Wednesday, December 31, 2014

காலத்தை வீணாக்காதே!
------------------------------------------------
மாணவ மாணவியர் தங்கள் கவனத்தை
ஊனமாக்கும் உல்லாச ஊடகங்கள் உள்ளன!
ஆனமட்டும் இங்கே தவிர்த்துப் படித்தால்தான்
பாமணக்கும் முன்னேற்றம் உண்டு.

படிக்கின்ற நேரம் படிக்கவேண்டும் நாளும்!
படிக்கவில்லை என்றால் கடந்துவிடும் காலம்!
நொடிப்பொழுதும் மீண்டும் கிடைக்காது கண்ணே!
படிப்பதை இன்றே படி.

Tuesday, December 30, 2014

வீடே நிம்மதி!
--------------------
எத்தனைக் கோயிலுக்(கு) எப்படிச் சென்றாலும்
அத்தனையும் பார்த்துவிட்டு
மீண்டும் வீட்டுக்கே
பற்றுடன் நிம்மதியைத் தேடிவரும் வாழ்க்கையில்
அத்தனை நிம்மதிக்கும் வீடு.

மதுரை பாபாராஜ்

Monday, December 29, 2014

செய்வன திருந்தச் செய்!
-------------------------
சாலைகள் போடுகின்றார்! கொஞ்சநாள் சென்றதும்
சாலையைத் தோண்டுகின்றார்! தோண்டிய பள்ளத்தை
சாலை அளவுக்கு மூடாமல் செல்கின்றார்!
சாலையெல்லாம் பள்ளங்கள் பார்.

மதுரை பாபாராஜ்

வழிகாட்டிகள்!
----------------------
பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள் வாழ்வை
வழிநடத்திச்  செல்லும் வழிகாட்டி யாகும்!
தெளிவாகப் பெற்ற  அனுபவத்தின் சாறு!
அரிதான அமுதம் உணர்.

மதுரை பாபாராஜ்

     
வெறுமை தவிர்ப்போம்!
-------------------------
நட்பை, உறவுகளைத் தக்கவைத்துக் கொள்கின்ற
அற்புத மான கலைகளைக் கற்றுவிட்டால்
இத்தரணி வாழ்க்கை இனிதாகும்! இல்லையேல்
முற்றும் வெறுமையே வாழ்வு!

மதுரை பாபாராஜ்

Sunday, December 28, 2014

தமிழக மீனவர்
வேதனை!
---------------------
செய்தி:இலங்கைக்
கடற்படையால்
மீனவர்கள் கைது.
------------------
கடலலையின் சீற்றம் உலுக்க, இலங்கைக்
கடற்படை சீற்றம் விரட்ட
தினமும்
நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவரைக் காக்க
உறுதுணை யாரோ? விளம்பு.

மதுரை பாபாராஜ்

ஆபாசம் தேவையா?
---------------------
திரைப்படப் பாடல் உரசியதும் பற்றி
எரிகின்ற தீக்குச்சி போலத்தான் பற்றும்!
எளிதில் தளிர்களின் நெஞ்சில் பதியும்!
வரிகளில் ஆபாசச் சொற்களைச் சேர்க்கும்
பழியைச் சுமத்தல் தவிர்.

மதுரை பாபாராஜ்


தேவைதானா?
------------------
புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றிங்கே சொல்லித்தான்
குத்தாட்டம் கும்மாளம் போட்டுக் குடிக்கின்றார்!
நற்றமிழே! கண்டபடி வாகனத்தை ஓட்டுகின்றார்!
இத்தகைய கூத்தை நிறுத்து.

மதுரை பாபாராஜ்

Saturday, December 27, 2014

தமிழைத் தவிர்க்காதே!
-----------------------
திரைப்படப் பாடலில ஆங்கிலச் சொற்கள்
நுழைப்பதைப் பாவலர்கள்
செய்கின்ற போக்கு
தழைக்கும் தமிழுக் கிழைக்கும் துரோகம்!
தரமாய்த் தமிழில் எழுது.

மதுரை பாபாராஜ்

வயதும் வாழ்வும்
-------------------
அகவை அறுபதா! ஆண்டுகள் லாபம்!
அகவை எழுபதா! மாதங்கள் லாபம்!
அகவையோ எண்பதா! வாரங்கள்  லாபம்!
கடப்பதெல்லாம் காலத்தின் மாட்டு.

மதுரை பாபாராஜ்

புத்தாண்டே வா!
புதுப்பொலிவைத் தா!
   (2015)
------------------------------------------------------------------------
அனைத்துமத நல்லிணக்கம்
 அன்றாடம் தழைக்கவேண்டும்!
மனைதோறும் மக்களிங்கே
 மகிழ்ச்சியாக வாழவேண்டும்!

தனிமனித நல்லொழுக்கம்
 தலைநிமிர வைக்கவேண்டும்!
மனிதநேயச் சிந்தனைகள்
 வடிவத்தைப் பெறவேண்டும்!

வல்லரசாய் நம்நாடு
 வையகத்தில் உயரவேண்டும்!
பொல்லாத வன்முறைகள்
 வேரிழந்து போகவேண்டும்!

அரும்புகின்ற புத்தாண்டே!
 அகமாசை அகற்றிவிடு!
விரும்புகின்ற இவையெல்லாம்
 விருட்சமாக அருள்புரிவாய்!

Friday, December 26, 2014

எல்லையை உணர்!
--------------------------
கடன்வாங்கும் நேரம் இருக்கின்ற வேகம்
கடனைத் திருப்பித் தருகின்ற
நேரம்
கடன்வாங்கி யோர்க்கோ இருப்பதே இல்லை!
நடைமுறையில் இப்படித்தான் பார்.

நாட்டின் நடப்பில் வகைதொகை இல்லாமல்
தூக்கித் தருகின்றார் நாளும் கடன்களைத்தான்!
மீட்ட முடியாமல் சிக்கித் திணறுகின்றார்
நாட்டில் அனைவருந் தான்.

நம்மால் தரமுடியும் என்றநம் எல்லைக்குள்
சிந்தித்து தேவைக்கேற் றாற்போல் கடன்வாங்கி
சொன்னசொல்லைக் காத்துப் பகைதவிர்த்து வாழவேண்டும்!
அன்பை முறிக்கும் கடன்.

