Wednesday, November 26, 2008

விலங்கா? மனிதனா?

ஒருபிடி மண்ணுக் குள்ளே
உருத்தெரி யாமல் போகும்
ஒருநிலை இருக்கும் வாழ்வில்
ஓரடி மண்ணுக் காக
செருக்களம் அமைத்துக் கொண்டு
செங்கதிர் சாய்தல் போல
உருளுது தலைகள் இங்கே!
உருப்பட வழிதா னுண்டோ ?

உயிர்களை மதிக்கும் போக்கு
உலகினில் வளர வேண்டும்!
வயல்களில் பதரை நீக்கும்
வகையினில் உயிரைப் போக்கும்
கயவரின் செயலைச் சாடக்
கணைஎனச் சீற வேண்டும்!
முயற்சிகள் முடுக்கப் பட்டு
முனைப்புடன் அமைதி காப்போம்!

அறிவுடன் சிந்திக் காமல்
அடர்வன விலங்கைப் போல
நெறிகளை மிதித்துத் தாண்டி
நினைவினில் காழ்ப்பைத் தேக்கி
வெறியுடன் அலையும் மாந்தர்
வேகமாய் அழிந்தே போவார்!
முறிந்திடும் கிளையைப் போல
முடிந்திடும் இவர்கள் வாழ்வு.

--- மதுரை பாபாராஜ்
1989

வாழ்க்கைக் கணக்கு

கூட்டல்
=========
கருவறைக் கூட்டை விட்டே
கலையெழில் குழந்தை யாக
தரணியில் தவழ்ந்தே ஆடித்
தனித்தனி நிலைகள் கண்டு
சுரந்திடும் பண்பில் ஊறிச்
சுளைக்கனி யாகப் பெற்றோர்
கரங்களுக் குள்ளே வாழ்தல்
காவியக் கூட்டல் என்பேன்!

கழித்தல்!
============
உரியநற் பருவந் தன்னில்
உரியவன் ஒருவ னுக்கே
உரியவ ளாக மாறி
உலகமே அவன்தா னென்ற
ஒருநிலை எடுக்கும் போதோ
உறவிழை பெற்றோர் கூட
வரிசையில் இறுதி யாகும்
வாழ்நிலை கழித்த லாகும்!

பெருக்கல்
============
தனக்கெனக் குடும்பம் கண்டு
தனிவழி நடக்கும் போது
கனிநிகர் மழலைச் செல்வம்
கரங்களில் புரளும் காட்சி
மனத்தினை மயங்கச் செய்யும்!
மனங்கவர் கணவ னோடு
மனையினில் சுற்றம் சூழ
மகிழ்வது பெருக்க லாகும்!

வகுத்தல்
==========
உழைத்ததை எல்லாம் வைத்து
உருப்படி யான வாழ்வைப்
பிழைகளின் நிழலே இன்றிப்
பெற்றவர் வகுத்துத் தந்து
நிழலினை நாடும் போது
நிற்பவர் அவர்கள் தாமே!
வழிவழித் தொடரும் இந்த
வகுத்தலே வரலா றாகும்.

மதுரை பாபாராஜ்
1989

ட்ராய் நகர் ஹெலன்

எழில்சிந்தும் இம்முகமா வேகங்கொண்டு
எண்ணற்றக் கப்பல்கள் படையெடுத்து
இலியத்தின் விண்முட்டும் மாளிகைகள்
எரிந்துவிழக் காரணமாய் இருந்ததன்று?
பொலிவூட்டும் ஓவியமே!ஹெலேனே!எந்தன்
புத்துயிரோ நிலைப்பதற்கு முத்தம் சிந்து!
சிலிர்ப்பூட்டும் அவளிதழ்கள் அந்தோ! எந்தன்
செந்தேனாம் உயிர்தன்னை உறிஞ்சு தம்மா!

பாரம்மா! அதுவெங்கே பறக்கு தென்று?
பைங்கிளியே! ஹெலேனேநீ வாராய்!வாராய்!
சீரசையும் கவியமுதே !மீண்டும் எந்தன்
சீரான உயிர்தன்னைத் தாராய் ! தாராய்!
தாரணியில் நானிங்கே வாழ்வேனம்மா !
தளிர்க்கொடியுன் இதழ்களிலே நானோ இன்பத்
தேரசையும் சொர்க்கத்தை உணருகின்றேன்!
சேயிழையே!வேறொன்றும் எனக்கு வேண்டாம்!

