Friday, July 27, 2018


திருக்குறள்
------------------------------
விருந்தோம்பல் -- 9
--------------------------------------------------------------------------------------------------
விருந்தளிக்கும் பண்பே குடும்பத்திற்கு அழகாகும்
---------------------------------------------------------------------------------------------
ஈட்டல் காத்தல் இல்லறத்தில்
விருந்தின ரோடு மகிழ்வதற்கே!

வீட்டில் விருந்தினர் அமர்ந்திருக்க
அவரை விட்டுத் தனியாக
உண்பது மாபெரும் தவறாகும்!
அமிழ்தே எனினும் நஞ்சாகும்!

விருந்தின ரைத்தான் உபசரித்தால்
வாழ்க்கை வறுமையில் அழியாது!
மலர்ந்த முகத்துடன் வரவேற்றால்
செல்வத் திருமகள் வசித்திருப்பாள்!

விருந்து முடிந்தபின் மிச்சத்தை
உண்பவர் நிலத்தில் பயிரினங்கள்
விதைக்கா மல்தான் வளர்ந்திருக்கும்!

வந்தவர் செல்ல வருவோரை
அன்புடன் வாழ்த்தி வரவேற்றால்
சான்றோர் உலகே மகிழ்ந்திருக்கும்!
அங்கே விருந்தினர் ஆகிடுவார்!

கருமித் தனமாய் இருந்தவரின்
செல்வம் அழியும் நேரத்தில்
விருந்தின் பயனே அறியாமல்
வாழ்ந்தேன் என்றே வருந்திடுவார்!

தொட்டுற வாடும் விருந்தினரைப்
பாரா முகமாய் வரவேற்றால்
மோந்ததும் வாடும் அனிச்சம்பூ
போல வாடித் தளர்ந்திடுவார்!



திருக்குறள்
------------------------------
அன்புடைமை -- 8
-----------------------------------------------
வாழ்க்கையின் உயிர்நாடி அன்பே
-------------------------------------------------------
அன்பை அடைக்கும் தாழில்லை
உருகும் கண்ணீர் காட்டிவிடும்!

அன்பில் லாதோர் தமக்குரியர்!
தன்னலம் கொண்டே செயல்படுவார்!

அன்புடை யாரோ பிறர்க்குரியார்!
மற்றவர்க் காக செயல்படுவார்!

உயிரும் உடலும் இணைந்ததுபோல்
அன்பும் வாழ்க்கையும் இணைந்திருக்கும்!

அனைவரை நாடிப் பழகவைக்கும்!
நட்பை விழுதாய்ப் படரவைக்கும்!

அறநெறி காக்கும் அன்பிங்கே
வீரத் திற்குத் துணைபோகும்!

எலும்பே இல்லா உயிரினத்தை
வெய்யில் இங்கே துன்புறுத்தும்!
அன்பே இல்லா மாந்தரையோ
அறத்தின் கடவுள் துன்புறுத்தும்!
அன்பே இல்லா வாழ்க்கையோ
பாலை நிலத்தின் பட்டமரம்
துளிர்த்தது போன்ற நிலையாகும்!

உள்ளே உள்ள இதயத்தில்
அன்பே இல்லை என்றாலோ
வெளியே உள்ள உறுப்புகளால்
பயன்கள் என்ன  சொல்லுங்கள்?




மக்கட்பேறு---7
-----------------------------------------------------------------------------------------------------
நல்லகுழந்தைகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை
----------------------------------------------------------------------------------------------------
அறிவும் ஆற்றலும் இணைந்துள்ள
குழந்தைச் செல்வம் உயர்செல்வம்!
பண்பான குழந்தையைப் பெற்றவர்க்கோ
தலைமுறை ஏழிலும் துன்பமில்லை!

நெறிகளைப் போற்றி வாழ்ந்திருந்தால்
குழந்தைகள் நல்லவ ராகிடுவார்!

மழலைக் கைகள் பிசைந்திட்ட
எச்சிச் சோறு பெற்றோர்க்கு

அமுதை விஞ்சும் சுவைதானே!
அருமை அருமை அருமைதான்!

குழந்தை உடலைத் தீண்டுவது
தழுவிய மேனிக்கு இன்பந்தான்!

மழலையைக் கேட்டு மகிழாதோர்
குழலிசை யாழிசை இனிதென்பார்!

கற்றவர் அவையில் தன்மகனோ
நிற்கும் தகுதியைக் கல்வியாலே
தந்தை தருவது கடமைதான்!

தங்களைக் காட்டிலும் குழந்தைகள்
அறிவால் உயர்ந்தால் அகமகிழ்வார்!
சான்றோர் என்றே பிறர்சொன்னால்
பெற்ற பொழுதினும் தாய்மகிழ்வாள்!

