Wednesday, August 31, 2011

பட்டிமன்றமும் பாப்பையாவும்


பட்டிமன்றமும் பாப்பையாவும்
நூலின் தாக்கத்தில் விளைந்த
கவிதை
=====================================
அடிப்படைத் தேவைகள் கிட்டாத வாழ்க்கை!
விடியலும் தோன்றுமா என்றதோர் ஏக்கம்
கசிந்திடும் நெஞ்சுடன் தேரை நகர்த்தி
முடிந்தவரை சேர்த்துவிட்டார் தாய்.

நிகழ்வுகளின் பின்னணியில் ஊடாடும் சோகம்
பதறவைக்கும் நூலைப் படித்திடும் போது!
நடப்பதை எல்லாம் இதயத்தில் தாங்கி
கடந்துவந்த பாதையெல்லாம் முள்.

சுற்றங்கள் வேடிக்கை பர்த்தேதான் நின்றிருக்க
உற்றதுணை யாகத்தான் நண்பர்கள் முன்வந்து
வெற்றிபெற வைத்ததை நன்றியுடன் அய்யாதான்
அக்கறையாய்க் கூறிவிட்டார் பார்.

படிதாண்டும் போதோ இடிபோலத் தாக்கி
இடறவைக்கச் செய்த துரோகங்கள் எல்லாம்
தடம்மாறிச் சென்றுவிட்ட அற்புதத்தைக் கண்டார்!
அறமிங்கே வீழுமோ? கூறு.

யார்யாரை எங்கெங்கே கூறவெண்டும் என்றெண்ணி
யாரையும் புண்படுத்தும் நோக்கமின்றி இந்நூலில்
நேயமுடன் நம்முன் படம்பிடித்துக் காட்டிவிட்டார்!
காலத்தை வென்றுநிற்கும் காண்.

கிராமத்தில் தோன்றி நகரத்தில் ஊன்றி
உலாவர சந்தித்த சோதனைகள் எல்லாம்
உராய்ந்து துடிக்கவைத்துப் பார்த்தாலும் வாழ்க்கை
பலாபோல் கனிந்தது பார்.

பட்டிமன்றம் என்றாலே பாப்பையா என்றேதான்
பட்டிதொட்டி எல்லாம் இலக்கணமாய் ஆனதே!
பட்டிமன்றம் வாயிலாக மக்களுக்கு வாழ்வியலை
அற்புதமாய் ஊட்டுகின்றார் பார்

பழைய மதுரை புதிய மதுரை
இவையிரண்டைக் கண்முன்னே காட்டும் நயத்தில்
களைகட்டிச் செல்கிறதே ஓவியமாய் இந்நூல்!
மலைத்தேன் தோற்றது சொல்.

என்னுடைய ஆசானாம் அய்யாவின் தாள்பணிந்தே
என்றென்றும் ஆசிகளை நாடித்தான் கேட்கின்றேன்!
பண்பாளர் நெஞ்சில் எனக்கும் இடமளிக்கும்
அன்பை மறப்பேனோ நான்?

----மதுரை பாபாராஜ்
900 3260 981

என்கடமை படிப்பதே!

=======================
பள்ளிக்குச் செல்ல மனமில்லை!
தெருவில் ஆடப் போகின்றேன்!
எந்தன் கடமை விளையாட்டே!
அழைத்தால் இவைகள் வந்துவிடும்!

சேவலே சேவலே வருவாயா?
சேர்ந்தே ஆட வருவாயா?
போபோ நானோ வரமாட்டேன்!
விடியலில் கூவுதல் என்கடமை!

குருவி குருவி வருவாயா?
கூடி ஆட வருவாயா?
போ!போ! நானோ வரமாட்டேன்!
இரையைத் தேடுதல் என்கடமை!

நாயே நாயே வருவாயா?
நட்புடன் ஆட வருவாயா?
போ!போ! நானோ வரமாட்டேன்!
வீட்டைக் காப்பது என்கடமை!

காக்கா காக்கா வருவாயா?
கரைந்தே ஆட வருவாயா?
போ!போ! நானோ வரமாட்டேன்!
கூட்டைக் கட்டுதல் என்கடமை!

