Thursday, July 28, 2011

தனிமைச் சிறை!

===========================
மகனொரு நாட்டில்! மகளொரு நாட்டில்!
மகன்வீட்டில் தந்தை! மகள்வீட்டில் அன்னை!
நடைமுறையில் தந்தையும் தாயும் முதுமைச்
சிறையில் தனித்தனிதான் செப்பு.

சுவர்போல் இரு!

===================
சுவர்மீது கல்லடித்தால் பாதிப்பின் தாக்கம்
சுவருக்கா?கல்தான் வலுவிழந்து வீழும்!
சரளமாய்ச் சொற்களால் புண்பட்டால் நெஞ்சே!
சுவர்போலத் தாங்கப் பழகு

Wednesday, July 27, 2011

கருத்து மடல் 25.07.2011

எனது வசந்தம் கவிதைத் தொகுப்பு நூலுக்கு

திருக்குறள் மாமணி அருணா பொன்னுசாமி

அனுப்பியுள்ள கருத்து மடல் 25.07.2011
=========================================
பாராட்டுரை
=========================================
வெட்டாமல் ஏற்பட்ட கடலைப் போல
வேர்விட்ட யாப்பின்சீர் வெண்பா கண்டேன்;
தொட்டாலே இனித்திடுமா கரும்பு? பல்லில்
தொட்டிழுத்துக் கடித்தால்தான் சுவைக்கு மாபோல்
பட்டாடை கட்டிவந்த முல்லைப் பூவாய்ப்
பக்கமெலாம் படுத்திருக்கும் வெண்பா கண்டேன்1
விட்டுவிட மனமில்லை! பாபா ராஜே!
வெண்பாவின் புகழேந்தி, தம்பி என்பேன்!

குறள்மயங்கும் உரைவகுத்தீர்! தமிழ்ம யங்கும்;
கொண்டதொரு துணைவியாரின் மனம்ம யங்கும்;
அறம்மயங்கும், பொருள்மயங்கும்; காமம் என்னும்
அன்புபொதி சொல்மயங்கும் உரைவ குத்தீர்!
திறமையெலாம் உம்மிடத்தே மயங்கி நிற்கும்;
திசையெங்கும் மயங்குமிந்த வசந்தம் கண்டால்!
அற்புதமாய் வசந்தத்தை ஆக்கித் தந்தீர்!
அழகுநிலா மயங்குமிந்த நூலைக் கற்றால்!

இங்ஙனம்
அருணாபொனுசாமி
இயக்கம்:9500926939
இல்லம்:04324--248939
அலுவலகம்:04324--261968

Monday, July 25, 2011

சமத்துவத்தின் தடைக்கல்!

==========================
சொத்துரிமைக்(கு) எல்லை வகுத்தாக வேண்டிய
கட்டாயம் உண்டானது நாட்டிலே! கண்டபடி
சொத்துக்கள் வாங்கிக் குவிக்கும் மனிதனுக்கோ
அத்தனையும் தேவையா? சொல்.

ஓடி உழைத்தாலும் ஓடுகூட மிஞ்சவில்லை!
கோடிகளில் வாழ்கின்றார் என்றும் உழைக்காமல்!
மாடிவீடு வீதிக்கு வீதியிங்கே வாங்குகின்ற்றார்!
தேடிவரும் விந்தையைச் செப்பு.

அனைவருக்கும் இங்கே அனைத்தும் கிடைத்தால்
மனிதருக்குள் வர்க்கபேதம் ஏற்படுமா?கண்ணே!
தனிமனிதன் சொத்தை அரசுடமை ஆக்கி
அனைவருக்கும் பங்குபோட்டுத் தா.

ஒருகுடும்பம் வாழ்வதற்குத் தேவையான பங்கை
சரிசமமாய்த் தந்துவிட வேண்டும் அரசு!
தரமான வாழ்க்கை அனைவருக்கும் கிட்டும்!
உலகமே போற்றும் உவந்து.