மதுரை பாபாராஜ்

நின்றதே மிச்சம்!
--------------------------
அமைதியாகப் பார்த்தேன்! குரல்கொடுத்துப் பார்த்தேன்!
இமைக்காது பார்த்தேன்! சுமையுடனே பார்த்தேன்!
முனைப்புடனே பார்த்தேன்! முயற்சித்தும் பார்த்தேன்!
இமைவலிக்க நின்றேன் தவித்து.

மதுரை பாபாராஜ்

பண்மயக்கம்!
----------------------
மற்றவர்மேல் குற்றம் சுமத்துவதைக் கேட்பவரே!
மற்றவர் சொல்லும் விளக்கத்தைக் கேட்டபின்பு
குற்றத்தில் உண்மை இருக்கிறதா என்றாய்ந்தே
உற்றநல் தீர்ப்பை வழங்கு.

மதுரை பாபாராஜ்

Thursday, December 25, 2014

சுனாமியே !
மீண்டும் வராதே!
26 டிசம்பர்
-----------------------
இன்றுபோல் நீயேனோ அன்றில்லை ஆழியே!
அன்றுநீ பேயாட்டம் ஆடிவிட்டாய்! அங்கங்கே
கொன்று குவித்துவிட்டாய் மக்களைக் கண்முன்னே!
எங்கெங்கும் வேதனையின் ஓலங்கள்! தேம்பல்கள்!
இன்னும் கொலைவெறித் தாண்டவம் எங்களது
நெஞ்சத்தில்  நீங்கா நினைவின் சுவடுகளாய்!
அம்மம்மா! ஆழியே! அன்றுபோல் மாறாமல்
இன்றுபோல் என்றும் இரு.

மதுரை பாபாராஜ்

இப்படியும் வாழ்கின்றார்!
----------------------------
பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யாரென்றே
அக்கறையாய்க் கேட்டால்
தெரியவில்லை என்றேதான்
சற்றும் தயங்காமல் கூறும் நகரவாழ்க்கை!
இப்படியும் வாழ்கின்றார் பார்.

மதுரை பாபாராஜ்

முகநூலுக்கு இரண்டு
முகங்கள்!
------------------
தொடர்பறுந்து போன உறவுகளை எல்லாம்
தொடர்பிழையால் பின்னிப் புதுப்பித்துக் காட்டும்
முகநூலின் தொண்டை அகங்குளிரப் போற்று!
முகநூலை வாழ்த்துவோம் நாம்.

முன்பின் தெரியாத மற்றும் பழகாத
அன்பரை நண்பராக்கும் ஆற்றல் இதற்குண்டு!
கண்டபடி போனால் ஆபத்தும் ஏற்படுத்தும்!
நன்மையும் தீமையும் உண்டு.

மதுரை பாபாராஜ்

Wednesday, December 24, 2014

கொடிய பழக்கம்!
------------------
கோபதாபம் இல்லாத மாந்தர்கள் இல்லையிங்கே!
ஆபத்துக் காலத்தில் கோபத்தைக் காட்டுவது
வேதனைக்கே வித்தூன்றும்!
வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும்!
கோபம், மிருகத்தின் சொத்து.

மதுரை பாபாராஜ்

எறும்பும் மனிதனும்!
-----------------------
வரிசையாய்ச் செல்லும் எறும்புகள் கூட
வரிசையை மீறுவ தில்லை! மனிதன்
வரிசையை மீறி குழப்பத்தை வம்பை
உருவாக்கித் தரம்தாழ்வ தேன்?

மதுரை பாபாராஜ்

Tuesday, December 23, 2014

ஆட்சிக்குத் தேவை
பக்குவம்!
----------------------
மதங்களைச் சார்ந்து முடிவெடுக் காமல்
நடக்கின்ற நல்லரசைப் போற்று---மதவெறியைத்
தூண்டிவிடும் பொல்லாத ஆட்சியை மக்களாட்சி
மாண்பின் எதிரியென்று தூற்று.

மதங்களுக்குள் சிக்கலைத் தோற்றுவிக்கும் போக்கு
மகத்தான ஒற்றுமைக்கு வைக்கின்ற வேட்டு!
இதமான நல்லிணக்கப் பாதையினைக் காட்டு!
அகமாசைத் தேக்காமல் நீக்கு

மதுரை பாபாராஜ்

Monday, December 22, 2014

நா காக்க!
------------
அண்ணலைச் சுட்ட இழிமகனை நாடெல்லாம்
கொண்டாடச் சொல்கின்ற
குற்றத்தைச் செய்யலாமா?
இந்தியாவை இந்துநாடு என்றேதான் கூறலாமா?
கண்டபடி பேசுதல் கேடு.

மதுரை பாபாராஜ்

தனக்கென்றால்
தப்பில்லை!
-----------------+
மதம்விட்டு மக்கள் மதம்தாவிச் சென்றால்
கதறிக் குதிக்கின்றார் கண்ணே!--தடம்புரண்டு
கட்சிவிட்டுக் கட்சிதாவும்
காட்சியை வளர்க்கின்றார்!
இப்படித் தாவுதலும் தப்பு.

மதுரை பாபாராஜ்

கர்வம் கொள்ளாதே!
-----------------------------------------
வளைந்த மரத்தை நிமிர்ந்த மரமோ
அழகில்லை என்றேதான் கேலிசெய்த போது
மரம்வெட்டி வந்தான்! வளைந்த மரமோ
சரியில்லை என்றே நிமிர்ந்த மரத்தை
மளமள வென்றேதான் வெட்டிச் சரித்தான்!
வளைந்தமரம் தப்பிப் பிழைத்தது கண்ணே!
அழகேன்றே ஆணவம் கொள்வது தப்பு!
அழகின் செருக்கே அழிவு.

Sunday, December 21, 2014

காகத்தின் ஆசை!
----------------------
நான்வந்து நாற்காலி மீதமரும் நேரத்தில்
வான்பறவைக் காகமொன்று சாளரம்மேல் வந்தமரும்!
தேன்குரலில் காகம் கரைந்தே எனையழைக்கும்!
நானும் உணவெடுப்பேன் சென்று.

கரத்தால் கொடுப்பேன் பிடித்தால் எடுக்கும்!
ஒருசில நேரமோ துப்பும்! சுவர்மேல்
அருகிலே வைத்தால் எடுக்க மறுக்கும்!
விரும்பிடும் நான்ஊட்டத் தான்.

