Sunday, October 29, 2017

GREETINGS FROM CO BROTHER
---------------------------------------------------
Every time I go through your poems
I really astonish on your continued
restless work and I get
real zeal & interest.
 Urs' is really fantastic & appreciable.
All the best! TKU.

D.Sounder Rajan


Friday, October 27, 2017


நாமே மருந்து! 26.10.17

நினைத்துவிட்டால் சிக்கலைச் சிக்கலாக்கும்  உள்ளம்!
நினைத்துவிட்டால்  ஒன்றுமில்லை என்றாக்கும்! சிந்தித்தால்
நோய்களும் நாமே! மருந்துகளும் நாமேதான்!
வாழ்க்கையை வாழப் பழகு.


கன்னித்தமிழ்

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.
--------------------------------------------------
நற்றிணையில் மூழ்கிய  நங்கையே! நீஎனக்குச்
சற்றே குறுந்தொகை தந்தால் மகிழ்ந்திடுவேன்!
அற்புத ஐங்குறு நூறாக நான்தருவேன்!
பத்தில் பதிற்றுப்பத் தின்மேல்நான் பற்றுவைத்தேன்!
அப்பப்பா அந்தக்  குளம்படிச் சத்தமுடன்
சந்தப் பரிபாடல் ஆர்வமுடன் நான்படித்தேன்!
 கற்றவர் போற்றும் கலியும்,அகம்புறம்
கட்டுவைத்தே எட்டுத் தொகையாக்கித் தந்துவிட்டேன்!
கற்கண்டே கன்னித் தமிழ்.


திரைப்படமா உரைகல்?

வேரற்ற வாதத்தை வேலையற்ற கட்சிகள்
சாரமின்றி மேடையிலே பேசி பரபரப்பை
ஊரணியாய் ஊற்றெடுக்க வைத்தார்! பரிதாபம்!
யாரோ திருப்தியில்! காண்.

திரைப்படத்தில் காட்டும் கருத்துகள் எல்லாம்
நிலைகுலைய வைக்குமென்றால் பொம்மையா ஆட்சி?
மலைக்கின்றார் நம்பிக்கை தன்னை இழந்தே!
கலங்காமல் நிற்பாய் நிமிர்ந்து.

அண்மையில் கட்சியோ தேர்தலில் தோற்றதே!
அங்கே திரைப்படத் தாக்கமா? வேறெதுமா?
நன்னெறியும் நேர்மையும் வெற்றியின்  பின்னணியாம்!
அஞ்சி நடுங்காதே நீ.

கடகட

உருளை உருள உருள உருண்டே
உருண்ட உருளை கடகட சத்தம்
உருளை உருண்டதன்  உராய்வில் உருள
உருளச் செவியில் ஒலி.

Thursday, October 19, 2017


மும்மொழி தேவையில்லை

அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியும், எல்லோரும்
தொன்று தொட்டுப் பேசுகின்ற ஆங்கிலமும்
நன்முறையில் பள்ளிகளில்  கற்பதுவே போதுமே!
இன்னொன்றாய் இந்தியைக் கட்டாயம் கற்கவேண்டும்
என்றால் பிணக்குதான் சொல்.

வடநாட்டுப் பள்ளிகளில் தாய்மொழி இந்தி!
சிறப்புமொழி இந்தி! ஆங்கிலம் சேர்த்தால்
 என்றும் இருமொழிதான் அங்குள்ளோர்  கற்பார்!
வடநாட்டில் மும்மொழியா? சொல்.

இருமொழிதான் பள்ளிகளில்! மூன்றாம் மொழியை
விரும்பினால் இங்கே தனியாகக் கற்க
இருக்கிறதே அங்கங்கே கற்கும் வசதி!
கருத்துடன் கற்கலாம் அங்கு.

இந்திய நாட்டில் வடக்கில் இருமொழியும்
செந்தமிழ் நாட்டிலே மும்மொழியும் என்றுரைத்தால்
பிஞ்சு மழலையும் ஏளனமாய்ப் பார்க்கும்!
செந்தமிழ் துள்ளும் சினந்து.


தொன்மை

எம்மொழி செம்மொழி!   செம்மொழி செந்தமிழ்!
எம்மொழியும் எம்மொழிக் கீடில்லை இங்கேதான்!
எம்மொழியின் தொன்மையோ இம்மொழிக்கோ அம்மொழிக்கோ
இம்மியும் கிட்டாது சொல்.