பசுவே பசுவே வருவாயா?
பாய்ந்தே ஆட வருவாயா?
போ!போ! நானோ வரமாட்டேன்!
பாலைத் தருதல் என்கடமை!

அனைத்தும் இங்கே நாள்தோறும்
அதனதன் கடமை செய்கிறது!
எனது கடமை படிப்பதுதான்
இன்றே பள்ளிக்கு நான்செல்வேன்!

மதுரை பாபாராஜ்
சென்னை-600 088

Monday, August 29, 2011

இந்தியா வல்லரசாகும்!


========================
நமது நாடு இந்தியாதான்!
நாமெல் லோரும் இந்தியர்தான்!

இமயம் முதலாய்க் குமரிவரை
அனைவரும் இங்கே சரிசமந்தான்!

மொழிகள் இனங்கள் வெவ்வேறு!
மக்கள் ஒற்றுமை கண்கூடு!

மத்திய ஆட்சி நாரென்றால்
மாநில ஆட்சிகள் மலரினங்கள்!
ஒன்றாய்த் தொடுத்த மாலைபோல்
மணத்தைப் பரப்பும் காட்சியைப்பார்!

வேற்றுமைக் குள்ளே ஒற்றுமைதான்
விவேக மான சிந்தனைதான்!

வல்லரசாகும் இந்தியா!
உழைப்போம் அதற்கு நாமெல்லாம்!

பிறவியை வீணாக்கோம்!

==================
பக்கத்துப் பக்கத்து வீட்டில் இருந்துகொண்டு
முட்டப் பகைவளர்க்கும் போக்கைக் கடைப்பிடித்தால்
பட்டுவிடும் சுற்றம்! உறவும் முறிந்துவிடும்!
இப்பிறவி வீணாகும் பார்.

கிடைத்துள்ள சுற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ளும்
நடைமுறையைப் பின்பற்றவேண்டும்! விட்டுக் கொடுப்போர்
குறைவின்றி வாழ்வார்! மற்றவர் இங்கே
கறைபடிந்தோர் ஆவார் பார்.

Sunday, August 28, 2011

வாழ்க தமிழறிஞர்

பட்டிமன்ற மேடையின் பொன்விழா நாயகர்
தமிழறிஞர் சாலமன் பாப்பையா
வண்டமிழ்போல் வாழ்க
1961-2011
======================================
பண்பாளர் பாப்பையா பட்டிமன்ற மேடையிலே
பொன்விழா நாயகராய்ப் பார்போற்ற வாழ்ந்துவரும்
தென்மதுரை தந்த நகைச்சுவை நாவலர்!
வண்டமிழ்போல் வாழ்க நிலைத்து.


எளிய தமிழில் புரிகின்ற வண்ணம்
தெளிவாய்க் கருத்தை விளக்கும் முறையில்
அளிக்கின்ற வாதம் வியப்பினில் ஆழ்த்தும்!
புவிமக்கள் போற்றுகின்றார் சூழ்ந்து.

இந்தப் புகழுக்குப் பின்னணியில் உள்ளவை
உங்கள் மனைவியின் பங்களிப்பும் ஆதரவும்!
அன்பான இல்லறத்தைப் போற்றும் மனைவியுடன்
மங்கலமாய் வாழ்கபல் லாண்டு.

--தங்கள் ஆசிகளை நாடும்
மதுரை பாபாராஜ்
வசந்தா பாபாராஜ்
சென்னை-

சிக்கவைக்கும் வளையம்


=========================================
தங்களுக்குத் தாங்களே சுற்றும் வளையத்தில்
எங்கெங்கோ எப்படியோ சிக்கித் தவிக்கின்றார்!
அங்கங்கே மாட்டவைத்துப் பாடம் புகட்டினாலும்
கண்முன்னே பொம்மலாட்டம் தான்.

வளைக்கமுடியாது!

=================================================
இந்தநாள் இப்படித்தான் போகவேண்டும் என்றிருந்தால்
அந்தநாள் அப்படித்தான் இங்கே நகர்ந்திருக்கும்!
அந்தநாளை நாம்விரும்பும் போக்கில் வளைப்பதற்கு
முந்தினால் தோல்விதான் பார்.

Saturday, August 27, 2011

காட்சிமாற்றம் எப்போது?