குளிர்காலத் தூக்கம்!
-----------------------
குளிர்காலம்! தூக்கம் கலைய மறுக்கும்!
தளிரை எழுப்பினால் போம்மா! என்றே
சுழிப்பார் முகத்தை! முணங்கியே போர்வை
இழுத்தே முகத்தை மறைப்பார் முறைத்து!
எழுப்பப் படும்பாட்டைப் பார்.

மதுரை பாபாராஜ்

மதம்பிடித்த மனிதன்!
மதப்பெயர் பறவைக்கில்லை!
----------------;------
எந்தமதக் கோயிலில் வெண்புறாத் தங்கினாலும்
அந்தமதம் சொல்லிப் புறாவை அழைப்பதில்லை!
அந்தோ! புறாக்களோ கோபுரத்தில் உள்ளன!
இங்கே மனிதர்கள் தங்களை அந்தமதம்
இந்தமதம் என்று பிரித்தே மதம்பிடித்து
மண்ணுலகில் தாழ்ந்தனர் பார்.இடிமேல் இடி!
இப்படியும் வாழ்க்கை!
--------------------
அன்றாட வாழ்க்கையே கேள்விக் குறியாகித்
துன்புறுத்திப் பார்க்கையில் மென்மேலும் இன்னல்கள்
ஒன்றன்பின் ஒன்றாக
வந்துவந்து தாக்கினால்
என்செய்வார்? எங்குசெல்வார்? சொல்.

மதுரை பாபாராஜ்

அளவுகோல்
------------------
மரத்தில்  கனிகள் விளைந்தால் மதிப்பு!
மரம்பட்டுப் போனால் மதிப்பை இழக்கும்!
தரணியில் வாழ்வில் வளமிருந்தால் கூட்டம்!
இழந்தால் தனிமை அனல்.

மதுரை பாபாராஜ்

ஆட்கொல்லி!
------------------
சொத்துபத்தே இல்லாத வாழ்க்கையே சொர்க்கமாகும்!
சொத்து! பகைக்குள் பகைவளர்க்கும் ஆட்கொல்லி!
எப்படித் தந்தாலும் வெறிச்செயலைத் தூண்டிவிடும்!
சொத்து நரகத்தின் தூது.

மதுரை பாபாராஜ்

Saturday, December 20, 2014

மேடை வீரம்
---------------
தமிழினத்தைக் காப்போம்! தமிழ்மொழியைக் காப்போம்!
இமிழ்கடலின் ஓசையை விஞ்சும் முழக்கம்!
தமிழினக் கொள்கை தமிழ்மொழிக் கொள்கை
துணிச்சலெல்லாம் மேடையில் தான்.

Friday, December 19, 2014

தெய்வத்திரு வி என் சிதம்பரம்
 அவர்களுக்கு காணிக்கை
----------------------------------------------------------------------------
உருகுகின்றேன் இன்றும்
-------------------------------------------
இருந்தபோது வீட்டிற்கு அழைத்தே எந்தன்
அருகில் அமர்ந்து விருந்தோம்பல் செய்தே
உருகவைத்த ஏந்தல் சிதம்பரம் அய்யா!
உருகுகின்றேன் இன்றும் நினைத்து.

தூசியென ஊது!
-------------------
சிக்கலைக் கண்டு பயந்தே ஒளியாதே!
சிக்கலுக்குச் சிக்கலைத் தந்து நிமிர்ந்துநில்!
சிக்கல்கள் சிந்தனையைச் சீர்படுத்தும் தூண்டுகோல்!
சிக்கலைத் தூசியென்றே ஊது.

ஏசுவைத் துதிப்போம்!
----------------------
கிறித்துமஸ் வாழ்த்துகள்
--------------------------
ஏசுபிரான் மக்களைக் காக்க அவதரித்தார்!
மாசற்ற தொண்டிலே ஈடுபட்டார்! நீசர்கள்
நாடதிரத் துன்புறுத்திப் பார்த்தார்! கலங்கவில்லை!
ஈடற்ற ஏசுவைப் போற்று.

மண்ணுலகம் கொண்டாடும் ஏசு பிறந்தநாளில்
அன்புடனே எல்லோரும் சேர்ந்து மகிழ்ந்திருப்போம்!
நம்வாழ்வை உய்விக்க வந்த மகானையே
என்றும் துதிப்போம் பணிந்து

Thursday, December 18, 2014

மக்கள் விருப்பம்!
----------------------
ஆத்திகமா? ஆணித் தரமான வாதமுண்டு!
நாத்திகமா! நங்கூரம் பாய்ச்சுகின்ற வாதமுண்டு!
நாத்திகத்தைக் கேட்டாலும்
மக்கள் பெரும்பாலும்
ஆத்திகத்தை ஏற்கின்றார் இங்கு.

மதுரை பாபாராஜ்

ஊருக்கு மட்டுமா?
-----------------------
சொல்லும் கருத்துக்கும் வாழ்வின் நடைமுறைக்கும்
எள்ளள வேனும் தொடர்பிருக்க வேண்டுமென்பேன்!
இல்லையெனில்
சொல்லாதே!ஊருக் குபதேசம்!
சொல்பவரை நம்பா துலகு.

மதுரை பாபாராஜ்

Wednesday, December 17, 2014

வாழ்த்தப் பழகு!
-----------------
வாழ்த்துங்கள்! வாழ்த்துவோரும் வாழ்த்தப் படுவோரும்
வாழ்வாங்கு வாழலாம் வையகத்தில்---வாழ்த்து
மகிழ்ச்சியைத் தந்து மகிழவைக்கும்! அன்பே!
மகிழ்வதற்கு மற்றவரை  வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

அறியாமையைக் கைவிடு!
---------------------------
நடிகரைச் சம்பளம் வாங்குவோராய்ப் பார்த்தால்
அறியாமைத் தொற்றுநோய்த் தீண்டாது நம்மை!
வெறியாட்டம் போடும் நிலையெடுக்க மாட்டோம்!
நடிப்பும் ஒருதொழிலே! நம்பு.

