Saturday, February 21, 2009

கம்ப ராமாயணக் காட்சி

--------------------------------------
இராமர் இலக்குவர் மரவுரிக் கோலம் கண்டு
பொதுமக்களின் துயரம்.
============================================
"மண்கொடு வரும் என வழி இருந்தது யாம்,
எண்கொடு சுடர்வனத்து எய்தல் காணவோ ?
பெண்கொடு வினை செயப்பெற்ற நாட்டினில்
கண்கொடு பிறத்தலும் கடை" என்றார் சிலர்.(1884)
==================================================
அரசுரிமை ஏற்று மணிமகுடம் தாங்கி
அரசாள ராமன் வருவான்பார் என்றே
அரண்மனையில் காத்திருந்தோம்! எங்களது எண்ணம்
கரைந்தே அழிந்தது காண்.

கானகம் நோக்கியவன் செல்கின்ற காட்சியைக்
காணவேண்டும் என்பதற்கா காத்திருந்தோம் நாங்களிங்கே!
ஊனமணப் பெண்ணின் இழிசெயலைப் பார்த்திருக்கும்
ஊன்கண்ணைத் தாங்கல் இழிவு.

மதுரை பாபாராஜ்

Thursday, February 19, 2009

நல்லரசு என்று காண்போம்?

அனைவரும் இங்கே பிறந்து வளர்வோம்!
அனைவருக்கும் வாய்ப்பு வளங்கள் -- இணையாய்
இருப்பது மில்லை! கிடைப்பது மில்லை!
இருநிலை வாட்டும் இடித்து.

இயற்கை தருகின்ற நல்வளத்தை எல்லாம்
சுரண்டிப் பிழைக்கும் தனிமனிதக் கொள்ளை
வளர்ந்து தழைப்பதைக் கண்டும்கா ணாமல்
அரசுகள் உள்ளதேன்? சொல்.

நகரத்தைப் போல கிராமங்கள் எல்லாம்
அகவளர்ச்சி மற்றும் புறவளர்ச்சி கண்டு
சிறப்பதற்குத் திட்டங்கள் நாள்தோறும் வேண்டும்!
தடைகளை நீக்கவேண்டும்! சாற்று.

வேண்டியவர் வேண்டாதோர் பார்வை விலகவேண்டும்!
தூண்டிலிடும் வன்முறைப் போக்கு மறையவேண்டும்!
தூங்கும் நடுநிலையைத் தட்டி எழுப்பவேண்டும்!
தூங்கவைக்கும் கூட்டத்தைச் சாடு.

கல்வியில் சொத்தில் சமவாய்ப்பைத் தந்துவிட்டால்
நல்லவரும் வல்லவரும் நாடும் தலைநிமிரும்!
எல்லோரும் எல்லாமும் பெறுவதற்குப் பாடுபடு!
நல்லரசு என்றுகாண்போம் ? சொல்.

அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கிவிட்டால் இங்கே
தினையளவும் பேதமற்ற நாடாக மாறும்!
அனைவரும் என்றும் சமத்துவத்தைக் காண்பார்!
மனைதோறும் நிம்மதிதான்!சொல்.

மதுரை பாபாராஜ்

கம்பராமாயணக் காட்சி

கம்பராமாயணக் காட்சி
----------------------------------------
வசிட்டன் மனநிலை
(இராமன் இலக்குவன் மரவுரிக் கோலத்தில் )
----------------------------------------------------------------------
அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான்;
பொன் அரைச் சீரையின் பொலிவு நோக்கினான்;
என்இனி உணர்த்துவது? எடுத்த துன்பத்தால்,
தன்னையும் உணர்ந்திலன்,உணரும் தன்மையான்.(1857)
===============================================================================
மரவுரி ஏந்தும் இருவரையும் பார்த்தான்!
வலம்வரும் ஊனக்கண் கொண்டே -- அவர்கள்
முகத்தையும் நெஞ்சத்தை ஞானக்கண் ணாலும்
அகம்நொறுங்கப் பார்த்தான் உணர்ந்து.

மதுரை பாபாராஜ்

கம்ப ராமாயணக் காட்சி

கம்ப ராமாயணக் காட்சி
--------------------------------------
இராமனுக்கு இலக்குவன் மறுமொழி
-------------------------------------------------------------
"நீர் உள எனின் உள மீனும் நிலமும்;
பார்உள எனின் உள யாவும்; பார்ப்புறின்
நார்உள தனு உளாய்?நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம்?அருளுவாய்!" என்றான்.( 1851)
===============================================================================
நீர்நிலைகள் உள்ளதால் மீன்களும் பூக்களும்
பாரில் உயிர்வாழும்!பூமி இருந்தால்தான்
சீராய் உயிரினங்கள் வாழுமண்ணா! எங்களுடன்
யாரிருந்தால் வாழ்வோம்?பகர்.