(TRANSLATION OF CHRISTOPHER MARLOW POEM)

--- மதுரை பாபாராஜ்
1985

Tuesday, November 25, 2008

துடிப்பு

கடந்ததே ஒருநாள் என்றே
களிப்பினில் இருந்த வேளை
நடந்திட மறுநாள் இங்கே
நடையினில் நிற்கக் கண்டேன்!
அடைத்தது துன்பம் நெஞ்சை!
அழுதன எந்தன் கண்கள்!
குடைந்தது களைத்த மேனி !
கொடிஎனத் துவண்டே போனேன்!

துயிலினை மறந்து விட்டுத்
துடிப்புடன் உழைத்த போதும்
வயிற்றினில் தீயைத் தேய்க்கும்
வன்பசி தன்னைத் தீர்க்கும்
முயற்சியை எடுக்கக் கூட
முடிந்திட வில்லை அம்மா!
துயரினை எண்ணும் போது
துடிப்பினில் இதயம் துள்ளும்!

பணத்துடன் ஒருவன் மேய்வான் !
பசியுடன் ஒருவன் காய்வான்!
குணமெனும் சோலை நாடும்
குயிலினைக் குரங்கே என்பான்!
தினவெடுத் தாடும் தீமை
தெளித்திடும் சேற்றில் நீந்தும்
கணைமனப் பேடி தன்னை
கடவுளின் பிறவி என்பான்!

-- மதுரை பாபாராஜ்
1989

மனித இனம் இருக்குமா?

வல்லரசு நாடுகளின் கையில் சிக்கி
வதைபட்டுத் துடிக்கிறதே அமைதி இங்கே !
கொல்லவரும் புலிகூட கருணை கொண்டு
கொல்லாமல் போனாலும் போகக் கூடும்!
நல்லாட்சி நம்மாட்சி ஏழை நாடு
நல்வாழ்வைக் காண்பதற்கே முயல்வோம் என்று
சொல்லாட்சி அரங்கேற்றும் செயல்கள் எல்லாம்
சுடுநேருப்பாய் இருக்குமெனில் அமைதி உண்டோ?

அணுகுண்டுப் போர்க்களங்கள் அமைந்து விட்டால்
அழிந்துவிடும் உயிரினங்கள் சுவடே இன்றி!
அணுவணுவாய் நாகரிகம் வளர்ந்து வந்தே
அச்சாணி யாகத்தான் பண்பில் ஊன்றி
குணக்குன்றில் ஏறுகின்ற நிலையை நாடிக்
குலவுகின்ற நேரத்தில் போட்டி போட்டு
பிணக்குவியல் மலைபோலக் குவியச் செய்யும்
பேரழிவுப் போர்முறையும் தேவை தானா?

உலவுகின்ற உயிரினங்கள் நோய்கள் இன்றி
உலகத்தில் வாழ்வதற்கு வழிகள் காணும்
நிலைதன்னை வல்லரசு நாடு மென்றால்
நிலையான புகழ்மகுடம் அணியக் கூடும்!
அலைபாயும் மனங்கொண்டு கயமை எண்ணம்
அணிவகுக்கும் அணுப்போரைத் தொடரு மென்றால்
கொலைவெறியின் நாயகர்கள் இவர்கள் என்றே
கூறுமடா மனிதஇனம் அன்றி ருந்தால்!

--- மதுரை பாபாராஜ்
1989

கவிக்கடல் பாரதி

எரிமலை அனலினை எங்கெனக் கேட்பதோ
இவனது கவிவரிகள்!
வரிப்புலி வாலினைச் சுருட்டிடும் இவனது
வரிகளின் சவுக்கடியில்!
தரித்திரம் வாழ்வினில் தாண்டவ மாடியும்
தளர்வினைக் கண்டதில்லை!
சரித்திரம் படைத்தவன் சரித்திர மாகியே
சாகா வரம்பெற்றான்!

உரித்ததும் கனிச்சுளை உருவினை இழந்திடும்
உள்ளமும் மறந்துவிடும்!
உரித்திட உரித்திட உயர்கவிச் சுளைகளில்
உள்ளமும் இணைந்துவிடும்!
பரங்கியர் சூழ்ந்தனர் ! இந்தியர் அடிமைப்
பாலையில் புரண்டனரே!
நெருஞ்சியாய் மாறியே பாரதி பரங்கியர்
நெஞ்சினைத் துளைத்துவிட்டான்!

விடுதலைக் கணக்கின் சூத்திரம் போட்டு
விடையினை எழுதியவன்!
அடுக்களைக் கைதியாய்ப் பெண்ணினம் துடிப்பதை
அணையிடக் கூறியவன்!
தடைகளை விதித்திடும் சாதி வெறியினைத்
தகர்த்திடக் கூவியவன்!
படைஎனக் கவியினம் பல்கியே பெருகிடப்
படைப்பினைத் தூவியவன்!

