக்கும் பார்

ஏனிப்படி?
---------------------------------
எதிர்க்கட்சி என்றால் எதிர்ப்பதே வேலை!
மதிமயங்கி ஆள்கின்ற கட்சியென்றால் நாளும்
துதிபாடி நிற்பதே வேலை! தமிழே!
நெறிபிறழும்  கட்சிவெறி ஏன்?

கண்கள்!
-----------------
அனைத்தையும் பார்த்திருக்கும்! நாமோ மதியால்
அணைகட்ட வேண்டும்! வடிகட்ட வேண்டும்!
துணைபோகும் தீயவற்றைப் பார்ப்பதற்கே. என்றால்
மனமெல்லாம் மாசாகும் பார்.

இவரா நண்பர்?
---------------------------------
இருந்தால் ஒருபேச்சு! இல்லையென்றால் இங்கே
ஒருபேச்சு பேசுவோரை நண்பராய் என்றும்
ஒருபோதும் ஏற்காதே! நேருக்கு நேராய்
சுருக்கென்று கேட்போரே மேல்.

Thursday, August 13, 2015

அடிமையாகாதே!
------------------------------------
உணர்ச்சிகள் இல்லை, உயிரோட்டம் இல்லை!
உணர்ச்சிகள் மட்டுமே வாழ்க்கையும் இல்லை!
உணர்ச்சி உனக்கடிமை! நீயடிமை யானால்
தினமும் உளைச்சல்தான் வாழ்வு.

வளர்கிறது நம் நாடு!
விடுதலை நாள்
      15.08.2015
------------------------- ---------
கழனி தொடங்கி கணினி வரைக்கும்
வளர்ச்சியில் சாதனை வெற்றிக் கொடியைத்
தளர்ச்சியின்றி நாட்டுகின்றார் இந்தியர்கள் எங்கும்!
வளர்கின்ற தாய்நாட்டைப் பார்.

மற்றநாட்டைப் போல வளர்ச்சியில் தொய்வுண்டு! பல்வேறு
சுற்றடுக்குக் காரணங்கள் அதற்குண்டு! செந்தமிழே!
தொட்டுத் தொடர்கின்ற சோதனையின் கொம்பொடித்து
வெற்றிநடை போடுகின்றோம் நாம்.

விடுதலைக்குப் பின்னே துறைதோறும் ஏற்றம்!
புதுமைப் பொலிவுடன் அருமைப் பணிகள்!
மிடுக்குடன் சொல்வோம் இந்தியன் என்றே!
அடுத்துநாம் வல்லரசு தான்.

மனமிருந்தால்
---------------------------------
நண்பரை இங்கே பகைவராக்கி வாழ்வதோ
என்றும் எளிதாகும்! ஆனால் பகைவரை
நண்பராக்கி வாழ்கின்ற பக்குவத்தைப் பெற்றுவிட்டால்
மண்ணில் மகான்தான் அவர்.

Monday, August 10, 2015

சட்டம் படும் பாடு!
-------------------------------
சட்டம் சரியில்லை என்பார் விபத்தென்றால்!
சட்டத்தைக் கொண்டுவந்தால் மீறிப் புறக்கணிப்பார்!
சட்டத்தைக் கேட்பதும் மீறி நடப்பதும்
மக்கள்தான் நாடே! திருத்து.

பாசம் கீழ்நோக்கும்!
-----------------------------+++-
பெற்றோரின் பாசம் அவர்தம் குழந்தைக்கே!
அக்குழந்தை பாசம் அவர்தம் குழந்தைக்கே!
இப்படித்தான் பாசமோ கீழ்நோக்கித் தான்போகும்!
இத்தரணி வாழ்வின் இயல்பு.

காட்சிகள்!
----------------------
வாழ்க்கை அமைதல், அமைந்தது நீடித்தல்,
தாழ்வில் துணிந்து நிமிர்தல்! உயர்வினில்
தாழ்ந்து பணிதல் தனிமனித வாழ்விலே
காலத்தின் காட்சிகள் காண்.

Sunday, August 09, 2015

போலிச்சிறகு
--------------------------
பொழுது புலரும்! விடியல். தெரியும்!
இழுபறி வாழ்க்கை இருளும் அகலும்!
செழுமை கிடைக்கும்! சிறகு முளைக்க
எழுந்தேன்!விழுந்தேன் ! கனவு.

இலக்கியப் புறா   இரவிச்சந்திரன்
இயற்கை எய்திவிட்டார்
    08.08.2015
-------------------------------------
மண்ணுலகில்
இருந்து
இலக்கியப் புறா
பறந்துவிட்டது!
விண்ணுலகில்
அய்யா
விஎன்சிடி
தோளில்
அமர்ந்து கொண்டது.

மதுரை பாபாராஜ்

Saturday, August 08, 2015

சக்கை!
-------------------------------
வருமானம் உள்ளவரை நாம்தானே ராஜா!
வருமானம் இல்லையா? எல்லோர்க்கும் கூஜா!
துரும்புடனும் பண்ணவேண்டும் நாமிங்கு தாஜா!
கரும்பின்று சக்கைதான் காண்.

