நல்லரசு என்று காண்போம்?
அனைவரும் இங்கே பிறந்து வளர்வோம்!
அனைவருக்கும் வாய்ப்பு வளங்கள் -- இணையாய்
இருப்பது மில்லை! கிடைப்பது மில்லை!
இருநிலை வாட்டும் இடித்து.
இயற்கை தருகின்ற நல்வளத்தை எல்லாம்
சுரண்டிப் பிழைக்கும் தனிமனிதக் கொள்ளை
வளர்ந்து தழைப்பதைக் கண்டும்கா ணாமல்
அரசுகள் உள்ளதேன்? சொல்.
நகரத்தைப் போல கிராமங்கள் எல்லாம்
அகவளர்ச்சி மற்றும் புறவளர்ச்சி கண்டு
சிறப்பதற்குத் திட்டங்கள் நாள்தோறும் வேண்டும்!
தடைகளை நீக்கவேண்டும்! சாற்று.
வேண்டியவர் வேண்டாதோர் பார்வை விலகவேண்டும்!
தூண்டிலிடும் வன்முறைப் போக்கு மறையவேண்டும்!
தூங்கும் நடுநிலையைத் தட்டி எழுப்பவேண்டும்!
தூங்கவைக்கும் கூட்டத்தைச் சாடு.
கல்வியில் சொத்தில் சமவாய்ப்பைத் தந்துவிட்டால்
நல்லவரும் வல்லவரும் நாடும் தலைநிமிரும்!
எல்லோரும் எல்லாமும் பெறுவதற்குப் பாடுபடு!
நல்லரசு என்றுகாண்போம் ? சொல்.
அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கிவிட்டால் இங்கே
தினையளவும் பேதமற்ற நாடாக மாறும்!
அனைவரும் என்றும் சமத்துவத்தைக் காண்பார்!
மனைதோறும் நிம்மதிதான்!சொல்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home