ஆணவம்(EGO) நான் வெறுக்கும் பெண்!
====================================
நான்வெறுக்கும் பெண்ணொருத்தி உண்டம்மா இவ்வுலகில்!
ஈனமன முன்கோபம் சீறி எழும்பொழுதோ
ஆணவத்தைக் கட்டுப் படுத்த முடியாமல்
மானம் தவிக்கிறது! பார்.
சூழ்நிலையைப் பற்றிக் கவலைப் படமாட்டாள்!
யார்யார் உள்ளார்? கவலைப் படமாட்டாள்!
பார்க்கிறதே சுற்றம்! கவலைப் படமாட்டாள்!
நேரடித் தாக்குதல்தான் !செப்பு.
உள்ளத்தில் ஊறிவரும் நிந்தனைச் சொற்களை
வெள்ளமாய் ஓடவிட்டே ஊழியாய் மாறிடுவாள்!
துள்ளுகின்ற உட்பகையைத் தீயாய்ப் படரவிட்டு
எள்ளிநகை யாடிநிற்பாள் அங்கு.
என்னென்ன நற்செயல்கள் எப்படித்தான் செய்தாலும்
நன்றி மறந்தேதான் வன்சொல்லை வீசிடுவாள்!
தன்கருத்தே நன்று! தனக்குநிகர் யாருமில்லை
என்றே செயல்படுவாள் பார்.
எப்பொழுதும் இப்படியா? இல்லையில்லை! கோபத்தைத்
தத்தெடுக்கும் நேரத்தில் கண்டபடி பேசிவிட்டு
அப்பாவி போல அடுத்தநாள் மாறிடுவாள்!
அப்பப்பா! தாங்குமா? சொல்.
துரும்புகளைத் தூணாக்கி ஆடிக் களிப்பாள்!
சுருக்கென்று உள்ளத்தைச் சுட்டுப் பொசுக்கும்
நெருப்பாய் சொற்களால் குத்திச் சிரிப்பாள்!
இரைமீன்தான் தூண்டிலில் நான்.
ஆணவம் என்னும் கெடுமதி மங்கையை
ஈனமாய் எண்ணி வெறுக்கின்றேன் நானிங்கே!
நான்வெறுக்கும் இப்பெண் என்னை விலக்கிவிட்டால்
தேன்மணக்கும் என்வாழ்க்கை தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home