தேவைக்குச் செலவழி!
---------------------------------- ---
பணம்தான் இருக்கிறதே என்றேதான் நாளும்
மனம்போன போக்கில் செலவுகள் செய்தால்
பணம்போகும் வேகத்தில் சென்றுவிடும் செல்வம் !
மனத்தை அடக்கப் பழகு.

சக்கை!
-------------------------------
வருமானம் உள்ளவரை நாம்தானே ராஜா!
வருமானம் இல்லையா? எல்லோர்க்கும் கூஜா!
துரும்புடனும் பண்ணவேண்டும் நாமிங்கு தாஜா!
கரும்பின்று சக்கைதான் காண்.

Thursday, August 06, 2015

ஏழு
------------------------------
ஏழேழு சீரில் திருக்குறளின் உட்பொருள்கள்
ஏழுகடல் ஆழத்தை விஞ்சிநிற்கும்! மக்களோ
ஏழு பிறவி எடுத்தாலும் போதாது!
ஏழுலகும் போற்றும் வியந்து.

கற்கை நன்றே
-----------------------------
கற்பதற்கு முன்வந்தால் வாய்ப்புகள் ஏராளம்
அற்புதமாய் உள்ளன! மாணவச் செல்வங்கள்
கற்றுத் தெளிந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற்றம்
ஒட்டி உறவாடும் சொல்

Tuesday, August 04, 2015

வான்கவியரங்கம்!
-----+------------------------
வானத்தை மேடையாக்கி மேகக் கவிஞர்கள்
கானமழை தன்னைக் கவியரங்கப் பாக்களாக்கி
வானிடியோ கைதட்ட மின்னல் ரசித்திருக்க
ஆவலுடன் பாடுகின்றார் பார்.

முரண்!
--------------
குடித்தால் குடியைக் கெடுக்கும்! சரிதான்!
குடிக்காதே என்றால் அடிஉதை!தாயே!
குடிப்பதற்கு வாய்ப்பளிக்க பாதுகாப்பு! இங்கே
குடிப்பதற்குத் தூண்டலாமா? கூறு.

தமிழ் எங்கே?
-------------------------
ஊடகத்தில் இல்லையே! பள்ளிகளில் இல்லையே!
வீடுகளில் இல்லையே! வீதிகளில் இல்லையே!
ஏடுகளில் இல்லையே! உன்னால் வளர்ந்தவர்கள்
போடுகின்றார் தாழ்ப்பாள் உனக்கு.

Monday, August 03, 2015

மின்னுவது
பொன்னல்ல!
---------------+--------------
பொன்னை,பொருளை, அழகை எடைபோட்டு
நம்மை மதிப்பவரை நம்பாதே! நல்லொழுக்கப்
பண்புகளை வைத்து மதித்துப் பழகுவோரை
நம்பினால் நிம்மதிதான் வாழ்வு.

காண்பது பொய்!
-----------------------------
இக்கரைக்கு அக்கரை பச்சையாகக் காட்சிதரும்!
அக்கரைக்குச் சென்றால் சகதி நிறைந்திருக்கும்!
இப்படித்தான் வாழ்விலும் ஏமாற்றும் தோற்றங்கள்!
சற்றும் மயங்காதே பார்த்து.

மௌனராகம்!
---------------------------
வீடுகளில் தோன்றுகின்ற சிக்கல் வடிவங்கள்
பாடுபொருள் ஆகித்தான் பாதிக்கும்--பாடுபொருள்
பாதிப்பைச் சூழ்நிலையால் சொல்ல முடியாமல்
கோதிவிட்டுத் தத்தளிப்பார் சொல்.

Saturday, August 01, 2015

கொடுமை!
---------------------
குடிகுடி என்று குடிக்கின்றான் தந்தை!
பசிபசி என்றே அழுகிறது பிள்ளை!
துடிதுடி என்று துடிக்கின்றாள் தாய்தான்!
குடியின் கொடுமையைப் பார்.

இந்திய சிற்பிகள்!
-----------------------------------
இன்றைய மாணவர்கள் நாளை தலைவர்கள்
என்ற அடிப்படையில் அப்துல் கலாமிங்கே
பண்புகளைக் கற்றுத் தெளியவைக்கப் பாடுபட்டார்!
அண்ணலின் ஆற்றலைப் பார்.

அலைகள் ஓய்வதில்லை!
---------------------------------+
தாய்தந்தை தங்கள் அருகில் இருக்கவேண்டும்!
சேய்கள் விரும்புகின்ற காட்சிகள்!--தாய்தந்தை
சேய்களுக் காகத்தான் நாளும் உழைக்கின்றோம்!
சேய்கள் எதிர்பார்ப்பும் தாய்தந்தை வாதமும்
ஓய்வில்லா பேரலைகள் தாம்.

இறவாத வரலாறு
அப்துல்கலாம்
தீவு ---- தீபகற்பம்
-----------------------------
பிறந்தது தீவில்! வளர்ந்தது வாழ்வில்!
சிறந்து சிகரத்தைத் தீபகற்ப நாட்டில்
அடடா தொட்டுத் துலங்கி மறைந்து
பிறந்த இடத்திலே விதையானாய் மீண்டும் !
இறவா வரலாறே நீ.