உருவுகண்டு எள்ளாமை!

மலைகளைத் தாண்டி நதிகளைத் தாண்டி
அலைகளகத் தாண்டி வெளிகளைத் தாண்டி
மலைத்தே அடியெடுத்து வைத்தபோது புல்லின்
இலைதடுக்கி வீழ்ந்தேன் அங்கு.


கவனித்தல் நற்பண்பு!

LISTEN TO OTHERS!

மற்றவர்கள் பேச்சைநாம் உன்னிப்பாய்க் கவனித்தால்
மற்றவரும் நம்பேச்சை இங்கே கவனிப்பார்!
மற்றவர் பேச்சைக் கவனித்தல் நற்பண்பாம்!
நற்பண்பை என்றுமே போற்று.



தீபாவளி வரவு செலவே!

மக்களை நம்பி உழைப்பால் பொருள்களை
உற்பத்தி செய்தேதான் திட்டமிட்டு நாள்பலவும்
விற்பனைச் சந்தையில்  வந்து குவிக்கின்றார்!
மக்களும் தங்கள் குடும்பம் குழந்தைகள்
பற்றுடன் அங்காடி அங்காடி யாயேறி
விற்கும் பொருளை விருப்புடன் வாங்குகின்றார்!
உற்பத்தி செய்த பொருளும் விற்கிறது!
மக்கள் மகிழ்கின்ற நாள்.

மக்களிடம் உள்ள பணத்தைப் பகிர்ந்தளித்து
மக்கள் உழைப்பால் விளைந்த பொருள்களை
அக்கறையாய் வாங்கி் மகிழ்கின்றார்! மக்களுக்கு
மக்கள் கைகொடுக்கும் பொன்னாளாய் எண்ணுவோம்!
சுற்றமுடன் சேர்ந்து மகிழ்ந்து.

நரகா சுரனை நினைத்தேதான் நாட்டில்
எவருமே கொண்டாட்டம் போடுவதில்லை! எல்லாம்
புராணக் கதைகளே! ஏதோ மகிழ்வார்!
வரவு செலவுதான் சொல்.



மும்மொழித் திட்டம் தேவையா?

வன்முறை, ஆபாசம் மற்றும் குடிபோதை
இங்கே திரப்படத்தின் மும்மொழித் திட்டமாக்கிக்
கொண்டாட்டம் போடுகின்ற போக்கோ சரியல்ல!
 இந்த எதிர்மறைச் சிந்தனையைத் தூக்கியெறி!
மன்பதையைச் சீர்திருத்தப் பார்க்கின்றோம் என்றேதான்
கண்முன்னே சீரழித்துப் பார்க்கின்றார்! ஆக்கபூர்வ
நன்மைக்கு வித்தூன்றப் பார்.

பட்டாசு பாத்து!

தீபாவளி வந்தாச்சு!
கொண்டாட்டமும் வந்தாச்சு!

வண்ண வண்ண மத்தாப்பு
வகை வகையான பட்டாசு
இங்கு மங்கும் சுடுவாங்க
எங்கெங் கோ வெடிப்பாங்க!

வேடிக்கை பாத்தாலும்
எச்சரிக்கை வேணுங்க!
எந்தப் பக்கம் என்னவரும்?
எப்படித்தான் வந்துபோகும்?

யாருக்கும் தெரியாது!
ஒன்னுமிங்கே புரியாது!
காயம்பட வேணாங்க!
கருத்தோட கொளுத்துங்க!

எட்ட நின்னு கொளுத்துங்க!
சூதா னமா  கொளுத்துங்க!
காவல்துறை எச்சரிக்கை!
நன்மைக்கே! நன்மைக்கே!

விபத்தில்லா தீபாவளி!
வீட்டுக்கெல்லாம் நிம்மதி!

Sunday, October 15, 2017


வசந்தா பாட்டிக்குப் பிறந்தநாள்

வாழ்த்துப்பாடல்

17.10.2017 ( அகவை 63)

எங்கள் பாட்டி பிறந்தநாள்
நாங்கள் மகிழும் சிறந்தநாள்

பாடம் சொல்லித் தருவார்கள்
பண்பைச் சொல்லித் தருவார்கள்

அன்பு பாசம் பொழிவார்கள்
 அறிவுக் கதைகள் சொல்வார்கள்

விருப்ப மான உணவுகளை
ஊட்டி ஊட்டி மகிழ்வார்கள்

எல்லோ ருக்கும் நல்லவர்தான்
எங்கள் பாட்டி வல்லவர்தான்!