கவியலை பாரதி காவியக் கடலினில்
கணக்கிலா முத்திருக்கும்!
எவ்வகை முத்தினை எடுப்பது என்றுநம்
இதயமோ ஏங்கிவிடும்!
அவ்வகை ஏக்கமோ அகன்றிடும் முன்பே
ஆயுளும் முடிந்துவிடும்!
புதுக்கவி பாரதி ! புகழ்முடிப் பொன்மணி !
புதுமையின் பூபாளம்!

-- மதுரை பாபாராஜ்
1989

மேலோர்-கீழோர்

கல்லாத மாந்தர்கள் பரந்த நோக்கைக்
கனிவுடனே பெற்றிருந்தால் மேலோர் ஆவர்!
கல்வியிலே கரைகொண்டோர் சந்தேகத்தின்
கரம்பிடித்தால் என்றென்றும் கீழோர் ஆவர்!

-- மதுரை பாபாராஜ்
1985

Monday, November 24, 2008

மாமியார் மருமகள் சண்டை

வாழையடி வாழையாக வந்த விந்தை !
மாமியாரும் மருமகளும் போடும் சண்டை!
காளையரை இடையினிலே மாட்ட வைத்து
கமண்டலத்தை நாடவைக்கும் உரிமைச் சண்டை!
வேளையிது ! மருமகளாய் விளங்கி நிற்கும்
மங்கையரே! மாமியாராய் மாறும் அந்த
நாளையிலே புதுப்போக்கை ஏற்படுத்தி
நல்லமைதி உருவாகச் சூளுரைப்பீர்!

மதுரை பாபாராஜ்
1985

வளர்பிறை மனிதர்க்கில்லை

தேய்பிறைகள் வந்தாலும் நிலவே ! உன்றன்
தேகத்தில் வளர்பிறைதான் படர்ந்து நிற்கும்!
சேய்ப்பருவம் முதலாகப் பருவம் மாறும்
தேகத்தில் வளர்பிறைதான் என்ற போதும்
தேய்பிறைதான் வளர்பிறைகள் எங்க ளுக்கு!
தேய்ந்துவிடும் பருவங்கள் வளர்வ தில்லை!
தேய்பிறையும் வளர்பிறையும் மாறி மாறித்
தெரிவது உனக்குத்தான்! மனிதர்க் கில்லை!

-- மதுரை பாபாராஜ்

நல்ல பண்புகளைக் கடைப்பிடிப்போம்

அறத்தைச் சிந்தும் சொற்களையே
அகத்தில் ஏந்திச் சொல்லுங்கள்!
மறந்தும் துரோக மகுடிக்கு
மயங்க வேண்டாம் வெல்லுங்கள்!

பறக்கும் பொய்மை வல்லூறைப்
பாய்ந்து பிடித்தே திருத்துங்கள்!
சிறக்க வைக்கும் வாயமைக்குச்
சிரத்தைத் தாழ்த்தி நில்லுங்கள்!

அன்னை தந்தை ஆசானை
அகத்தில் வைத்துப் போற்றுங்கள்!
தன்னை வைத்து எடைபோடும்
தன்ன லத்தை மாற்றுங்கள்!

என்றும் இங்கே தமிழ்விளக்கை
இல்லந் தோறும் ஏற்றுங்கள்!
பொன்னும் மணியும் இன்பமென்று
போற்றும் மனதைத் தூற்றுங்கள்!

-- மதுரை பாபாராஜ்

காகிதமும் பளுவாகும்!

மால்கடலில் உருவாக்கும் அலைகள் போல
மலைபோலச் சிக்கல்கள் தோன்றித் தோன்றிச்
சூல்கொண்டு சுழன்றாடிக் கவ்வும் போது
சூழ்ந்தேதான் வேதனைகள் அணிவகுக்கும் !
கால்களுக்கு வலுவிருக்கும் இளமை நாளில்
காற்றுடனும் போர்புரிந்து துணிந்து நிற்போம்!
கால்களிங்கே தள்ளாடும் முதுமை நாளில்
காகிதமும் பளுவாகும்! கூனி நிற்போம்!

--- மதுரை பாபாராஜ்
1985

நூல்கண்டு!