===========================
சாக்கடை துர்நாற்றம் குப்பைக் கழிவுநெடி
மூகைத் துளைக்கிறதே!அப்பப்பா--மக்களெல்லாம்
எப்படித்தான் வாழ்கின்றார் இத்தகைய சூழ்நிலையில்?
எப்பொழுது மாறும் விளம்பு.

ஆட்சிமாற்றம் தந்துவிட்டார் மக்கள்தான் நாட்டிலே!
காட்சிமாற்றம் ஏற்படுத்தி மக்களைக் காப்பதோ
ஆட்சியின் அன்றாடத் தொண்டும் கடமையுமாம்!
நாட்டுமக்கள் வாழ்த்தே பலம்.
=============================================

அஞ்சாமையே தலைமைப் பண்பு!


===========================================
குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்றுகொண்டு
அஞ்சியஞ்சி நாட்டுக் கொடியேற்றும் இவரெங்கே?
கண்ணெதிரே சுட்டபோதும் அஞ்சாமல் சந்தித்தே
தன்னுயிரைத் தந்தார் மகாத்மா!அவரெங்கே?
அண்ணலுக்(கு) ஈடாவார் யார்?
============================================

Monday, August 22, 2011

வாழ்வின் இரகசியம்!


=======================
குழந்தைப் பருவந்தான் மொட்டுப் பருவம்!
வளரும் பருவம் இதழ்கள் பருவம்!
உளங்கவரும் மொட்டு விரிந்து விரிந்து
மலராகும் காட்சியைப்போல் வாழ்வில் பருவம்
பலகடந்த பின்பே மலரும் முதுமைப்பூ!
உலகியல் வாழ்வில் படிப்படி யாக
தவறாமல் முன்னேற்றம் காணலாம்! ஆனால்
முயற்சியின்றி நாளும் குறுக்குவழி சென்று
வரவேண்டும் எல்லாம் உடனடியாய் என்றால்
மலராத மொட்டாக வாடி மறைவோம்!
தரணியின் வாழ்க்கை ரகசியத்தைச் சொன்னார்
மலரால் இறைவன்தான் இங்கு.
==========================================

சூழல் திருத்தும்!

===============================================
நட்பைப் பகையாக்கும்! வன்பகையை நட்பாக்கும்!
எப்படி என்றே நமக்குத் தெரியாது!
தப்படிகள் போடுவோரைச் சூழல் திருத்தியே
கற்கவைகும் பாடத்தைக் காண்.
==============================================

மடையனாக்கும்!


=============================================
புகைத்தால் குடித்தால் மனக்கவலை நீங்கி
விடைகிடைக்கும் என்றே நினைப்பதோ நம்மை
மடையனாக்கிக் காட்டிப் பரிகசிக்க வைகும்!
நடைப்பிணம் ஆக்கிவிடும்! சொல்.
=============================================

பொறுமைக் கொடியேந்து!


========================================
இடியாப்பச் சிக்கலே வந்தாலும் வாழ்வில்
இடிதாங்கி யாக மாறிப் பொறுமைக்
கொடியேந்தி நாளும் நடைபோட வேண்டும்!
அறிவால் பகுத்தறிந்து வெல்.
===========================================

யார்?


========================================
வேடன் ஒருவன் புறாஒன்றை வீழ்த்தினான்!
வேடன் அதையெடுக்கத் தாவி அடியெடுத்தான்!
வேடன் தலைகீழாய் வீழ்ந்துவிட்டான் கல்தடுக்கி!
பாடம் புகட்டியது யார்?
=========================================

புதுமையின் சிற்பி!


==================
முறுக்கிய கம்பி அறுந்து விழுந்து
நொறுங்குதல் போல உறவின் இழையே
அறுந்து விழுந்தாலும் மீண்டும் இணையும்
புதுமையின் சிற்பியே வாழ்வு.
==========================================

Friday, August 19, 2011

பொம்மைக் கடைக்கா! காப்பாத்துங்கோ!!


=====================================
தொலைக்காட்சி காட்டும் கதைத்தொடரில் எல்லாம்
பலவித பாத்திரங்கள் வந்துவந்து போகும்!
குழந்தைகள் இத்தகைய சித்திரத்தைப் பார்த்து
கலந்தே ரசிக்கின்றார் காண்.