வசந்தா பாட்டி ஆசிகளை
வணங்கி நாங்கள் கேட்கின்றோம்

ஆசிகளை நாடும் பேரன் பேத்திகள்

சுசாந்த் ஸ்ரீராம்-- நிகில் அபிசேக்--
வருண் ஆதித்யா-- கீர்த்தனா
கிருத்திக் ஆகாஷ்

Saturday, October 14, 2017


தரமே விற்பனை! அழகிலில்லை!

விளம்பரத்தில் நாளும் நடிப்போரைப் பார்த்தே
மளமள வென்று பொருள்களை வாங்கும்
பழக்கமோ இல்லை! நீடித் துழைக்கும்
தரம்பார்த்தே வாங்குகின்றார் இங்கு.

மயக்கும் அழகிலில்லை! ஏந்தும் புகழிலில்லை!
 இரக்கமின்றி ஆட்டுகின்ற செல்வாக்கில்  இல்லை! 
உயர்ந்த தரமும் உழைப்பும் இருந்தால்
கரம்நீட்டி வாங்குவார் காண்.

வாங்கும் பொருள்களைக் கட்டும் பொருள்களைத்
தாங்கும் செலவினமும்  வாங்கும் பொருள்விலையில்
பாங்காகச் சேர்த்தேதான் வாடிக்கை யாளர்கள்
ஏங்க சுமையேற்றி விற்பார்! எவர்கேட்டார்?
தூங்கும் செலவுகளைச் சேர்த்து!


தூக்கம் ஏது?

அமைதியான உள்ளமா! ஆழ்ந்த தூக்கம்!
அமளியான உள்ளமா! தூக்கமே இல்லை!
குமுறல்,குடைச்சல், உளைச்சல் இணைந்தே
அமுக்கினால் தூக்கந்தான் ஏது?


செய்தித்தாள் ஏனிப்படி?

முன்பெல்லாம் நாளும் முதல்பக்கம் செய்திவரும்!
இன்றிங்கே எல்லாம் விளம்பரங்கள் ஆளுதடா!
கண்டால் எரிச்சல்தான் மிஞ்சுதடா! செய்திகள்
பின்னணியில் நிற்க விளம்பரங்கள் முன்னணியில்
கொண்டாட்டம் போடும் நிலை.

சார்புநிலை!

தன்னந் தனியனாய் யாரையும் சாராமல்
மண்ணுலகில் வாழ்ந்திடுவேன் என்றேதான் சூளுரைப்பார்!
மண்ணக வாழ்க்கையோ சார்ந்திருக்கும் சூழ்நிலையைக்
கொண்டுவந்து முன்னிறுத்தும்! கூறு

கோயில்!

கோயிலைச் சுற்றினாலும் சுற்றாமல் வாழ்ந்தாலும்
நாலிரண்டும் எட்டென்றே நாலும் நடந்தேறும்!
நாலிலே கெட்டதும் நல்லதும்  தோள்கொட்டும்!
கோயிலும் வாழ்க்கையும் வேறு

செருக்கைக் களை!

கல்விச் செருக்கெனில் கண்மண் தெரியாது!
செல்வச் செருக்கெனில் ஆணவம் கூத்தாடும்!
துள்ளும் பதவிச் செருக்கெனில் பேரழிவு!
உள்ளம் சமநிலை கொள்.

Friday, October 13, 2017


TRANSLATION AS TAMIL POEM

IF YOU HAVE TEARS PREPAE TO SHED THEM NOW.

JULIUS CEASER
SHAKESPEARE

வறுமைப் பிழிந்தெடுக்கும் கோலத்தைப் பார்த்தால்
வெறுப்பில் அழுகை வெடிக்கும்-- நறுந்தமிழே!
உன்கண்ணில் நீரிருந்தால் கண்ணீரை இப்பொழுதே
சிந்து! மனிதநேயம் அஃது.




ஆங்கிலம்-- தமிழ் மொழியாக்கம்

ALL THE PERFUMES OF ARABIA CANNOT SWEETEN THIS LITTLE HANDS.