நூல்கண்டாம் வாழ்வினிலே விழுந்த சிக்கல்
நுண்மையுடன் ஒவ்வொன்றாய்க் கழற்றும் போது
நூல்சிக்கிப் பலமுடிச்சு புதியதாக
நூதனமாய் மேலுமிங்கே விழுந்திருக்கும்!
நூல்கொண்ட சிக்கலினை முயற்சியோடு
நூலிழையை சோர்வின்றிக் கழற்றுகின்றோம் !
நூல்கண்டின் முடிச்சுகளைக் கழற்றும் போதே
நூலோடு வாழ்விங்கே முடிந்தே போகும்

Sunday, November 23, 2008

சாம்பல் மேடு

நச்செனும் காற்றின் மையம்!
நசுக்கிடும் நோயின் ஊற்று!
கொச்சைகள் கொஞ்சும் கோட்டை!
கொடுஞ்செயல் விடுக்கும் தூதன்!
இச்சையில் ஆடும் குரங்கு!
இன்மைய்யைக் காட்டும் கானல்!
வக்கிரம் துள்ளும் கூடு!
வம்பெனும் குப்பை மேடு!

வன்முறைப் பாம்பின் புற்று!
வஞ்சனைக் கோட்டான் கூடு!
நன்முறை உலவா மேடை!
நல்லதைக் காட்டா ஆடி!
புன்மைகள் சேரும் வீடு!
பொதுநலம் வெறுக்கும் ஓடு!
நன்மையைத் தடுக்கும் பாறை!
நேர்மையை அழிக்கும் சூறை!

தன்னலம் விரிந்த பாலை!
தன்குணம் மறைக்கும் மேகம்!
அன்பெனும் அனலின் மாயை!
அசைத்திடும் காழ்ப்பின் வித்து!
தன்னகம் கொண்டே ஆடித்
தவித்திடும் உடலே! நீயோ
என்னதான் துள்ளி னாலும்
இறுதியில் சாம்பல் மேடு!

மதுரை பாபாராஜ்
1985

என்செல்லம் இவள்தான்!

வேலென விழிகள் சொல்ல
வில்எனப் புருவம் சொல்ல
பாலெனப் பருவம் சொல்ல
பொய்யென இடையோ சொல்ல
நூலென உருவம் சொல்ல
நற்சுவை இதழ்கள் சொல்ல
பூவெனப் பெண்மை சொல்ல
பொலிவுடன் நின்றாள் பாவை!

அலையென நடையோ சொல்ல
அருவியை வளையல் சொல்ல
கலையென சிரிப்போ சொல்ல
காரெனக் கூந்தல் சொல்ல
மலைத்திடச் செய்யும் வண்ணம்
மனதினில் புகுந்து கொண்டு
நிலைத்தவள் பெயரைக் கேட்டால்
நிறைவுடன் கவிதை என்பேன்!

-- மதுரை பாபாராஜ்
1985

குழப்பம்

இலக்கியக் காட்சி கற்பனை

விரைந்தேதான் வருகின்ற தேரின் மீது
வினைமுடித்து வருகின்றான் நமது மன்னன்!
திரைமீது கயலாக என்றன் உள்ளம்
சேர்ந்தேதான் துள்ளுதடி! தோழி! தோழி!
கரைபுரண்ட வெள்ளம்போல் இன்பம் என்றன்
கரம்பிடித்துக் கூத்தாடும் நிலையடைந்தேன்!
வரையறுத்த மரபுகளை மீறிப் பெண்மை
வளைந்தாடும் கொடிபோலத் தவழு கின்றேன்!

தேர்போன்ற கலைசிந்தும் அழகு மங்கை
தேர்கண்டு தான்கொண்ட நிலையைத் தானும்
ஆர்வமுடன் தோழியிடம் பகிர்ந்து நின்றே
ஆசையுடன் இருந்தபோது அந்தத் தேரோ
நேர்வழியில் சென்றதுவே நிற்கவில்லை!
நேர்த்தியான தேர்மீது சென்ற மன்னன்
சோர்வுதந்த என்மன்னன் இல்லை தோழி!
சோகத்தின் நிழலாக மாறி விட்டேன்!

-- மதுரை பாபாராஜ் -- 1985

Saturday, November 22, 2008

ஏமாற்றம்

மீன்கொத்திப் பறவைகள் இரண்டைக் கண்டேன்!
மீன்பிடிக்கக் கடல்மீது போட்டிப் போட்டு
நான்முந்தி நீமுந்தி என்ற வாறு
நாவிற்குச் சுவைசேர்க்கப் பறந்த போது
மீனொன்று துள்ளியதும் பின்னால் வந்த
மீன்கொத்தி தான்கொத்திச் சென்ற தாலே
மீன்ஒன்றைத் தவறவிட்டு முன்னால் வந்த
மீன்கொத்தி ஏமாந்து சென்றதம்மா !

