Wednesday, July 20, 2011

சாதனை மங்கை

===================
குடிகாரன் இங்கே கணவனாய் வாய்த்தான்!
கொடிமங்கை நாளும் குமுறித்தான் வழ்ந்தாள்!
துடித்தாள்! துவண்டாள்!சரிந்தாள்! அழுதாள்!
விடியலுக்கே ஏங்கினாள் பார்.

அருகில் இருந்தாள்!அருமை மகள்தான்!
குலக்கொழுந்தைப் பார்த்தாள்! சிரித்தாள்!எழுந்தாள்!
தரமுடன் உன்னை வளர்த்திடுவேன் என்றே
தளராமல் சூளுரைத்தாள் அங்கு.

தடைகளும் துன்பமும் மாறிமாறி வந்தும்
படைவீரன் போல செயலாற்றி நின்றாள்!
கடமைச் சுமையைக் கலங்காமல் ஏற்றாள்!
அசடல்ல நானென்றாள்! பார்.

பள்ளியிலே சேர்த்தாள்!படிக்கவைத்தே இன்புற்றாள்!
துள்ளும் பருவத்தில் கல்லூரி போகவைத்து
முல்லைக் கொடியாள் பெருமிதம் கொண்டிருந்தாள்!
நல்லவள் வென்றுவிட்டாள் நின்று.

திருமணம் செய்துவைத்தாள்! தன்கணவன் போல
தருதலை இல்லை! குடிகாரன் இல்லை!
தரமான இல்லற நாயகனாய் வந்தான்!
குலமகள் வாழ்வாள் சிற்ந்து.

மகளும் மருமகனும் தன்னை வணங்கி
அகங்குளிர வாழ்த்த பெருமையுடன் வாழ்ந்தாள்!
கடந்துவந்த பாலை வனப்பாதை காட்டும்
நிகழ்வுகளை எண்ணியது நெஞ்சு

துடுப்பற்ற ஓடமாய் தத்தளித்த போதும்
ஒடுங்காமல் உள்ளத் துணிவுடன் வாழ்வில்
கடும்பயணம் செய்தே நிமிர்ந்தேதான் வென்றாள்!
நடுங்கவில்லை சாதித்தாள் பெண்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home