SHAKESPEARE-- MACBETH

அரபுநாட்டில் உள்ள  நறுமணம் வீசும்
பொருளனைத்தைத் தேய்த்தாலும்  அந்தக்--கருஞ்செயல்
செய்த சிறுகைகள் வாசனை வீ சாது!
செய்தசெயல் அப்படி! செப்பு.



ஆயிரம்தேள்கள்

THOUSANDS OF SCORPIONS GNAWING AT MY HEART.

SHAKESPEARE- MACBETH

காரண மானவரோ கண்ணயர்ந்து தூங்குகின்றார்!
காரணத்தின் காரணியோ ஆயிரம் தேள்களாய்ச்
சூழவந்தே உள்ளத்தைக் கொட்டியதை யாரறிவார்?
சீரழித்த சூழ்நிலையே! சொல்.


டெங்கு- எச்சரிக்கை! (09.10.17)

நன்னீரில் உற்பத்தி யாகும் கொசுக்களால்
டெங்கு பரவுதென்றே சொல்கின்றார்-- நம்பங்காய்த்
தண்ணீரைத் தேங்க விடாமல் தடுக்கவேண்டும்!
டெங்கைத் தவிர்க்கலாம் நம்பு.

நிலவேம்பு வேர்ப்பொடியை தண்ணீரில் சேர்த்துக்
கலந்தே இருடம்ளர் ஒன்றாகும் மட்டும்
இளஞ்சூட்டில் சுண்டவே காய்ச்சிப் பருகு!
கலங்கவைக்கும் டெங்கைக் குணப்படுத்தும் நல்ல
மருந்தென்றே சொல்கின்றார் கேள்.

டெங்கைப் பரப்பும் கொசுக்கள் காலையில்
வன்முறையை ஏவும்! எதிர்ப்பு வலிமை
நம்முடம்பில் இல்லையென்றால் பாதிக்கும் நம்மை!
அன்பே! கவனமுடன் வாழ்.


கல்லும் சொல்லும்

கல்லால் அடித்து ரணப்படுத்தி னாலிங்கே
சுள்ளென்றே உள்ளம் வலிக்காது! தாங்கலாம்!
சொல்லால் அடித்தப் புயல்வேகம் தாக்கியே
உள்ளத்தைச் சுக்குநூறாய் ஆக்கிச் சிதைத்துவிடும்!
சொல்  ரணப்படுத்தும் சொல்.


அரங்கேற்றம்

அவரவர் பிள்ளை அவரவர் பார்க்க
சுவரை எழுப்பி இயன்றதைத் தந்தே
அவரவர்க் கேற்பவே பன்முக ஆற்றல்
களத்திலே காட்ட  பயிற்சி வகுப்பில்
பரபரப் பாகவே சேர்ப்பார்! குழந்தை
விரைந்து விரைந்தே ஓடுகின்ற காட்சி
அரங்கேறும் கோலத்தைப் பார்.


ஊழலோ ஊழல்!

ஊழலோ ஊழலென ஊழலை ஊழலோ
ஊழலாய் ஊற்றெடுக்க விட்டுவிட்டே ஊழலும்
ஊழலும் ஒன்றுடன் ஒன்றாகி ஊழல்கள்
ஊர்வலம் ஊழல் மயம்.

பண்புகளே வேர்

எட்டடுக்குக் குச்சுவீட்டின் பண்புக் குடிமகனாய்
இத்தரணி வாழ்விலே மாறிவிட்டு -- அப்பாநீ
ஏழடுக்கு மாளிகையில் நாளை குடியேறு!
வாழவைக்கும் பண்புகளே வேர்.

Sunday, October 08, 2017




கிடைத்த வாழ்வை ரசி!

மரத்திலே மாங்கனிகள் தொங்குகின்ற காட்சி!
சரக்கென்றே கல்லெறிந்தேன் வீழ்ந்ததோ ஒன்று!
உயரத்தில் உள்ளதை உள்ளம் விரும்ப
விருட்டென்றே இன்னொரு கல்லெறிந்தேன்! அக்கல்
உலுக்கியது கண்ணிலே வீழ்ந்து.

இருப்பிடமே நன்று!

