Saturday, November 19, 2011

தாயும் மெழுகுவர்த்தியும்!

=============================
எரியும் மெழுகுவர்த்தி கூட திரியை
எரித்தால் ஒளிரும்! உருகும்! -- உயிரைக்
கரைத்துத் திரியாகி தூண்டலின்றி, தாயோ
கரைவாள் தியாகத்தில் காண்.

ஏங்கும் வைகைதான் நான்!

=========================
நதிகள் அனைத்தும் கடலில் கலக்கும்!
நதிகளில் நானோ வைகை நதிதான்!
நதியாய் இருந்தும் கடலில் கலக்கும்
கதியைப் பெறவில்லை! தாயே! அதனால்
மடிதேடும் குழந்தையைப் போல நகரில்
நதியாக ஊர்ந்து வருகின்றேன்! தண்ணீர்
அடித்து வரும்போது ஊரும் தழைக்கும்!
மகிழ்வார் ! மனதார வாழ்த்துவார் மக்கள்!
கசிந்துருகிக் கண்மாயில் சேர்ந்திடுவேன் நானும்!
சகித்துக் கலந்தேதான் மேனி குளிர்வேன்!
வடிந்திருப்பேன் த்ண்ணீர் வறண்டதும்! ஏக்கப்
பிடியில் நகர்கிறது வாழ்வு.

Sunday, November 13, 2011

கடலை நாடும் நதி

=====================
வாழ்க்கை நதியோ வழக்கமாகப் போவதுபோல்
நீரோட்டம் செல்லும் திசையெல்லாம் சென்றது!
வாழ்வில் துணைநதி வந்ததும் அர்த்தமுடன்
நீரோட்டம் ஓடியது! காலம் கிளைகளைச்
சேர்த்தது! நீரும் திசைமாறித் துள்ளியது!
சீராகச் சென்றநதி தங்குதடை கொண்டுவந்த
பாரத்தைத் தாங்கித்தான் தள்ளாடி சோர்ந்தது!
காலமே! மூலநதி மற்றும் துணைநதியை
ஆவலுடன் என்று கடலில் கலக்கவைப்பாய்?
ஊரறிய சொல்வாயா நீ?

பற்றுவைக்காதே!

===========================
எல்லையற்ற பற்றுவைத்தால் என்றென்றும் வாழ்க்கையில்
தொல்லைதான் ஊற்றெடுக்கும்! தாமரையும் நீரும்போல்
தெள்ளத் தெளிவாக ஒட்டியும் ஒட்டாமல்
உள்ளவரைத் தொல்லையில்லை இங்கு.

Sunday, November 06, 2011

பலியாடு!

------------------------------
குழந்தைகள் ஒன்றானால் என்ன?கணக்கில்
இரண்டானால் என்ன? தனித்தனி வாழ்வில்
பிரிந்திடும் போது மன்ப்போக்கின் ஓட்டம்
அளித்திடும் வேகம் விவேகம் இரண்டின்
நெளிவும் சுழிவுந்தான் பெற்றோரைக் காக்கும்!
சரியற்ற இல்லறக் கூட்டணி வாய்த்தால்
பலியாடு பெற்றோர்தான் பார்.

என்னசொல்ல?

மருகி மருகி உருகி உருகி
சருகு சருகாய் எரிந்து எரிந்து
கருகிக் கருகி சரிந்து சரிந்து
விரக்தியில் செல்கிறது வாழ்வு.

உரிக்கும் வெங்காயம்!

=========================
விழிகள் விளக்குகின்ற வேதனைத் தூதின்
மொழிகள் புரிந்தும் புரியாத ஏக்கம்
வழிந்தோடும் வாழ்வின் பொருள்தான் என்ன?
உரிக்கின்ற வெங்காயந் தான்.

யார்தந்த போதனை?

========================
ஆர்ப்பரிக்கும் வேதனை! அன்றாடம் சோதனை!
யார்தந்த போதனை?நாட்டிலே ஒற்றுமை
வேரிழந்து நிற்கிறது! வாழ்ந்திடுமா ? வீழ்ந்திடுமா?
பார்நகைக்க வேண்டுமா?சொல்.

வளையக் கற்றுக்கொள்!

============================
மற்றவரை நாமோ வளைக்க முடியாது!
உற்றவளே என்றாலும் நாம்தான் வளையவேண்டும்!
கற்றதெல்லாம் காற்றில் சருகாய்ப் பறந்துவிடும்!
பற்றைக் களைதல் அறிவு.

எவர்மீதும் பற்று வலைவீசி வாழும்
தவறைத் தவிர்த்தலே நன்று -- வலையுன்னைச்
சுற்றி வளைத்துவிடும்! தத்தளித்துச் சிக்கவைகும்!
பற்றற்று வாழப் பழகு.

திருந்தா மனிதர்கள்!

இவர்மீது கோபம்! அவர்மீது கோபம்!
கலகங்கள் மூட்டும் கலவரத்தைத் தேக்கி
சுவரெழுப்பி வாழும் துயரமான வாழ்க்கை!
இவர்கள் திருந்துவாரா?சொல்.