இந்த உயிரூட்டப் பட்ட படைப்புகளை
கண்கவரும் வண்ணத்தில் பொம்மைகளாய் விற்கின்றார்!
கண்டவுடன் பொம்மைகளை வாங்க குழந்தைகள்
இங்கே அலைகின்றார் பார்.

பொம்மை விலைகளைப் பார்த்தால் தலைசுற்றும்!
அம்மா! ஒருவரின் மாத வருமானம்
இங்கே ஒருபொம்மை வாங்கும் விலையாகும்!
நெஞ்சு படபடக்கும் பார்த்து..

இத்தகைய பொம்மைகள் எங்கே கிடைக்குமென்று
எப்படித்தான் வாண்டுகள் இங்கே அறியுமோ?
அப்படியே பெற்றோரை அள்ளித்தான் கொண்டுபோய்
எப்படியோ வாங்குகின்றார் இங்கு.

வீட்டிலே பண்ணும் ரகளைக்கே அஞ்சித்தான்
ஆட்டிப் படைக்கும் குழந்தை அமைதியாக
நாட்டில் அலைந்தேதான் வங்கித் தருகின்றார்!
ஈட்டிமுனைத் தாக்குதலே மேல்.

கடைகளுக்குச் சென்றால் புரியும் நிலைமை!
படையெடுத்து நிற்கும் பொடியன்கள் கூட்டம்!
கிடைத்துவிட்டால் அந்தப் பொடியனுக்கோ இன்பம்!
நடக்கின்றார் பெற்றோர் தளர்ந்து.

உணவுப் பொருள்களை விற்பதற்கும் இங்கே
உணவுடன் பொம்மை இலவசம் என்றே
உணர்த்தும் விளம்பரத்தைப் பார்த்ததும்
தொணதொணப்பார் பெற்றோரைச் சூழ்ந்து.

பெற்றோர்கள் சூழ்நிலையில் சிக்கித் தவித்தாலும்
கொப்பளிக்கும் கோபம் கொதிக்க அடித்தாலும்
எப்படியும் பொம்மையை வாங்கித் தருகின்றார்!
இப்படித்தான் வீட்டுக்கு வீடு.

Thursday, August 18, 2011

மொழிபெயர்ப்பு


================
COWARDS DIE MANYTIMES BEFORE THEIR DEATH;
VALIANT NEVER TASTES THE DEATH BUT ONCE.
--SHAKESPEARE
============================================
மரணம் நிகழ்வதற்கு முன்னாலே கோழை
பலமுறை சாகின்றான்!வீரனோ இங்கே
கலங்காமல் வாழ்வில் ஒருமுறைதான் சாவான்!
மரணமோ வாழ்வின் நிகழ்வு.

வீரமான கோழை!


=======================
சாவதா? வாழ்வதா?இந்த இரண்டிலே
சாவதைக் கோழைத் தனமென்றார் --- வாழ்வதே
வீரம், விவேகமென்றார்!புன்னகைத்தேன்!வாழ்கின்றேன்!
வீரமான கோழையாய்த் தான்.

அன்றும்--இன்றும்


=====================
பெற்றோர் முகக்குறிப்பைப் பார்த்தேதான் பிள்ளைகள்
எட்டநின்று பேசுவதோ அக்காலம்-- பெற்றவர்கள்
பிள்ளை முகக்குறிப்பைப் பார்த்தேதான் பேசுவதோ
இவ்வுலகில் இக்காலந் தான்.

பணிவே உயர்த்தும்!

பணிவே உயர்த்தும்!
===========================================
வாழ்வில் பணிவைப் புறக்கணித்து வாழ்வோரை
பாரில் திருத்த முயல்வதும் -- நாய்வாலை
நேராய் நிமிர்த்த முயல்வதும் ஒன்றுதான்!
வாழ்வை உயர்த்தும் பணிவு.

Monday, August 15, 2011

அன்னா ஹசாரே கைது!

======================
அறவழியை இங்கே முளையிலேயே கிள்ளிக்
கசக்குகின்ற போக்கைக் கடைப்பிடிப்பார் இங்கே!
அசராமல் குண்டுவைக்கும் வன்முறையைப் போக்க
அசடு வழிகின்றார் பார்.