கிழக்குவேண்டாம் என்றேநான் தெற்கில்  நகர்ந்தேன்!
உளம்வெறுக்க மேற்கில் நடந்தேன்! நடுங்கித்
தளர்ந்தே வடக்கிலே சென்றேன்! மயங்கிக்
கிழக்கிலே மீண்டும்நான் வீழ்ந்தேன்! இந்தக்
கிழக்கே திருப்தி உணர்

Thursday, October 05, 2017


கால்பந்து

வாழ்க்கை விளையாட்டில் நாளும் உதைபடும்
சூழ்நிலையில் கால்கள் உருட்டிவிடும் பந்தாக
வாழ்கின்றேன்! இப்பக்கம் அப்பக்கம் என்றேதான்
பாழும் உயிர்துடிக்கத் தான்.

 மண்பானை

உள்ளும் புறமும் குளிர்ச்சியாய் நீஇருக்கும்
நல்ல இரகசியம் என்னவோ? மண்பானை
சொல்வாயா? என்றுகேட்க பானையோ மாந்தனே!
இவ்வுலக மண்ணில் தொடங்கியே மண்ணிலே
நல்லடக்கம் ஏற்பேன்! இதையுணர்ந்தேன்! வாழ்விலே
உள்ளகத்தைச் சூடாகா வண்ணம்நீ பார்த்துக்கொள்!
நல்லவண்ணம் வாழலாம் பார்.

Wednesday, October 04, 2017


பகைப்பார்!

பிடிக்காத ஒன்று நடந்திடும் போது
பிடித்ததைப் போல நடிப்பதே நன்று!
பிடிக்கவில்லை என்றே உரைத்தால் பகைமை
கொடிகட்டி நிற்கும் உணர்.


(அ) நியாயம்!

நியாயத்தின் முன்னே அகரத்தைச் சேர்த்தே
நியாயத்தின் பண்புருவை நாளும் சிதைத்தே
நியாயம் இதுதான் எனக்கூறும் காட்சி
நியாயமா? செந்தமிழே! சொல்.

கரணம்!

மனமெல்லாம் நாளும் ரணப்பட்டு வாடி
மரணக் கிணற்றிலே வண்டிசுற்றும் கோலம்
மயக்கத்தைத் தந்தே மிரளவைத்துப் பார்க்க
கரணம் அடிக்கின்றேன் காண்.


அக்கா திருமதி.லெட்சுமி முத்துவீரன் அவர்களுக்குப்
பிறந்தநாள் வாழ்த்துப்பா!

02.10.2017

எங்கள் குடும்பத் தளபதி!
எல்லோ  ருக்கும் வழிகாட்டி!

அத்தான் முத்து வீரனின்
அருமை மனைவி லெட்சுமி!

இல்லறந் தன்னில் நல்லறத்தை
ஏற்றே வாழும் தமக்கைதான்!

நான்கு மகன்கள் அன்பினிலே
நாளும் திளைக்கும் அம்மாதான்!

மருமகள் நால்வர் போற்றுகின்ற
மாமி யார்தான் என்தமக்கை!

செல்லப் பேரன் பேத்திகளின்
பாசம் பொழிய வாழ்கின்றார்!

தம்பிகள் தங்கை நாத்தனார்கள்
தென்றல் உறவில் திளைப்பவராம்!

உற்றார் உறவினர் மற்றவர்கள்
உறவில் கலந்தே மகிழ்கின்றார்!

வாழ்க வாழ்க வாழியவே!
வண்டமிழ் போல வாழியவே!

ஆசிகளை வேண்டும்
மதுரை பாபாராஜ்
வசந்தா

வேண்டவே வேண்டாம்!

வாழ்வில் ஒருவயதில்  ஆடை அணிகலன்கள்
கோலச் சுமையென்றே நம்மைக் கருதவைக்கும்!
தேவைக் கதிகமாகி இங்கே ஒதுக்கிவிடும்!
மேலும் எதற்குமே புத்தாடை வாங்கிட
வேண்டாம் என்றே மனமோ அலறுகின்ற

கோணம் உறவாடும்! கூறு.



எல்லாமே எல்லார்க்கும்!

ஆத்திகர் என்பதால் சாதகமும் வாழ்க்கையில்
நாத்திகர் என்பதால்  பாதகமும் தோன்றாது!
ஊற்றெடுக்கும் சாதகத்தை பாதகத்தை எல்லோரும்
ஏற்கவேண்டும் தாயே! உணர்.

அணுகுமுறை

உன்னை
விறகென்றேன்
சுட்டெரித்தாய்!
வீணை என்றேன்
இன்னிசை பொழிந்தாய்!