அரசியல் இன்றி நடுநிலையைக் காட்டு!
அலறவைக்கும் பேதத்தை இங்கிருந்து ஓட்டு!
உயர்த்திடுவோம் நம்நாட்டின் மாண்புதனை இங்கு!
வளரும் சமத்துவந்தான் பார்.

இதுவா நாகரிகம்?

==================
பெண்ணின் உடலமைப்பிற் கேற்றவண்ணம் நாள்தோறும்
வண்ணவண்ண ஆடை அணிந்தால்தான் நல்லது!
கண்டபடி போட்டே விரசத்தைக் காட்டினால்
பெண்மை தலைகுனியும் இங்கு.

கிழிந்த அரைடவுசர் பார்க்கவும் கூசும்
முழங்கால் கீழ்வரை முக்கால்பேண்ட் மற்றும்
தரமற்ற சொல்லேந்தும் வண்ண பனியன்
இவையணிந்து செல்கின்றான் ஆண்,

ஆண்களும் பெண்களும் ஆபாசக் கோலத்தில்
தங்களைத் தாங்களே தாழ்த்தித்தான் வாழ்கின்றார்!
பண்பாட்டின் சீரழிவை இங்கே வளர்க்கலாமோ?
எங்குதான் போகின்றோம் நாம்?

அறிவுத் திறமையில் போட்டிபோட்டு வாழ்க!
குறையாடைப் போடுவதில் போட்டியா நாளும்?
நடைமுறையை ஆக்கபூர்வ பாதையிலே மாற்று!
விடைகண்டு நாட்டை உயர்த்து.

Thursday, July 21, 2011

நடைபாதைக் கடைகளை நீக்கு!

=============================

நடைபாதை எல்லாம் கடைகளை வைத்தே
அடைத்துவிட்டால் நாளும் நடப்பதுதான் எங்கே?
முறைப்படுத்தப் போனால் மறியலில் மக்கள்
படையெடுத்துக் கூடுவார் பார்.

சட்டத்தை நாளும் மதித்து நடக்கவேண்டும்!
முற்றும் புறக்கணித்து வாழ்தல் ஒழுக்கமா?
சற்றேனும் சிந்தித்தால் நல்ல விடைகிடைக்கும்!
மற்றவர்க்கும் வாழ்வுரிமை உண்டு.

நடைபாதை எல்லாம் பொதுமக்கள் சொத்து!
தடைபோட்டு மற்றவர்கள் இங்கே நடக்க
இடையூறு செய்தல் இழிசெயல் ஆகும்!
தடைகளை நீக்கவேண்டும் சாற்று.

மதுரை பாபாராஜ்

Wednesday, July 20, 2011

சாதனை மங்கை

===================
குடிகாரன் இங்கே கணவனாய் வாய்த்தான்!
கொடிமங்கை நாளும் குமுறித்தான் வழ்ந்தாள்!
துடித்தாள்! துவண்டாள்!சரிந்தாள்! அழுதாள்!
விடியலுக்கே ஏங்கினாள் பார்.

அருகில் இருந்தாள்!அருமை மகள்தான்!
குலக்கொழுந்தைப் பார்த்தாள்! சிரித்தாள்!எழுந்தாள்!
தரமுடன் உன்னை வளர்த்திடுவேன் என்றே
தளராமல் சூளுரைத்தாள் அங்கு.

தடைகளும் துன்பமும் மாறிமாறி வந்தும்
படைவீரன் போல செயலாற்றி நின்றாள்!
கடமைச் சுமையைக் கலங்காமல் ஏற்றாள்!
அசடல்ல நானென்றாள்! பார்.

பள்ளியிலே சேர்த்தாள்!படிக்கவைத்தே இன்புற்றாள்!
துள்ளும் பருவத்தில் கல்லூரி போகவைத்து
முல்லைக் கொடியாள் பெருமிதம் கொண்டிருந்தாள்!
நல்லவள் வென்றுவிட்டாள் நின்று.

திருமணம் செய்துவைத்தாள்! தன்கணவன் போல
தருதலை இல்லை! குடிகாரன் இல்லை!
தரமான இல்லற நாயகனாய் வந்தான்!
குலமகள் வாழ்வாள் சிற்ந்து.