என்னவளின் கரம்பற்ற முயலும் போது
எங்கிருந்தோ வந்தவனோ அவள்கரத்தைத்
தன்கரத்தில் இணைத்துநின்று என்னை நோக்கித்
தமிழ்வாழ்த்துக் கூறவேண்டும் என்றுரைத்தான்!
முன்வந்தும் ஏமாந்த பறவை போல
முயன்றிருந்தும் சூழ்நிலையின் கைதி யாகி
நின்றிருந்த நிலையெண்ணி மனதை மாற்றி
நெடும்பயணம் தொடர்ந்திருந்தேன் வேறு திக்கில்!

=== மதுரை பாபாராஜ்

மனிதன் என்றும் பொம்மை

மண்ணுலகில் பிறந்தவுடன் அன்னை தந்தை
மற்றவர்கள் எண்ணத்திற் கேற்றவாறு
பண்ணமைத்துப் பொன்னரும்பை ஆட்டுவிப்பார்!
பாலரும்புத் தேன்மழலை ஆடி நிற்கும்!
தண்ணிலவாய்த் தவழ்ந்துவரும் குழந்தை இந்தத்
தரணியிலே அனைவரது கைகளுக்குள்
வண்ணத்துப் பூச்சியாகத் தாவித் தாவி
வஞ்சனையே இல்லாத பொம்மையகும்!

அறிவுக்கண் தனைத்திறக்கும் கல்வி தன்னை
ஆர்வமுடன் கற்பதற்குப் பள்ளிக் கூட
அறைக்குள்ளே நுழைகின்ற பருவந் தன்னில்
ஆசிரியர் புகட்டுகின்ற நெறிகள் தம்மை
முறையுடனே மனத்தினிலே பதிய வைத்து
முழுக்கல்வி ஏற்கின்றான்! ஆசான் காட்டும்
நிறைவான பாதையிலே நடக்கும் போது
நித்தமுந்தான் அறிவார்ந்த பொம்மை யாவான்!

இல்லறத்தின் மணிவிளக்கை ஏற்று கின்ற
எழுச்சிமிகு மணவாழ்வில் அடியெடுத்து
நல்லறத்தை நாடுகின்ற உள்ளத் தோடு
நடைபயிலும் பருவத்தில் மனைவி மற்றும்
பலவண்ணச் சுற்றத்தார் எல்லோ ருக்கும்
பாரினிலே நல்லவனாய் இருப்பதர்ற்குப்
பலநிலையில் பலவேடம் ஏந்தும்போது
பரிதாபக் கோலத்தில் பொம்மை யாவான்!

கனியிருப்பக் காய்களையும் அவ்வப் போது
கனிகளையும் சுவைத்துவிட்டுத் தளரும் நேரம்
கனிந்துவரும் முதுமைக்கே அடிமை யாவான்!
கடமைகள் முடிந்ததென ஓய்வை நாடி
இனிமைக்குத் தூதுவிட்டுத் துள்ளும் போதோ
ஈன்றெடுத்தக் குழந்தைகள் திசைக்கொன் றாக
மனம்போன போக்கினிலே பொம்மை யாக்கி
மகிழ்ந்திருக்க மனிதனென்றும் பொம்மை தானே!

நல்லதைப் போற்று

நீரையும் பாலையும் அன்னம் பிரித்தெடுக்கும்!
வேர்ப்பகை கொண்டாலும் நற்பண்பை -- ஆர்த்தெழும்
தீயபண்பைக் கண்டுணர்ந்தே நற்பண்பைப் பாராட்டும்
நேயத்தைக் கற்கவேண்டும் சொல்.

நிலவின் கோலங்கள் l

ஓரிரவின் தனிமையது! உயிரினங்கள்
ஓய்ந்துவிட்ட நேரமது! அந்த நேரம்
பாரினிலே காதலுக்கு அடிமை யாகி
பாடுகுயில் இரண்டங்கு மயக்கத் தோடு
பேரழகுப் பூவிதழில் வண்டைப் போல
பேரின்பக் களிப்பினிலே மூழ்கி நின்றார்!
ஓரமுதக் காவியத்தைப் படைத்தி ருந்தார்!
ஒளிநிலவோ ரசித்திருந்த கோலம் கண்டார்!

ஓரிரவின் தனிமையது! உயிரினங்கள்
ஓய்ந்துவிட்ட நேரமது! அந்த நேரம்
சேரியிலே குடிசைக்குள் முனகல் ஓசை
"சோறுபோடு பசிக்கிறதே" என்று கேட்டு
நேரிழையாள் தோளினிலே குழந்தை ஒன்று
நெடுநேரம் தேம்பியது! வறுமை தன்னை
வாரித்தான் அணைத்திருந்தார்! நிலவோ வானில்
வாட்டமுடன் ஒளியிழந்த கோலம் கண்டார்!