மதுரை பாபாராஜ்

ஆழியைப் போல் இரு!
-------------------------
ஆழியில் ஆறு கலந்தே உயர்த்தினாலும்
ஆவியாய் தண்ணீரை மேகம்
உறிஞ்சினாலும்
ஆழிக்குள் வந்ததற்கும் கர்வப் படவில்லை!
ஆழிவிட்டுச் சென்றதற்கும்
ஏங்கவில்லை! ஆழியைப்போல்
வாழ்ந்திரு! நிம்மதி உண்டு.

மதுரை பாபாராஜ்

குறுக்குவழி
-------------------------
குறுக்கு வழியில் வருமானம் பார்த்தால்
முறுக்கேறும்! நாளும் முரட்டுத் தனத்தின்
எடுபிடி யாவார்! இழிந்த குணத்தின்
கெடுபிடிக் காளாவார் பார்.

ஏமாளி
--------------
பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலை ஆட்டுகின்ற
கள்ளமனங் கொண்டவரை நல்லவர்கள் என்றெண்ணும்
பிள்ளைமனங் கொண்டவர்கள் நல்லவர்தான்! ஆனாலும்
இவ்வுலகின் ஏமாளி தான்.

Tuesday, December 16, 2014

தூரத்துப் பச்சை!
-----------------------
எப்படியோ வாழ்பவரைப்
பார்த்துவிட்டு ஆகாகா!
எப்படி வாழ்கின்றார் என்றே குமுறிடுவார்!
பக்கத்தில் சென்றால் உண்மை புரிந்துவிடும்!
இப்படியா? என்பார் வியந்து.

மதுரை பாபாராஜ்

மனிதக் களைகள்
-----------------
அரக்ககுணம் கொண்டவர்கள்  ஆணவத்தின் கூட்டம்!
இரக்கத்தை விற்றோர் இழிபிறவிக் கூட்டம்!
தரமின்றி வாழ்வோர் தறுதலைக் கூட்டம்!
உலகின் களைகள் இவர்.

மதுரை பாபாராஜ்

இல்லறத் தேர்!
------------------------------
ஊர்கூடித் தேரிழுத்தால் தேரும் நிலைசேரும்!
ஊர்பிரிந்து நின்றுவிட்டால் தேரிழுக்க யார்வருவார்?
தேர்போல இல்லறந்தான்! ஒற்றுமை இல்லையென்றால்
தேரிங்கே தத்தளிக்கும் செப்பு.                             16.12.2014
-------------------------------------------------------------------------------------------------------------

ஏன்?
----------------------------
திருமணம் என்றால் இரண்டு குடும்பம்
ஒருமித்து வாழ்வதற்கு ஏற்படுத்தும் வாய்ப்பு!
பெரும்பாலும் வேற்றுமையில் கொந்தளிக்கும் சூழல்!
நெருஞ்சி உறுத்தல்தான் ஏன்?
--------------------------------------------------------------------------------------------------------------

பிள்ளைகள் மகிழ்ச்சிக்கு
-----------------------------------------------
காலைப் பொழுதில் எழுந்துவரும் பிள்ளையைச்
சோலைக் குளிர்த்தென்றல் போலத் தழுவித்தான்
நாலுவார்த்தைக் கொஞ்சிக் குலவவேண்டும் பெற்றவர்கள்!
வேரூன்றும் இன்பம் நிலைத்து.
-------------------------------------------------------------------------------------------------------

-சேலை வாங்குதல்
------------------------------
பத்தைக் குவித்துவைப்பார்! ஒன்பதைக் கண்ணளக்க
எட்டை எடுத்துவைப்பார்! ஏழை விரலளக்கும்!
ஆறில் அகம்வைப்பார்! ஐந்தில் ஆசைவைப்பார்!
நான்கை  நகர்த்திவைத்தே மூன்றிலே ஊன்றி
இரண்டையே தேர்ந்தெடுப்பார்! ஒன்றைத்தான் வாங்குவார்!
பெண்கள் வணிகத் திறன்.

பாரதீ
---------
சொல்ல முடியாத எண்ணத்தை பாரதி
சொல்ல முடியாத நேரத்தில் அஞ்சாமல்
சொல்லி நிமிர்ந்தவன்! பாநெருப்பால் ஆதிக்கச்
சுள்ளிகளைச் சுட்டெரித்தான் பார்.
-----------------------------------------------------------------------------------

பொம்மலாட்டம் வேண்டாம்!
--------------------------------------------------------
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கையில்
அன்றாடம் கண்முன் நடக்கின்ற காட்சிகளை
எந்தச் சலனமும் இல்லாமல் ஏற்றுக்கொள்!
நிம்மதியாய் வாழலாம் இங்கு.
-----------------------------------------------------------------------------------

உள்ளம் நகைக்கும்
---------------------
செய்ததற்கும் செய்வதற்கும்
செய்திடுவோம் என்பதற்கும்
பொய்யான காரணங்கள்
சொல்லிச் சமாளிப்போம்!
செவ்வண்ண நாவும் வளைந்து கொடுத்துவிடும்!
உள்ளம் நகைக்கும் கடிந்து.

மதுரை பாபாராஜ்

Monday, December 15, 2014

நல்லதே நினைப்போம்!
--------------------------
எந்தவொரு பேச்சுக்கும் பக்கம் இரண்டிருக்கும்!
ஒன்று பெருந்தன்மை! ஒன்றோ எதிர்மறையாம்!
நெஞ்சம் எதிர்மறையை எண்ணாமல் நல்லதை
என்றும் நினைக்கப் பழக்கு.

மதுரை பாபாராஜ்

மதம் ஒதுக்கினால் மனிதன்
ஒதுங்குவான்!
------------+-------------
இந்தமதம் அந்தமதம் எந்தமதம் என்றாலும்
இங்கே மனிதனை நாளும் மதிக்கின்ற
அந்த மதத்தைத்தான் மக்கள் மதிப்பார்கள்!
புண்படுத்தும் போக்கைத் தவிர்.

மதுரை பாபாராஜ்

மதவெறி லீலை!
--------------------
ஆட்சியில் உள்ளோர் அனைத்து மதங்களையும்
நாட்டில் மதித்தே இணக்கத்தை ஏற்படுத்தி
வேற்றுமை இன்றிச் செயல்பட்டால் நல்லது!
போற்றுவார் வாழ்த்துவார் சூழ்ந்து.