மகளும் மருமகனும் தன்னை வணங்கி
அகங்குளிர வாழ்த்த பெருமையுடன் வாழ்ந்தாள்!
கடந்துவந்த பாலை வனப்பாதை காட்டும்
நிகழ்வுகளை எண்ணியது நெஞ்சு

துடுப்பற்ற ஓடமாய் தத்தளித்த போதும்
ஒடுங்காமல் உள்ளத் துணிவுடன் வாழ்வில்
கடும்பயணம் செய்தே நிமிர்ந்தேதான் வென்றாள்!
நடுங்கவில்லை சாதித்தாள் பெண்.

மதுரை பாபாராஜ்

Tuesday, July 19, 2011

அலைபாயாதே!

அலைபாயாதே!
======================
இருப்பவர்கள் வீட்டிலே மிஞ்சுவதைத் தந்தால்
கருத்துடன் இல்லாதோர் கொண்டுபோய் நாளும்
திருப்தியுடன் வாழ்கின்றார்! அன்னாரின் உள்ளம்
பெருந்தன்மை ஆள்கின்ற வீடு.

என்னென்ன வாங்கினாலும் அன்றாடம் சந்தையில்
வந்து குவியும் பொருள்களை வாங்கிடவே
முந்திவந்து போட்டியிடும் கூட்டத்தை என்னென்பேன்?
அம்மம்மா! பேராசைதான் பார்.

பணம்தான் இருக்கிறதே என்று பகட்டாய்
மனம்போன போக்கிலே பார்ப்பதை எல்லாம்
தினந்தோறும் வாங்கும் எண்ணத்தை விட்டு
மனத்தை அடக்கியே ஆள்.

தேவைக்கு வாங்குவது தப்பல்ல! கண்மணியே!
தேவையே இல்லை எனத்தெரிந்தும் வாங்குவதை
தேவைக்கே அல்லாடும் மாந்தர் நிலையெண்ணி
தாரணியில் என்றும் தவிர்.

சிக்கனம் என்றுசொல்லி தேவைக்கும் வாங்காமல்
எப்பொழுதும் வீட்டில் குறையோடு வாழ்ந்தால்
அத்தகைய இல்லறத்தில் நிம்மதி தங்கிடுமா?
திட்டமிட்டு வாழ்தல் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

நீசமனம் தாழ்வுக்கு வித்து!

===========================
தகப்பனோ தாயோ சரியில்லை என்றால்
தடம்புரண்டு போய்விடும் இல்லற வழ்க்கை!
தடுமாறி வாழும் குழந்தைகள் நாளும்!
கொடுமைதான் அவ்வாழ்க்கை இங்கு.

வேகத்தை விட்டு விவேகத்தைப் போற்றிடு!
வேதனைக்கு வித்தூன்றும் உட்பகையைத் தூற்றிடு!
மாசற்ற உள்ளம் உயர்வுக்கு வித்தாகும்!
நீசமனம் தாழ்வுக்கு வித்து.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே
சுணங்காமல் இல்லறத் தேரை இழுக்க
இணைந்தே செயல்பட்டு மக்கள் மகிழ
மனையறம் காத்தல் அறிவு.

களர்நிலக்காட்சி!
===============
வயதின் முதிர்ச்சி உடலை ஒடுக்கும்!
தளர்ச்சியில் தள்ளித் தடுமாற வைக்கும்!
உளைச்சல் பெருகி விரக்தியைக் கூட்டும்!
களர்நிலக் காட்சிதான் வழ்வு.
==========================================

தாயும் தமிழும்!
====================
தாயைப் புறக்கணித்து வாழும் மனிதனும்
தாய்த்தமிழைப் போற்றாமல் வாழும் தமிழனும்
தாழ்வின் பிடிகளில் சிக்கியே தத்தளிப்பான்!
தாயும் தமிழும் உயிர்.
============================================

Tuesday, July 12, 2011

ஆணவம்(EGO) நான் வெறுக்கும் பெண்!