ஓரிரவின் தனிமையது! உயிரினங்கள்
ஓய்ந்துவிட்ட நேரமது! அந்த நேரம்
வேரிழந்த மரம்போல ஆடி நின்று
விழுந்திருந்தான் நடுத்தெருவில் போதை என்னும்
பேரிடிக்கு பலியானான் அந்தப் பேடி!
பெற்றவளின் வயிறெரிய ஊர்சி ரிக்க
ஓரிடத்தில் படுத்திருந்தான்! நிலவோ வானில்
ஒட்டாமல் தள்ளாடும் கோலம் கண்டான்!

தனிமை குடைந்தெடுக்கும்

ஆத்திரத்தைக் கோபத்தைக் கொண்டாட்டம் போடவிட்டால்
சீற்றம் தினவெடுக்க நாள்தோறும் -- ஏற்றம்
தடைபட சுற்றம் விலக்கத் தனிமை
குடைந்தெடுக்கும் வாழ்வில் உணர்.

Tuesday, November 18, 2008

தமிழ்தனை மறப்பவன் தமிழனா?

மூவேந்தர் முத்தமிழைக் காத்து நின்ற
முற்காலம் சங்ககாலம் பொற்கா லந்தான்!
பாவேந்தர் பேரவையில் ஆய்ந்து ஆய்ந்து
பைந்தமிழை வளர்த்ததுவும் பொற்கா லந்தான்!

களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலக்
கணக்கினிலே சேர்க்கிறது வரலா றிங்கே!
களங்கண்டு தமிழ்மொழிதான் அதனை மீறிக்
காலத்தை வென்றேதான் நிமிர்ந்த திங்கே!

எண்ணற்ற மொழிகளிங்கே கலந்த போதும்
இமைக்காமல் விழிப்புணர்வு கொண்ட தாலே
செந்தமிழின் தனித்தன்மை அழிய வில்லை!
சித்திரத்தைச் சீரழிக்க முடிய வில்லை!

இருந்தாலும் இன்றுள்ள நிலையைப் பார்த்தால்
இதயத்தில் வேல்பாய்ச்சும் கோலங் கண்டேன்!
அருந்தமிழர் வீடுகளில் ஆங்கி லத்தின்
ஆதிக்கம் வேரூன்றும் காட்சி கண்டேன்!

தமிழர்கள் தமிழ்நாட்டில் தத்தம் வீட்டில்
தமிழ்மொழியைப் பேசவுந்தான் தயங்கு கின்றார்!
தமிழ்மொழிக்கே இத்தகைய சாபக் கேடு!
தமிழர்கள் உள்ளத்தில் அடிமைக் கோடு!

தமிழ்மொழியே உயிரென்று சொன்ன வர்கள்
தடம்புரண்டுத் தடுமாறும் போக்கை ஏற்றார் !
அமுதமொழி அரசியலின் வியூகத் திற்கே
அன்றாடம் பொருளாகும் அவலம் கண்டேன்!

அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள்
அவரவரின் தாய்மொழியில் பேசு கின்றார்!
சொந்தமொழி தமிழ்மொழியை தமிழர் பேச
துவள்கின்றார்! மயங்குகின்றார்! தயங்கு கின்றார்!

தாய்நாட்டை மறப்பவர்கள் மக்க ளில்லை!
தாய்வீட்டை மறப்பவர்கள் உயர்வ தில்லை!
தாய்தன்னை மறப்பவர்கள் மனித ரில்லை!
தாய்த்தமிழை மறப்பவர்கள் தமிழ ரில்லை!

Sunday, November 16, 2008

சாப்ட்வேர் பெற்றோரின் மழலைக்கு தாலாட்டு!

(ஏடுகளில் வந்த கருத்துக்களே அடிப்படை)

அப்பா வர நேரமாகும் !
அம்மா வர நேரமாகும்!
எப்படியோ கண்ணுறங்கு!
ஏக்கமுடன் கண்ணுறங்கு!

ஆன்கால்லே பேசணுமாம்!
டெலிவரிதான் பண்ணனுமாம்!
பிரசென்டேசன் கொடுக்கணுமாம்!
மீட்டிங்வேற போகணுமாம்!

வம்புதும்பு பண்ணாம
வக்கனையா கண்ணுறங்கு!

வெளிநாட்டுக் கேத்தாப்புல
வெறியோட உழைக்கணுமாம்!
இராப்பகலா உழைக்கணுமாம் !
இடுப்பொடிய உழைக்கணுமாம் !