வாழைப் பழத்திலே ஊசியை ஏற்றுதல்போல்
வேலையற்ற வேலையாய் நாளும் மதவெறி
லீலையை நாட்டில் நடத்தினால் மக்களெல்லாம்
கோழை அரசென்பார் கூறு.

மதுரை பாபாராஜ்

Sunday, December 14, 2014

திணறல்!
-----------
இருப்பது நான்கு திசைகள்! அதில்
ஒருதிசையில் வெள்ளம்! மறுதிசையில் பள்ளம்!
ஒருதிசையில் காடு! மறுதிசையில் மேடு!
இருள்சூழ்ந்தால் என்செய்ய?
சொல்.

மதுரை பாபாராஜ்

மனதின் குணம்!
------------------
எதையெதையோ ஒப்பிட்டுப் பார்க்கும் மனதில்
விடைதேடித் தேடி விளையாடும் வாழ்க்கை!
கிடைத்ததில் நாளும் திருப்தி உணர்ந்தும்
எதையெதையோ எண்ணும் மனம்.

மதுரை பாபாராஜ்

Saturday, December 13, 2014

நிழல் தேடும் மரம்
------------------------
வேர்ப்பருவந் தன்னில் தவித்திருப்பார்! வாழ்விலே
வேரை அடுத்த அடிமரம்! செந்தமிழே!
நாளும் உழைத்திருப்பார்! பின்பு மரமாவார்!
வேரூன்ற மீண்டும் தவிப்பு.

மதுரை பாபாராஜ்

வறுமையை விரட்டலாம்!
------------------------------------------------------
கோடிகளில் தாங்கள் செழிப்புடன் வாழ
வேடிக்கை உல்லாசக் காட்சிகளின் நாயகராய்
மாறிமாறித் தோன்றி
நடிக்கின்றார்! மக்களும்
கோடிகளைக் கொட்டுகின்றார் பார்.

கோடிகோடி வந்தாலும் ஏழை வறியவரைத்
தேடி நடிகர்கள்  என்றுமே செல்வதில்லை!
கோடியைக் கிள்ளி அனைவரும் பங்கேற்றால்
ஓடிவிடும் ஏழ்மை உணர்.

Friday, December 12, 2014

பண்பாய்ப் பழகு!
------------------
பெரியவர்கள் சொல்லை மதிக்கப் பழகு!
தெரிந்ததை நல்லதை சொல்லப் பழகு!
தெளிவாய் இனிமையாய்ப் பேசப் பழகு!
புவிமதிக்கப் பண்பாய்ப் பழகு.

மதுரை பாபாராஜ்


பணிவே உயர்வு!
------------------------------------------
காலை வணக்கம் வணங்குதல் நல்லது!
காலைவாரி விட்டு மகிழ்வது கெட்டது!
போலி வணக்கம் புனைவது நல்லதல்ல!
நாளும் பணிவே உயர்வு.

இன்றைய நடைமுறைக்கு
       ஒவ்வாதது
------------------------
முன்பெல்லாம் சம்பளத்தை வாங்கிவந்து அப்படியே
தந்தையிடம் தந்துவிட்டு வாழ்ந்திருந்தோம்---இன்றந்த
கோலம் குடும்பத்தில் இல்லை! அவரவர்
வாழ்க்கை அவரவர்க் கே!

நல்லதை நாலுபேர்க்குச்
சொல்
-------------------------
அறிந்தோர் அவையில் அறியாதோர் எல்லாம்
அறிந்தவர்போல் பேசுவது  தப்பு---அறிந்தோர்
அறியா தவர்போல் இருத்தலும்  தப்பு!
அறிந்ததை மற்றவர்க்குச் சொல்.

DEMOCLE'S SWORD
-----------------------------
உச்சிமீது வாள்!
-------------------------------------
பக்கத்து நாட்டின் பகையுணர்ச்சி, வன்முறையைக்
கட்டவிழ்த்துத் தாக்குகின்ற தீவிர வாதிகள்,
முட்டும் விலைவாசி, தண்ணீர் அணைச்சிக்கல்,
தட்டும் கருப்புப் பணச்சிக்கல் போன்றவைகள்
உச்சிமீது வாளாகத் தொங்குகின்ற நேரத்தில்
மத்தியில் ஆள்வோர் மதவெறிப் போக்குகளைப்
பற்றிக் களித்திருந்தால் கற்காலம் தோன்றிவிடும்!
பொற்காலம் கானல்நீர் தான்.

மத்திய அரசின்   ஒருதலைராகம்!
    தேவையற்ற பரபரப்பு
---------------------------------------------------------------------------
இந்தித் திணிப்பு சமஸ்கிருத சச்சரவு!
இந்திய தேசிய நூலாக கீதையே!
என்றும் அயோத்தியில் கோயில் பிரச்சினை!
இந்த உளைச்சல்கள் போதாதாம் தாஜ்மகாலைச்
சொந்தமாக்க தேவையற்ற வாதங்கள் !அம்மம்மா!
என்னசொல்ல? எங்குசெல்ல? நாம்.

எல்லா மதத்தினரும் வாக்களித்துத்  தேர்ந்தெடுத்து
நல்லாட்சி தன்னை  எதிர்பார்த்துக் காத்திருந்தால்
தொல்லை கொடுக்கும் இந்துத்வா திட்டத்தை
இவ்வரசு ஏற்கலாமா? கூறு.

ஒழுக்கமே வாழ்வு!
---------------------
சென்ற தலைமுறை வாழ்ந்த முறைசரியா?
இந்தத் தலைமுறை வாழும் முறைசரியா?
கண்ணே! இனிவரும் வாழ்க்கை முறைசரியா?
என்றும் ஒழுக்கத்தைப் போற்று.

Thursday, December 11, 2014

குழந்தை வளர்ப்பு
---------------------
அடித்து வளர்த்தால் மனதால் வெறுக்கும்!
கடிந்து வளர்த்தால்  பயந்து தவிக்கும்!
அடிக்காமல் அன்பாய் அறிவுரை சொன்னால்
மதித்துத் திருந்தும் உணர்.

மதுரை பாபாராஜ்

திறமையை நம்பு!
-------------------
பதவி! நமது திறமைக்கு   வாய்ப்பு!
பதவியைக் காத்தல் இழத்தல் இரண்டும்
திறமை, உழைப்பைப் பொறுத்தது! உந்தன்
திறமையால் சாதித்து நில்.