வன்முறை வாதிகளைக் கூப்பிட்டுப் பேசுவார்!
வன்முறை வாதிகளின் கோரிக்கை ஏற்றிடுவார்!
வன்முறை வாதிக்குக் காட்டுகின்ற ஈவிரக்கம்
அன்னாமேல் இல்லையே ஏன்?

கோயபட்சே,ராஜபட்சே, வந்துபோவார் நாட்டில்தான்!
தூயமன அன்னாவைக் கைதுசெய்வார் வீட்டில்தான்!
ஊழல் கறையாலே இந்தியத்தாய் நாணுகின்றாள்1
ஊழல் ஒழிவதுதான் என்று?

நாட்டுக்கு நாடிங்கே மக்கள் கொதித்தெழுந்து
காட்டுகின்ற ஆவேசக் காரணங்கள் இங்கேயும்
ஊற்றெடுத்து நிற்கிறது!ஆனால் வெடிக்காமல்
காப்பதற்கு யார்தான் பொறுப்பு?

நாட்டின் அவலத்தைப் பார்!


============================
அன்னா ஹசாரேயின் உண்ணா விரதத்தைக்
கண்டபடி பேசுகின்றார்!கண்டனம் செய்கின்றார்!
பண்பற்ற சொற்களைப் புண்படுத்தி வீசுகின்றார்!
உண்மைக்கு நெற்றியடி பார்.

ஊழலை நாங்கள் ஒழித்திடுவோம் என்றேதான்
ஊருக்(கு) உபதேசம் செய்தேதான் ஆட்சியின்
தேரை நகர்த்துகின்றார்! ஊழலே மூச்சென்று
காவடித் தூக்குகின்றார் காண்.

ஊழல் ஒழியவேண்டும்! மாற்றுக் கருத்தில்லை!
ஊழல் புகாரின் வரம்புக்குள் சிக்கமாட்டோம்!
ஊழல் விசாரணைக்கு நாங்கள் தயாரில்லை!
ஊழல் நகைக்கிறது பார்.

அறவழியைத் தேர்ந்தெடுத்துப் போராட்டம் செய்தால்
குதர்க்கமாகப் பேசித் திசைத்திருப்பு கின்றார்!
பதைபதைப்பு! காழ்ப்புணர்வு! அம்மம்மா! அந்தோ!
தகர்த்தெறியப் பார்க்கின்றார்! சாற்று.

ஆட்சியில் உள்ளவர்கள் என்னென்ன செய்தாலும்
காட்சிப் பொருளாகப் பார்க்கவேண்டும்! யாருமிங்கே
ஆட்சியின் ஊழலைக் கேள்விகேட்கக் கூடாது!
நாட்டின் அவலத்தைப் பார்.

Sunday, August 14, 2011

அடக்குமுறை தோற்கும்!

அடக்குமுறை எங்கள் அணுகுமுறை என்றே
அடங்காமல் ஆடும் அரசாங்கந் தன்னை
அடக்குவார் நாட்டுமக்கள் தேர்தலின் மூலம்!
அடங்காமை வீழ்ச்சிக்கே வித்து.

Saturday, August 13, 2011

இல்லறத்தின் மங்கலம்!


===================================
கணவன் மனைவிக்குக் கண்போல, நாளும்
மனைவி கணவனுக்குக் கண்போல வாழ்ந்தால்
இணக்கம் வளரும்! பிணக்கு விலகும்!
மனைதோறும் மங்கலந்தான் பார்.

அம்மா என்றால் சும்மாவா!


==============================
அம்மா ஒருநாள்தான் ஊருக்குச் சென்றுவந்தாள்!
என்னென்ன எங்கே இருக்கிறது? யாரறிவார்?
அம்மம்மா வீடே தலைகீழாய் மாறியது!
அம்மாதான் வீட்டுக்கு வேர்.

Friday, August 12, 2011

யார் குற்றம்?


=================
மத்தகத்தால் யானையோ முட்டி உருட்டுதல்போல்
குத்திக் கிழிக்கின்ற சூழ்நிலைகள் வாட்டுதம்மா!
எத்தனைநாள் தாங்குவது? எப்படித்தான் தாங்குவது?
குற்றந்தான் யார்குற்றம்? சொல்.