தாய்க்கு நிகரான சீதையும், நானுமிங்கே
யாரிருந்தால் நிம்மதியாய் வாழ்ந்திருப்போம்?-- நேர்மையின்
ஊற்றே! நீங்களே கூறுங்கள்! என்றேதான்
கேட்டான் இலக்குவன் தான்.

மதுரை பாபாராஜ்

கம்ப ராமாயணக் காட்சி

--------------------------------------
சுமித்திரையிடம் இராம இலக்குவர் விடைபெற்றுச் செல்லுதல்
---------------------------------------------------------------------------------------------------
இருவரும் தொழுதனர்;இரண்டுகன்று ஒரீஇ
வெருவரும் ஆவினின், த்தையும் விம்மினாள்;
பொறு அரும் குமரரும் போயினர் புறம்
திரு அரைத்துகில் ஒரீஇச் சீரை சாத்தியே. (1847)
=================================================================
தாய்ப்பசுவின் கண்முன் ஒருசேர ஒரேநேரம்
சேய்க்கன்று இரண்டும் பிரிந்துசெல்லும் கோலத்தை
பார்ப்பதுபோல் தேம்பி நடுங்கி அழுதிருந்தாள்!
தாய்மனம் நொந்தது பார்.

மதுரை பாபாராஜ்

கவிதை விருந்து

மருந்துக்கு ஏதோ கிடைக்குமென்றே எண்ணி
நெருங்கினேன்!தொட்டேன்!தயங்கித் தயங்கி!
விருந்தே கொடுத்தாள் திகட்டத் திகட்ட!
உருகினேன் பாவினத்தில் நான்.

மதுரை பாபாராஜ்

இதுதான் உண்மை

பிறந்தார்!வளர்ந்தார்! சிறப்பாக வாழ்ந்தார்!
இறந்தார்!நெருப்பில் கலந்தார்!கரைந்தார்!
உறவுகள் எங்கே? அவரவர்க்கு வேலை!
பறந்தார்!விரைந்து!விரைந்து.

மதுரை பாபாராஜ்

Sunday, February 15, 2009

அரவணைப்பின் இன்பம்

தாய்ப்பறவை,கூட்டில் எதிர்பார்த்துக் காத்திருக்கும்!
சேய்ப்பறவை செல்லும் சிறகுக்குள்--சேயிழையாள்
என்னவளின் கைகளுக்குள் நானும் அதுபோல
சென்றேன்!நெகிழ்ந்தேன்!மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

தெளிவற்றக் கண்ணோட்டம்

உரிமை களையும் உறவு களையும்
சரியான கோணத்தில் பார்க்கும் -- தெளிவற்றக்
கண்ணோட்டம் சிக்கலுக்குள் சிக்கலை மூட்டிவிட்டுப்
பந்தாடிப் பார்த்திருக்கும் பார்.

மதுரை பாபாராஜ்

உன்னைத் திருத்து

உன்னிடத்தில் உள்ள அழுக்குகளைப் பார்க்காமல்
மண்ணகத்தில் மற்றவர்கள் ஏந்தும் அழுக்குகளைக்
கண்டிக்கும் கண்ணோட்டம் என்றும் சரியல்ல!
உன்னை முதலில் திருத்து.

மதுரை பாபாராஜ்

குழந்தை

தாயமுதம் பெற்றெடுத்த தேன்மழலைப் பிஞ்சுமொழி
வாயமுதம் பொங்கிவரும் நற்சுவையின் முன்னாலே
பாற்கடலில் பொங்கிவந்த நல்லமுதத் தேன்சுவையோ
தோற்றுவிடும் என்றேதான் சாற்று.

கனிமழலைத் தேனமுதப் பிஞ்சு வளர்ந்து
அணியணியாய் சாதனைக்கு வித்தூன்றும் போது
புனிதவதி தாயிங்கே பூரித்தே நிற்பாள்!
இனிமை இதுவென்பாள் பார்.

மதுரை பாபாராஜ்

Wednesday, February 04, 2009

கம்பராமாயணக் காட்சி -- இராமன் காடேகும் செய்தி கேட்ட மக்கள் கருத்து

"ஆளான் பரதன் அரசு "என்பார்; "ஐயன் இனி
மீளான், நமக்கு விதி கொடிதே காண்!" என்பார்;
"கோளாகி வந்தவா கொற்ற முடிதான்" என்பார்;
"மாளாத நம்மின் மனம் வலியார் யார்?" என்பார் (1801)
-------------------------------------------------------------------------------------------------------

பரதனுக்கு ஆட்சியைத் தாய்தந்த போதும்
பரதன் தனக்குரிமை இல்லா அரசை
அரசாட்சி செய்ய இசையமாட்டான் என்றே
ஒருசிலர் கூறுவார் பார்.