மதுரை பாபாராஜ்
'

வழிகாட்டி
-----------
மனசாட்சி ஒன்றே வழிநடத்த வேண்டும்!
மனசாட்சி தன்னைப் புறக்கணித்து மக்கள்
தினமும் நடப்பார்கள் என்றால் ஒழுக்கம்
சுணங்கிவிடும், தத்தளிக்கும் வாழ்வு.

மதுரை பாபாராஜ்

Tuesday, December 09, 2014

மாண்புமிகு மோடி அவர்களே
ஆக்கத்திற்குத் தோள்கொடுங்கள்!
----------------------------
அமைதி தவழ்கின்ற இந்திய நாட்டில்
அமளியைத் தூண்டும் திட்டங்கள் வேண்டாம்!
இமையாய் நல்லரசு மாறினால் நன்று!
சுமையாக மாறினால் தீது!

இந்தியர்கள் ஒற்றுமையாய் வாழ்கின்ற நாட்டை
இந்துக்கள் நாடாக மாற்றும் முயற்சி
இந்திய மக்களாட்சி வேர்களைத் தாக்கும்!
வெந்நீரை ஊற்றினால் கேடு.

மதுரை பாபாராஜ்

குதிரைக் கொம்பு!
-------------------
காட்டில் விலங்குகளும் கூட்டில் பறவைகளும்
போற்றும் இணக்கத்தைப்
பின்பற்ற முன்வரலாம்!
நாட்டிலே கட்சிகள் இத்தகைய
சூழ்நிலையை
ஏற்படுத்த முன்வருமா? சொல்.

மதுரை பாபாராஜ்

பொம்மலாட்டம் வேண்டாம்!
----------------------------
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கையில்
அன்றாடம் கண்முன் நடக்கின்ற காட்சிகளை
எந்தச் சலனமும் இல்லாமல்
ஏற்றுக்கொள்!
நிம்மதியாய் வாழலாம் இங்கு.

மதுரை  பாபாராஜ்

Monday, December 08, 2014

பாவம் எழுத்தாளன்!
---------+------------
இருக்கின்ற போதோ ஒதுங்கித்தான் செல்வார்!
எழுத்தைப் படிக்க முகத்தைச் சுழிப்பார்!
எழுத்தாளன் இங்கே இறந்தால் திரள்வார்!
அழுதுகொண்டே வெற்றிடத்தை யார்நிரப்ப? என்பார்!
இருக்கின்ற போதே மதி.

மதுரை பாபாராஜ்

அன்றும் இன்றும்
--------------------
பெரியோர் முகம்பார்த்து பிள்ளைகள் நாளும்
தவித்தே அனுசரித்து வாழ்ந்திருந்தார் அன்று!
தவித்தேதான் பிள்ளை முகம்பார்த்து நாளும்
பெரியோர் அனுசரிப்பார் இன்று.

மதுரை பாபாராஜ்

ஜால்ரா  உலகம்
---------------------
செல்வந்தர் வீட்டுக் குழந்தை உளறுவதை
எல்லோரும் தத்துவம் என்றே புகழ்ந்திடுவார்!
இல்லாதோர் வீட்டுக் குழந்தை தத்துவத்தை
உள்ளபடி பேசினாலும்
இங்கே உளறலென்பார்!
இல்லாரை ஏற்கா(து) உலகு.

மதுரை பாபாராஜ்

உள்ளத்தின் பேராசை!
------------------------
உள்ளம் விரைவாய் நடைபோடச் சொன்னாலும்
தள்ளாடும் மேனியோ கேட்க மறுத்துவிடும்!
வெள்ளோட்டம் பார்க்கும் வயதையும் தாண்டியாச்சு!
உள்ளமே உன்னை அடக்கு.

மதுரை பாபாராஜ்

இந்தப் பிறவியே உண்மை!
----------------------------
இந்தப் பிறவியில் வாழ்கின்ற வாழ்க்கைதான்
உண்மை! அடுத்த பிறவி தெரியாது!
அன்பகமாய் வாழ்வதற்குக் கற்றுக்கொள்! பண்பகமாய்
உன்னைச் செதுக்கப் பழகு.

மதுரை பாபாராஜ்

Sunday, December 07, 2014

இந்தியன் என்பதே பெருமை
----------------------------
இந்தியன் என்று சொல்லடா
இமயம் போல நில்லடா
எப்பகை வந்த போதும்
தூள்தூ ளாகப் போகும்

இந்தியக் கொடியைப் பாரு
அதன் எழுச்சிக் கிணையெது கூறு
முப்படை காக்கும் நாடு
வேற்றுமை இல்லாக் கூடு

அறநெறி எங்கள் மூச்சு
நேர்மை நடுநிலை வீச்சு
ஒழுக்கப் பண்பே உயரம்
ஒற்றுமை எங்கள் உயிராம்

அமைதி காக்க பொறுப்போம்
அடுசரம் தொடுத்தால் தடுப்போம்
சீண்டிப் பார்த்தால் எழுவோம்
பகைப்புலம் தன்னை வெல்வோம்

மதுரை பாபாராஜ்

காலம் காட்டும் இடத்தில்
இருப்போம்
--------------------------
இங்கே முடியாதாம்! அங்கே முடியாதாம்!
எங்கே முடியுமோ யாரறிவார்? காலந்தான்
எங்கோ நமக்கு வழிகாட்டும்! செந்தமிழே!
அங்குதான் நாமிருப்போம் பார்.

மதுரை பாபாராஜ்

வெவ்வேறு பார்வைகள்!
------------------------
ஒருவருக்குu
 நல்லவர்! அத்தகைய நல்லார்
ஒருவருக்குக் கெட்டவர்!
செந்தமிழே! அந்த
இருவகை மாந்தர் ஒருவரே! ஆனால்
இருவரின் பார்வைகள் வேறு.

மதுரை பாபாராஜ்

Saturday, December 06, 2014

அரசே! நீக்கு!
-----------------
ஒருபக்கம் தேவைக்கே ஊசலாடும் மக்கள்!
ஒருபக்கம் உல்லாச ஊஞ்சலாடும் மக்கள்!
இருவர்க்க மக்கள் சமுதாய வாழ்க்கை!
உலுக்குகின்ற வேறுபாட்டை நீக்கு.