====================================
நான்வெறுக்கும் பெண்ணொருத்தி உண்டம்மா இவ்வுலகில்!
ஈனமன முன்கோபம் சீறி எழும்பொழுதோ
ஆணவத்தைக் கட்டுப் படுத்த முடியாமல்
மானம் தவிக்கிறது! பார்.

சூழ்நிலையைப் பற்றிக் கவலைப் படமாட்டாள்!
யார்யார் உள்ளார்? கவலைப் படமாட்டாள்!
பார்க்கிறதே சுற்றம்! கவலைப் படமாட்டாள்!
நேரடித் தாக்குதல்தான் !செப்பு.

உள்ளத்தில் ஊறிவரும் நிந்தனைச் சொற்களை
வெள்ளமாய் ஓடவிட்டே ஊழியாய் மாறிடுவாள்!
துள்ளுகின்ற உட்பகையைத் தீயாய்ப் படரவிட்டு
எள்ளிநகை யாடிநிற்பாள் அங்கு.

என்னென்ன நற்செயல்கள் எப்படித்தான் செய்தாலும்
நன்றி மறந்தேதான் வன்சொல்லை வீசிடுவாள்!
தன்கருத்தே நன்று! தனக்குநிகர் யாருமில்லை
என்றே செயல்படுவாள் பார்.

எப்பொழுதும் இப்படியா? இல்லையில்லை! கோபத்தைத்
தத்தெடுக்கும் நேரத்தில் கண்டபடி பேசிவிட்டு
அப்பாவி போல அடுத்தநாள் மாறிடுவாள்!
அப்பப்பா! தாங்குமா? சொல்.

துரும்புகளைத் தூணாக்கி ஆடிக் களிப்பாள்!
சுருக்கென்று உள்ளத்தைச் சுட்டுப் பொசுக்கும்
நெருப்பாய் சொற்களால் குத்திச் சிரிப்பாள்!
இரைமீன்தான் தூண்டிலில் நான்.

ஆணவம் என்னும் கெடுமதி மங்கையை
ஈனமாய் எண்ணி வெறுக்கின்றேன் நானிங்கே!
நான்வெறுக்கும் இப்பெண் என்னை விலக்கிவிட்டால்
தேன்மணக்கும் என்வாழ்க்கை தான்.

மதுரை பாபாராஜ்

Saturday, July 09, 2011

ஊனமனம்!

================
நடக்காத ஒன்றை நடந்தது போல
சிறகடிக்கும் கற்பனையில் சித்தரித்துப் பார்க்கும்
முறையற்ற போக்கால் பகைமேகம் சூழும்!
மறைமுகச் சிந்தனையை மாற்று.

அரசே!நியாயமா?

================
கிரிக்கெட் விளையாட்டில் வீரனாய் வென்றால்
பரிசுத் தொகையிங்கே கோடிகோடி உண்டு!
உயிர்த்தியாகம் செய்யும் படைவீரன் என்றால்
கருணைத் தொகையோ சிலலட்சம்! ஆளும்
அரசே ! நியாயமா?சொல்.

Thursday, July 07, 2011

கிடைத்ததைப் பற்று!

====================
கிடைக்காத வாய்ப்பை நினைத்தேதான் ஏங்கி
கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவவிட்டுத் தோற்றால்
கடைந்தெடுத்த கோழைத் தனமென்பேன் கண்ணே!
கிடைத்ததைப் பற்றித்தான் நீந்து.

மதுரை பாபாராஜ்

தாழ்வு நிலையில்லை!

==================================
இறங்கு முகமாய் இருக்கலாம்! ஆனால்
இறங்கு முகமிங்கே ஏறுமுக மாகி
இறங்கு முகத்தில் இருந்தோமா என்ற
நிகழ்வுகளைக் கொண்டதே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

Tuesday, July 05, 2011

நம்பிக்கையே வேர்!

==================
மறுத்தேதான் மூடும் ஒருகதவு வாழ்வில்!
மறுத்தவுடன் நம்பிக்கை கொண்டேதான் வாழ்ந்தால்
மறுகதவு இங்கே திறந்துவிடும் வாய்ப்பை!
நடுங்காதே! காட்சிமாறும்! நம்பு.

மதுரை பாபாராஜ்