தலைவன் இராமனோ கானகம் சென்ற
நிலையேற்ற பின்பு நகருக்குள் மீண்டும்
வருவதற்கே ஒப்பமாட்டான்! நம்விதி இங்கே
இருக்கிறதே என்பார் சிலர்.

அணிசெய்யக் காத்திருக்கும் மங்களம் பொங்கும்
மணிமகுடம் இன்றிங்கே தீமை பொழியும்
தனிக்கோளாம் தூமகேது கோளாகி ராமன்
வனம்செல்லச் செய்ததென்பார் ! சூழ்ந்து..

இத்தகைய தீங்கினைக் கேட்டபின்பும் கண்டபின்பும்
எப்படி நம்முயிர் நீங்காமல் வாழ்கின்றோம்?
இப்படி வன்நெஞ்சர் யார்தான் இருப்பாரோ?
உற்றபழி வந்ததென்பார் நொந்து.

மதுரை பாபாராஜ்

Tuesday, February 03, 2009

கம்பராமாயணக் காட்சி

கோசலை தசரதனிடம் புலம்புதல்

கானகம் நோக்கி மைந்தன்
கடமையாய் விரைந்தே செல்வான்!
தேனகக் கணவன் நீயோ
திகைத்திட வைத்து விட்டு
வானகம் நோக்கிச் செல்வாய்!
வாழ்விலே கணவன் மைந்தன்
மான்விழி என்னை விட்டே
மறைதலும் தருமம் தானா?

மதுரை பாபாராஜ்

லூட்டியில் இன்பம்

தாத்தாவைப் பாட்டியைத் தங்கள் விருப்பம்போல்
ஆட்டிப் படைக்க குழந்தைகள் -- போட்டிபோட்டு
ஆட்டித்தான் வைப்பார்கள் ! கோபமே வந்தாலும்
லூட்டியில் இன்புறுவார் பார்.

மதுரை பாபாராஜ்

நினைப்பதில் தவறில்லை

முதுமையில் தன்கணவன் தொந்தரவாய் மாறி
வெறுப்புக்கே வித்திடும் போது -- நறுந்தேன்
மனைவியும் அன்பன் தனக்குமுன் செல்ல
நினைப்பாள் ! தவறில்லை! சாற்று.

இருந்தால் அனுசரிக்கும் பக்குவம் வேண்டும்!
பெருந்தன்மைப் பண்பில் திளைத்து -- உருவாகி
நடக்கின்ற சூழ்நிலைக்குத் தன்னையே மாற்றி
நடந்துகொண்டால் என்றும் நலம்.

மதுரை பாபாராஜ்

பொருளில்லார்க்கு

மாத வருமானம் நிற்காமல் வந்தநாளில்
வேதனை இல்லை வசந்தந்தான்-- மாத
வருமானம் நின்றேதான் ஓய்வெடுக்கும் போது
நெருடலுடன் கூட்டணிதான் வாழ்வு.

மதுரை பாபாராஜ்

பொம்மை

இவரா ! அவரா! அனைவருமே என்னைக்
கவண்கற்கள் சொற்களால் தாக்கித் -- துவள்கின்ற
காட்சியைக் கண்டு ரசிக்கின்றார்! பொம்மைபோல்
தாக்குதலைத் தாங்குகின்றேன் ! சாற்று.

மதுரை பாபாராஜ்

கால்கள்!கால்கள்!கால்கள்!

இத்தனைக் கால்களும் எங்குதான் செல்லுமோ?
இத்தனைக் கால்களும் எங்குதான் நிற்குமோ?
அத்தனைக் கால்களும் சாதனையின் வித்துக்கள்!
அப்பா ! நடைக்கேது ஓய்வு?

மதுரை பாபாராஜ்

Sunday, February 01, 2009

வாழ்வின் விளக்கு

உள்வாங்கும் எண்ணத்தில் நல்லதை,கெட்டதை
தெள்ளத் தெளிவாகச் சிந்தித்தே -- உள்ளத்தில்
நல்லதைக் கொள்ளவேண்டும்! கெட்டதைத் தள்ளவேண்டும்!
நல்லதே வாழ்வின் விளக்கு

மதுரை பாபாராஜ்

இவர்தான் கெட்டவர்

நல்லநல்ல சிந்தனையை உள்வாங்கித் தங்கவிட்டால்
நல்லவராய் என்றும் வளர்ந்திடலாம் -- பொல்லாத
புற்றரவச் சிந்தனையை என்றுமே தங்கவிட்டால்
கேட்டவரை மாறிடுவார் பார்.

மதுரை பாபாராஜ்

நிந்தனைக்கே ஆளாவார்

தான்தான் பரந்தமனம் கொண்டவர் ! மற்றவர்கள்
ஈனமனம் கொண்டவர்கள் என்றேதான் -- ஊனமனச்
சிந்தனையைத் தொற்றிப் படர அனுமதித்தால்
நிந்தனைக்கே ஆளாவர் சொல்.

மதுரை பாபாராஜ்