மதுரை பாபாராஜ்

மீறுகின்ற மனம்!
-------------------
வாழ்க்கையின் தத்துவத்தைப் பேசி எழுதினாலும்
ஊழ்வினை என்றேதான் தள்ளினாலும் மக்களின்
ஆழ்மனத்தில் காயங்கள் தங்கி உரசினால்
தூளாய் நொறுங்கும் மனம்.

மதுரை பாபாராஜ்

மனக்கதவைத் திற!
--------+--------------
மனதிலே உள்ளதைக் கொட்டிவிட வேண்டும்!
மனதிற்குள் பூட்டிவைத்துத்
தேங்கவிடும் போக்கு
மனதில் உளைச்சலைக் கூட்டும்! தமிழே!
மனச்சுமை தன்னை இறக்கு.

மதுரை பாபாராஜ்

காலம் மாற்றும்!
-------------------
எப்படி வாழ்க்கை அமைகிறதோ கண்மணியே!
அப்படியே அத்தகைய வாழ்க்கையுடன் ஒன்றிவிடு!
சற்றும் கலங்காதே! காலத்தின் சக்கரங்கள்
சுற்றும் சரியாகும் நம்பு.

கர்வம்
------------
எல்லாம் இருந்தும் அனுபவிக்கும் வாய்ப்புகளைத்
தொல்லையென்றே எண்ணிப் புறக்கணிக்கும் மாந்தர்கள்
இவ்வுலகம் கற்றுத் தருகின்ற பாடத்தை
எள்ளளவும் கற்கவில்லை ஏன்?

மதுரை பாபாராஜ்

சாதிப்பாய் நீ!
-----------------
எத்தகைய சூழ்நிலைகள் ஆட்டிப் படைத்தாலும்
சற்றும்  தளர்ச்சி அடையாமல் முன்னேறு!
அத்தனையும்  தாண்டி கடமையை மூச்சாக்கு!
வெற்றிகண்டு சாதிப்பாய் நீ!

மதுரை பாபாராஜ்

மதவேற்றுமை மக்களிடையே
இல்லை!
---------------------
அரசியல் வாதிகளின் ஆணவப் பேச்சால்
ஒருமைக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் நாட்டில்!
இருந்தாலும்  மக்களின் ஒற்றுமையே நாட்டை
அருமையாய்க் காக்கிறது பார்.

மதுரை பாபாராஜ்

Friday, December 05, 2014

நாமே பொறுப்பு!
--------------------
வீடுகளை மாற்றித்தான் வேறுவீடு சென்றாலும்
நாடுகளை மாற்றித்தான் வேறுநாடு சென்றாலும்
தேடுகின்ற நிம்மதிக்கு நாம்தான் பொறுப்பாவோம்!
தேடுவதை உன்னுள்ளே தேடு.

மதுரை பாபாராஜ்

காலம் மாற்றும்!
-------------------
எப்படி வாழ்க்கை அமைகிறதோ கண்மணியே!
அப்படியே அத்தகைய வாழ்க்கையுடன் ஒன்றிவிடு!
சற்றும் கலங்காதே! காலத்தின் சக்கரங்கள்
சுற்றும் சரியாகும் நம்பு.

மதுரை பாபாராஜ்

மறக்கமுடியாது
------------------
வாழ்வில் மறக்க முடியாத எண்ணற்ற
சூழ்நிலைகள் தோன்றி மறைந்தாலும் உள்ளத்தின்
ஆழத்தில் படிந்திருக்கும்!  அம்மா! திடீரென்று
மேலெழுந்து நிற்கும் சிலிர்த்து.

மதுரை பாபாராஜ்

அம்மாவின் ஆதாரம்!
------------------------
அப்பா உடல்நலம் பாதித்தால் பிள்ளைகள்
அக்கறை வேறு பதற்றங்கள் வேறாகும்!
அப்பாவின் ஆதாரம் அம்மா பதற்றத்தில்
எத்தனையோ அர்த்தங்கள் உண்டு.

கடந்து செல்லும் மேகங்கள்!
---------------------------
கணவன் மனைவி பிணக்குகள் எல்லாம்
தினமும் கடந்துசெல்லும் மேகங்கள் போல!
மனதிற்குள் தோன்றி நிலைக்காமல் போகும்!
மனமாற்றம் ஏற்பார் இணைந்து.

மதுரை பாபாராஜ்

நவீன சஞ்சயன்கள்
-------------------------------------
பாரதப் போர்க்களக் காட்சியை மன்னருக்கு
நேராகப் பார்த்ததுபோல் சொல்கின்ற சஞ்சயன்போல்
தாரணியில் நாளும் புறணிகள் பேசுகின்ற
ஆர்வமுள்ள மாந்தர்கள் உண்டு..


Thursday, December 04, 2014

முயலும் ஆமையும்
பொய்யும் மெய்யும்
------------------------------------------------
பொய்யோ முயல்போல வேகமாக ஓடித்தான்
வெல்வது உறுதியென்றே தூங்கிவிடும்! தோற்றுவிடும்!
மெய்யிங்கே ஆமைபோல்  மெல்ல  நகர்ந்தாலும்
வெல்லும் உறங்காமல் தான்.

சோர்வின் வலிமை
-----------------------
உடல்நலம் நன்றாய் இருந்துவிட்டால் உள்ளம்
நடக்கத்தான் தூண்டும்! நலமற்ற சோர்வோ
உடலைப் படுப்பதற்கே தூண்டும்!  தமிழே!
உடலை முடங்கவைக்கும் சோர்வு.

மறப்பது இழிவு
-----------------------------------
செய்யும் உதவி துளியள வாயினும்
உள்ளம் கடலள(வு) என்றெண்ணி போற்றவேண்டும்!
செய்நன்றி தன்னை என்றும் மறக்காதே!
உள்ளம் மறந்தால் இழிவு.

பகையுணர்ச்சி வேண்டாம்!
----------------------------
ஆள்கின்ற கட்சி எதிர்க்கட்சி இவ்விரண்டும்
தோளோடு தோள்நின்று தோழமை காட்டவேண்டாம்!
நாள்தோறும் சொற்போரில் தாக்கும் நிலைவிட்டு
ஊர்வாழ நாடுவாழ திட்டத்தைப் பேசட்டும்!
நேர்பட மன்றத்தில் பேசு.

