Tuesday, July 19, 2011

அலைபாயாதே!

அலைபாயாதே!
======================
இருப்பவர்கள் வீட்டிலே மிஞ்சுவதைத் தந்தால்
கருத்துடன் இல்லாதோர் கொண்டுபோய் நாளும்
திருப்தியுடன் வாழ்கின்றார்! அன்னாரின் உள்ளம்
பெருந்தன்மை ஆள்கின்ற வீடு.

என்னென்ன வாங்கினாலும் அன்றாடம் சந்தையில்
வந்து குவியும் பொருள்களை வாங்கிடவே
முந்திவந்து போட்டியிடும் கூட்டத்தை என்னென்பேன்?
அம்மம்மா! பேராசைதான் பார்.

பணம்தான் இருக்கிறதே என்று பகட்டாய்
மனம்போன போக்கிலே பார்ப்பதை எல்லாம்
தினந்தோறும் வாங்கும் எண்ணத்தை விட்டு
மனத்தை அடக்கியே ஆள்.

தேவைக்கு வாங்குவது தப்பல்ல! கண்மணியே!
தேவையே இல்லை எனத்தெரிந்தும் வாங்குவதை
தேவைக்கே அல்லாடும் மாந்தர் நிலையெண்ணி
தாரணியில் என்றும் தவிர்.

சிக்கனம் என்றுசொல்லி தேவைக்கும் வாங்காமல்
எப்பொழுதும் வீட்டில் குறையோடு வாழ்ந்தால்
அத்தகைய இல்லறத்தில் நிம்மதி தங்கிடுமா?
திட்டமிட்டு வாழ்தல் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home