கோழைத்தனம்!


==================
கிடைத்திருக்கும் வாழ்வைச் சிதைக்கின்ற போக்கோ
கடைந்தெடுத்த கோழைத் தனமென்பேன்! கண்ணே!
உடைத்தெறிந்தால் மீண்டும் கிடைக்காது வாய்ப்பு!
கிடைத்ததில் நிம்மதியைக் காண்.

மனிதம் என்றும் புனிதம்!


=========================
இந்தப் பிறவியில் இந்தக் குடும்பத்தில்
சந்திக்க வேண்டிய மக்களைச் சேர்த்துவைத்துச்
சந்ததிக ளாக தழைப்பதற்குக் காலந்தான்
இங்கே கணிக்கிறது காண்.

காலத்தால் நாளும் இணைந்திடும் வாய்ப்புதரும்
கோலத்தை மாற்றி அலங்கோல மாக்குவது
ஞாலத்தில் மாந்தரின் பண்பற்ற போக்குதான்!
பாலமென வாழ்தலே பண்பு.

கானல்நீர் காட்டும் கவர்ச்சியை நம்பினால்
ஊனமனம் கொள்ளவைத்து வேதனையைத் தூண்டிவிடும்!
ஆனமட்டும் ஒற்றுமைக்கே வேட்டுவைத்துப் பார்த்திருக்கும்!
ஈனமனம் நல்லதல்ல சொல்.

எந்தவழி நல்லவழி என்றேதான் சிந்தித்துப்
புண்படுத்தும் பாதையிலே போகாமல் வாழ்க்கையைப்
பண்படுத்தும் பாதையைத் தேர்ந்தெடுத்து வாழவேண்டும்!
நிம்மதியே வாழ்வின் உயிர்.

கனியிருக்க காய்களை நாடினால் வாழ்க்கை
பனிபடர்ந்த பாதைப் பயணமாக மாறும்!
மனிதனே வக்கிரச் சிந்தனையை மாற்று!
மனிதநேயச் சிந்தனையைப் போற்று.

விரக்தியின் எல்லை!


=====================
புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம்
வரமறுக்கும் கோலத்தில் வாழ்கின்றேன் தாயே!
விரக்தி அலைகள் புரட்டி எடுத்தால்
வருமோ உறக்கம்? விளம்பு.

Wednesday, August 10, 2011

பூட்டுப் போடு!


=================================
கதவிலே பூட்டு திருட்டைத் தடுக்கும்!
உதட்டுக்குள் துள்ளுகின்ற நாவுக்குப் பூட்டோ
அகத்தில் வடுக்கள் சுடாமல் தடுக்கும்!
பதறவைக்கும் வன்சொல் தவிர்.

Friday, August 05, 2011

வீட்டின் ஒளிவிளக்கே கூட்டுக் குடும்பம்

=======================================
கூட்டுக் குடும்பம் என்பது தேனீக்கள்
கூட்டை முயற்சியுடன் கட்டும் உழைப்புதான்!
ஆக்கபூர்வ சிந்தனையில் எல்லோரும் ஒன்றுபட்டு
நாட்டமுடன் வாழும் கலை.

மரியாதை தந்து மரியாதை பெற்று
பெருந்தன்மைக் கண்ணோட்டம் தன்னை வளர்த்தே
ஒருவர்க் கொருவர் உதவிகள் செய்து
பெருமையுடன் வாழும் சிறப்பு.

குழந்தைப் பராமரிப்பில் போட்டிகள் இன்றி
குழந்தைகள் எல்லோரும் ஒன்றென எண்ணி
வளர்த்திட வேண்டும் சமநிலை தந்தே!
குழந்தை வளரும் மகிழ்ந்து.

வரவு செலவை குடும்பத்திற் கேற்ப
சரியாய்ப் பகிர்ந்து கணக்கிட்டு நாளும்
தெளிவாய் அணுகினால் சச்சரவே இல்லை!
உயிரோட்டம் காசுதான் பார்.

விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கைப் பெற்றிருந்தால்
சற்றும் பொறாமை நெருங்காமல் வாழலாம்!
புற்றாய் வளரும் புறணிக்(கு) இடங்கொடாமல்
ஒற்றுமையைக் காக்கலாம் சொல்.


கூட்டுக் குடும்பத்தில் நாளும் கடமைகள்
போட்டிபோட்டு வந்தே மலைத்திட வைக்கும்!
ஆட்டிப் படைக்கும் திரண்டேதான்! எல்லோரும்
வேற்றுமை இன்றி பகிர்ந்து செயல்பட்டால்
ஆற்றலுடன் வீட்டில் அமைதியின் தென்றலோ
வீற்றிருக்க வாழ்வோம் இணைந்து.

எந்த உறவினர் வந்தாலும் இன்முகம்
கொண்டே விருந்தோம்பல் பண்பில் உயரவேண்டும்!
வந்தோர் மனங்குளிரச் சென்றால் வளம்தழைக்கும்!
என்றும் மகிழ்ச்சிதான் இங்கு.

தன்னலம் இன்றியே மற்றவரைப் பாராட்டும்
அன்பான தன்மை மனிதநேயப் பண்பாகும்!
என்றென்றும் பேராசை இன்றி, இருப்பதே
இன்பமெனில் நிம்மதி உண்டு.

கருத்துக்கள் வேறுபட்டால் நேரடியாய்க் கேட்டுத்
தெரிந்துகொண்டால் உள்ளம் தெளிவாகும்! தேக்கிக்
கருகவிட்டால் நிம்மதியைப் பந்தாடிப் பார்க்கும்!
உருக்குலையும் ஒற்றுமை தான்.

கூட்டுக் குடும்பம் கயிற்றில் கழைக்கூத்து
காட்டுகின்ற வித்தைதான்! ஆனால் பழகிவிட்டால்
வேற்றுமையில் ஒற்றுமை பூத்து மணம்பரப்பும்!
வீட்டின் ஒளிவிளக்கே அஃது.

Monday, August 01, 2011

ஏனிந்த நிலை?

வேண்டாத தெய்வமில்லை! போகாத கோயிலில்லை!
ஆனாலும் வாழ்வில் துயரம் குறையவில்லை!
தானாக மாறுமா? காலந்தான் மாற்றுமா?
கானல்தான் வாழ்வா? விளம்பு.

கோபம் தவிர்!

இதமான கோபம் உடன்மறக்கச் செய்யும்!
மிதமான கோபம் முகம்சுழிக்க வைக்கும்!
பதறவைக்கும் கோபம் வெறுப்பைத்தான் கூட்டும்!
பதராக்கும் கோபம் தவிர்.

பட்டறிவே துணை!

கட்டிக் கொடுக்கும் உணவும், அறிவுரையாய்க்
கற்றுக் கொடுக்கின்ற சொல்லும் ஒருவருக்(கு)
எத்தனை நாள்கள் நிலைக்கும்? அவரவரின்
பட்டறிவே வாழ்வின் துணை.

புண்படுத்தும் முள்!

நன்றி, விசுவாசம் இந்த இரண்டையும்
இங்கே புறக்கணித்து வாழும் மனிதர்கள்
என்றும் மனிதரல்ல! அந்த உருவத்தில்
புண்படுத்திப் பார்க்கும் முள்.

இத்தகைய கருவி வந்துவிட்டால்?

உள்ளத்தில் ஊசலாடும் எண்ணத்தைக் கண்டறிந்து
துல்லியமாய்க் காட்டும் கருவி உருவானால்
இவ்வுலக வழ்வில் நடிப்போர் முகத்திரையைக்
கவ்விக் கிழித்துவிடும் காண்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரின்
கள்ள மனந்தன்னைக் காட்டிக் கொடுத்துவிடும்!
நல்லவர்யார்? கெட்டவர்யார்? என்றே தெரிந்துவிடும்!
இல்லமெல்லாம் போராட்டந் தான்.

உட்பகை மட்டும் வெளியே தெரிந்துவிட்டால்
கட்சிகளின் வன்முறை நாணித் தலைகுனியும்!
எப்பொழுதும் சண்டையும் சச்சரவும் கூட்டணி
கட்டிச் சலசலக்கும் வீடு.