நேரந்தவறாமை திரு.ஓ.குமரப்பன் சொன்ன
மற்றொரு உவமை
--------------------------------------------------------------------+-----------------
காதலி நான்கு மணிக்கு வரச்சொன்னால்
காதலன் மூன்றுக்கே சென்றிடுவான்! அவ்வாறு
நேசமுடன் நாமும் அலுவலக வேலைக்கு
நேரந் தவறாமல் வந்து பணியாற்றும்
நேர்மையைப் பேணவேண்டும் இங்கு.

மாற்றுத் திறனாளி
நாள் 03.12.14
-----------------------------------
மாற்றுத் திறனாளி தாழ்வு மனப்போக்கை
ஏற்காமல் நாளும் மகத்தான சாதனைகள்
ஆற்றலுடன் சாதிக்கும் அந்த மனத்துணிவைப்
போற்றித்தான் பாராட்டு வோம்.

Wednesday, December 03, 2014

நேரந்தவறாமை
-----------------------------------
நேரத்தைச் சொல்லி பணங்கொடுப்பேன் வாஎன்றால்
நேரம் வருமுன்னே சென்றிடுவோம்! அவ்வாறு
நேரந் தவறாமைப் பண்பைப் பின்பற்று!
காரணம் சொல்தல் தவிர்.

(எங்கள் மேனேஜர் திரு ஓ. குமரப்பன் சொன்ன உவமை)

மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி சர்ச்சைக்குரிய பேச்சு,
பாஜக தேசியச் செயலாளர் ஹெச் ராஜா,
 வை கோ வைக் கண்டித்து மிரட்டல் பேச்சு
(தி இந்து தமிழ்) 03.12.2014
------------------------------------------------------------------
அமைச்சர்கள் மற்றும் பொறுப்பிலே உள்ளோர்
அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வண்ணம்
சுமையாக  மாறுதல் வேண்டாம்! தமிழே!
அமைதிக்கு இமையாதல் நன்று.

மகிழ்ந்து வாழப் பழகு
----------------------------------------
மகிழ்ச்சி நிறைந்த குடும்பம் அமைந்தும்
தகிக்கும் மனதில் தினமும் உழன்று
மகிழ்வைச் சிதைக்கும் நினைவை விடுத்து
மகிழ்ச்சியில் வாழ்தல் சிறப்பு.

Tuesday, December 02, 2014

இணையர் இணையாராய்
வாழ்ந்தால்
------------------------------------------
இணையர் இணைந்தேதான் வாழ்ந்தால் மகிழ்ச்சி
மனையில் நிலையாகும்! உளைச்சலும் நீங்கும்!
இணையர் இணையாராய் வாழ நினைத்தால்
மனைதோறும் சச்சரவு தான்.

மதித்தால் நிம்மதி
------------------------------------------
மனைவி உறவைக் கணவன் மதித்தும்
கணவன் உறவை மனைவி மதித்தும்
இணையர் இருவரும் விட்டுக் கொடுத்தால்
மனைதோறும் நிம்மதி உண்டு.

தனியார் மயம்!
-------------------------
நாட்டுடைமை யாக்கி அரசாங்கம் மக்களைக்
காக்கும் கடமையை விட்டு ---நாட்டில்
தொழிலைத் தனியார் மயமாக்கிப் பார்த்தால்
செழிப்பார் தனியார்தான் இங்கு.

காட்டாறு!
---------------
வாழ்வின் அனுபவத்தில் பாடங்கள் கற்கவேண்டும்!
வாழ்க்கையின் பாடத்தைக் கற்றுத் தெளியாமல்
வாழும் முறையும் தெரியாமல் ஆணவமே
வாழ்வானால் காட்டாறு தான்.

வானிலை மாற்றம்
----------------------------------------
நேற்றிருந்த வானிலை இன்றிருப்ப தில்லையே!
காற்றுகூட தென்றல் புயலென்றே வேற்றுமையைக்
காட்டித்தான் வாழ்கிறது! மாந்தர் விதிவிலக்கா?
வீட்டிலும் இக்கோலம் உண்டு.

நல்லதைத் தேக்கு
-----------------------------------
குப்பையை உள்ளத்தில் தேக்கிவைத்து வாழ்க்கையைக்
குப்பைக் கிடங்காக்கி வாழாதே! அங்கங்கே
கொட்டிக் கிடக்கின்ற வைரமென்னும் நல்லதை
எப்பொழுதும் தேர்ந்தெடுத்துத்  தேக்கு.l

திரைப்படத் துறையால் காவல் துறை மிகவும்
 மோசமாகக் காட்டப் படுகின்றது--பிரதமர் மோடி
---------------------------------------------------------------------+------------------
காவல் துறையைத் திரைப்படக் காட்சிகளில்
கேவலமாய்க் காட்டுவதை மோடி குறைகூறி
ஆவலுடன் பேசியுள்ளார்! மக்கள் தவறாக
காவல் துறையினரை பார்ப்பார் எனுங்கருத்து
வேரோடும் உண்மைதான் செப்பு.

உளறாதே!
------------------------------
பேசத் தெரிந்தால்தான் பேசவேண்டும்! இல்லையேல்
பேசாமல் வாழ்வதே உத்தமம்!  ஏனென்றால்
பேசுகின்றேன் என்றே உளறுவதைக் காட்டிலும்
பேசா மடந்தையே மேல்.

கடமை தவறாதே!
----------------------------------------
கடமைகள் வேறு மனத்தாங்கல் வேறு!
கடமைகள் செய்ய மனத்தாங்கல் தன்னைத்
தடையாய்க் கருதி விலகுதல் தப்பு!
கடமையை வாழ்வாய்க் கருது.

மனமாசை அகற்று
---------------------------------
சொல்வதில் உள்நோக்கம் கற்பித்துக் காட்டுவது
வல்லமை அல்ல! மடமையே! கண்மணியே!
சொல்லாத ஒன்றைச் சொல்லியதாய் எண்ணாதே!
உள்ளத்தில் மாசின்றி வாழ்.

உறவைத் தக்கவை!
----------------------------------
நெருங்கிப் பழகப் பழக உறவில்
நெருடல்கள் தோன்றத்தான் செய்யும்--நெருடல்
விரிசலாய் மாறாமல் பார்த்தே உறவைப்
பிரிக்காமல் வாழ்தல் சிறப்பு.