ஆர்ப்பாட்டம் பண்ணாம
அய்யாநீ கண்ணுறங்கு!

வாரத்துல அஞ்சுநாளு
மலைக்காம வேலைசெஞ்சா
வாரத்துல ரெண்டுநாளு
விடுமுறையில் இருப்பாங்க!

செல்லக்குட்டி கண்ணுறங்கு!
சிணுங்காம கண்ணுறங்கு!

சனிக்கிழமை ஞாயிற்றுகிழமை
செல்லக்குட்டி உன்கூட
அம்மா அப்பா இருப்பாங்க !
ரெண்டுநாளும் ஜாலிஜாலி!

அதெநெநெச்சே தூங்கவேணும்!
அதெநெநெச்சே முழிக்கவேணும்!

எரிச்சலைத் தூண்டும் நிகழ்வுகள்

கால்வலிக்க நாமோ வரிசையில் நின்றிருப்போம்!
பார்த்தும் ஒருவர் இடையிலே -- ஊர்ந்தே
நுழைந்திடுவார்! முன்செல்ல எத்தனிப்பார்! நிற்போர்
மாலைப்பார் எரிச்சலில் தான்.

பேருந்தில் நிற்க இடமிருந்தும் நம்மருகில்
காலுரச ஒட்டி உறவாடும் -- பேருந்து
நண்பரின் இந்தச் செயலோ விதைப்பது
கண்முன் எரிச்சல்தான்! காண்.

தண்ணீரோ தேங்கிநிற்கும்! நாம்தவிர்த்துச் சென்றிடுவோம்!
வண்டிகளை ஓட்டுபவர் வேகமாக -- தண்ணீரில்
ஓட்டியே சென்றிடுவார்! நம் ஆடை நாசமாகும்!
வாட்டும் எரிச்சல் தான்.

தொலைப்பேசி செய்தால் எடுக்கவே மாட்டார்!
அலைந்தாலோ ரெண்டுநாள் என்பார்-- அலைந்ததுதான்
மிச்சம்! சிலிண்டெர் வராது! வருவதற்குள்
உச்சம் எரிச்சல்தான் சொல்.

குடும்பஅட்டை வாங்க அலுவலகம் சென்றால்
வெடுக்கென்று சீறி விழுவார்! -- நடுத்தெருவில்
நாயகராய் நாளும் அலைந்தாலும் என்றுவரும்?
பாவம் எரிச்சல்தான் பார்.

பள்ளியின் பேருந்தில் தேன்மழலை உட்கார
எள்ளளவும் சீட்டில் இடமில்லை -- பள்ளியில்
கேட்டாலோ வேறுபள்ளி போஎன்பார்! சோதனை
ஊற்றும் எரிச்சல்தான் கூறு.

Wednesday, November 12, 2008

யார்?

தனியார் மருத்துவம் மக்களுக்கோ எட்டாக்
கனியாக உள்ள நிலையைத் -- துணிவுடன்
மாற்றி அனைவருக்கும் இங்கே கிடைப்பதற்கு
ஏற்றவாறு செய்பவர் யார்?

விலைவாசி நாளும் மலைபோல் உயரும்
நிலையைத் தடுத்து நிறுத்தி -- விலைகள்
நியாயமான போக்கில் நிலைகொள்ளச் செய்யும்
நியாயத்தை மேற்கொள்வோர் யார்?

நிர்வாகச் சீர்கேட்டை மாற்றி அமைத்தேதான்
நிர்வாகம் ஊழலே இல்லாமல் -- வல்லமை
கொண்டே கடமை உணர்வுடன் மேம்பட
முன்வரும் உத்தமர் யார்?

பதவி வெறிபிடித்து கொள்கையைத் தூக்கி
உதறி எறிவதை நாளும் -- நடக்கவைத்துப்
பார்க்கும் அரசியலைத் தன்னல மற்றதாய்த்
தூய்மைப் படுத்துபவர் யார்?

எங்கேயும் எப்பொழுதும் நாட்டில் வெடிகுண்டு
தங்குதடை இன்றி வெடிக்கலாம் -- என்ற
நிலைதன்னை மாற்றி அமைதியாய் வாழும்
நிலைகாண வைப்பவர் யார்?

வெள்ளைப் புறாவின் உடலில் இரத்தப்
புள்ளிகள் அங்கங்கே தென்பட -- வெள்ளமாய்க்
கண்ணீர் பெருக்கெடுக்க இந்தியத்தாய் விம்முகின்றாள்!
இந்தநிலை மாற்றுவது யார்?

Sunday, November 09, 2008

விலங்காய் மாறாதே

தாக்கிப் பழகுதல் காட்டு விலங்கினத்தின்
கூற்றுநிகர் வக்கிரத்தின் சீற்றந்தான் -- சீற்றமின்றித்
தாங்கிப் பொறுத்தல் தனிமனித ஆற்றல்தான்!
தாங்கினால் தாழ்வில்லை! சாற்று.

உட்பகையை விரட்டு

அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை!
கொடுத்த பிறவியில் வாழ்வைக் -- கடும்புயலாய்
மாற்றுவதும் தென்றலாய் மாற்றுவதும் உள்ளத்தில்
ஊற்றெடுக்கும் உட்பகைதான்! கூறு.

Saturday, November 08, 2008

கொடுங்கோல் ஆட்சி

உடுக்க உடையும் இருக்க இடமும்
படுத்தும் ஒருஜான் வயிற்றுக் குணவும்
கொடுக்காத ஆட்சி கொடுமையான ஆட்சி!
கடும்புயலில் கப்பல்தான் பார்.

Thursday, November 06, 2008

வாழ்க்கை வளையம்

தெருவில் திரிகின்ற நாய்கள் வந்து
தெரியாமல் நம்மைக் கடிக்கும் -- தெருநாயில்
எந்தநாய் இங்கே வெறிநாய் ? புரியாது!
அஞ்சித்தான் ஓடுவோம்! பார்.

வட்டமிட்டு மொய்க்கின்ற வண்டொன்று தேடிவந்து
கொட்டிவிடும்! வேதனையோ ஊற்றெடுக்க -- கொட்டும்
வலியில் துடிப்போம்! எப்பக்கம் இந்தக்
கலிவந்து கொட்டியது ? சொல்.

குளவியோ வீட்டுக்குள் சுற்றிப் பறந்து
தலைமீது கொட்ட முனையும் -- நிலைகுலைந்தே
அந்தக் குளவியை விரட்டினாலும் கொட்டிவிடும்!
நொந்து புலம்புவோம் நாம்.

பறந்திருக்கும் காகம் திடீரென்று வந்தே
நடந்துசெல்லும் நம்மைத் தலையில் -- சடக்கென்றே
ஓங்கி அடித்துவிட்டுச் சென்றுவிடும்! யாரைத்தான்
நாமிங்கே நோவது? சொல்.

தேங்கிய நீரில் திளைக்கும் கொசுவினங்கள்
தூங்குகின்ற நேரத்தில் கூட்டமாக -- வான்வழி
வந்தே தடையின்றித் தாக்கிக் கடித்திருக்கும் !
ஏங்குவோம்! தூங்கமாட்டோம் ! இங்கு.

தரையில் படுத்தால் கரப்பான், எறும்பு
வரிசையாய்ப் பூச்சிகள் ஊர்ந்தே -- களித்திருக்கும்!
கண்கள் உறவாடும் தூக்கமின்றி நாள்தோறும்
இங்கே புரண்டிருப்போம்! சொல்.இயற்கையின் இந்தக் கடிகளைத் தாங்கி
செயற்கையாய்த் தூங்கி விழித்தால்-- துவளவைத்துப்
பார்க்க கடமை வரிசையாய்க் காத்திருக்கும்!
வாழ்வின் நடைமுறைதான் ! பார்.

Tuesday, November 04, 2008

சிறுகதையும் தொடர்கதையும்

பிறப்போம்! வளர்வோம்!தனியாய், துணையாய்
கடமை வடத்தைப் பிடித்தே--தடத்திலே
தேரைச் செலுத்தி நிலையில் நிறுத்திட
ஊர்வதே வாழ்க்கை!உணர்.

தேருலா செல்லத் தடைகளோ ஏராளம்!
நேர்வழி சென்றால் தடுமாறும்--பாரில்
குறுக்குவழி என்றால் தடம்புரளும்!நாளும்
நடுவழி காணல் அரிது.

இப்படியோ அப்படியோ எப்படியோ இவ்வுலகில்
அப்படியே தேரை நிலையில் நிறுத்தினாலும்
கொப்பொடிந்த மாமரம்போல் அச்சொடிந்தே வீழ்ந்துவிடும்!
இப்படித்தான் வாழ்வின் முடிவு.

சிறுகதைகள் சேர்ந்த தொடர்கதைதான் வாழ்க்கை!
விறுவிறுப்பும் மந்தமும் மாறிமாறி வந்து
தொடர்கதை மூட சிறுகதை இங்கே
தொடர்கதை ஆகும் ! விளம்பு.

மதுரை பாபாராஜ்