இத்தகைய பிள்ளைகள் பெற்றெடுக்க
தந்தை செய்த தவமென்ன
என்றே உலகம் வியக்குமாறு
செய்வது பிள்ளைகள் கடனாகும்!


திருக்குறள்
------------------------------
வாழ்க்கைத் துணநலம்--6
-----------------------------------------------
இல்லறம் சிறப்பது பெண்களாலே
-------------------------------------------------------
பிறந்தவீடு புகுந்தவீடு போற்றிடவே
வருவாய்க்குள் வாழ்பவளே நல்மனைவி!

பண்பற்ற இல்லாளின் இல்லத்தில்
பொன்பொருள் சேர்ந்தாலும் மதிப்பில்லை!

கற்பென்னும் மனவுறுதி கொண்டவளே
பெண்குலத்தின் ஒளிவிளக்காய்த் திகழ்கின்றாள்!

கணவனையே தெய்வமாக மதிப்பவளோ
பெய்யென்றால் பெய்துவிடும் நல்மழைதான்!

கணவனின் குடும்பத்தின் புகழ்தன்னைக்
காப்பவளே பெண்ணாவாள் மண்ணுலகில்!

மங்கையின் உடலுக்கே சிறைக்காப்பு!
உள்ளத்தின் சிந்தனைக்கு முடியாது!

பேரடக்கப் பண்புகளால் மங்கையிங்கே
காக்கின்ற நெறிமுறைதான் சிறப்பாகும்!

மண்ணுலகில் கணவனையே தெய்வமாக
எண்ணிவாழ்ந்தால் விண்ணுலகும் வாழ்த்திநிற்கும்!

கணவனின் புகழ்விளக்கைக் காக்காத
காரிகை அமைந்துவிட்டால் பகைவர்முன்
கணவருக்குச் சிங்கநடை இல்லையம்மா!

மனைவியே இல்லறத்தின் மங்கலமாம்!
பிள்ளைகள் குடும்பத்தின் அணிகலனாம்!



இல்வாழ்க்கை ---5 குழந்தைப்பாடல்
-----------------------------------------------------------------------------------------
அறவழி சிறந்த வழி பெருமைக்கு உகந்த வழி

மனைவி யுடனே இணக்கமாக
வாழ்பவன் இங்கே சிறந்தவனாம்!

பிள்ளைகள் பெற்றோர் உறவினரைப்
பேணிக் காப்பதில் வல்லவனாம்!

நல்லறம் போற்றும் துறவிகளை
வறுமைப் பிணியில் துடிப்போரை

முன்னோர் மற்றும் விருந்தினரைக்
காப்பதே அவனுக்கு அறமாகும்!

நேர்மை யான வழியினிலே
சேர்த்த பொருளை உறவோடு

பகுத்தே உண்டு வாழ்பவனின்
வாழ்க்கை என்றும் சிறப்பாகும்!

உண்மை யான அன்புடனே
நல்லறம் போற்றி வாழவேண்டும்!

பிறவழி சென்று வாழ்பவனை
அறவழி வாழ்வோன் வென்றிடுவான்!

இல்லறந் தன்னில் துறவறத்தை
ஏற்பவன் வல்லமை நிமிர்ந்திடுமே!

பழிச்சொல் இன்றி இல்லறத்தை
ஏற்று வாழ்தல் சிறப்பாகும்!

இல்லற வாழ்வை மேற்கொண்டோன்
உயர்நிலை மாந்தராய்ப் புகழ்பெறுவான்!!


திருக்குறள்
------------------------------
அறன்வலியுறுத்தல்! 4
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அறவழி சிறந்த வழி பெருமைக்கு உகந்த வழி

செல்வம் புகழும் சேர்ப்பதற்கு
அறவழி தானே சிறந்தது!

அறங்கள் செய்வது நன்மைதான்!
மறப்பது என்றும் தீமைதான்!
இயன்ற வரையில் அறச்செயல்கள்
செல்லும் இடமெல்லாம் செய்வோமே!

மனதில் கÍ[P® சுமந்தேதான்
செய்யும் அறச்செயல் பகட்டேதான்!

பொறாமை ஆசை கோபங்கள்
மனதைப் பிழியும் கடுஞ்சொற்கள்
இவைகளைத் தவிர்ப்பதே அறமாகும்!
தவிர்த்தால் வாழ்க்கை சிறப்பாகும்!

இளமையில் வேண்டாம் முதுமையிலே
அறங்களைச் செய்வோம் என்றேதான்
ஒத்திப் போட வேண்டாமே!
இன்றே செய்தல் விவேகந்தான்!

அறத்தைச் செய்வோர் உயர்ந்தவராம்!
செய்யா தவரே தாழ்ந்தவராம்!
அறத்தைத் தொடர்ந்து செய்திடுவோம்!
இந்தப் பிறவியை வென்றிடுவோம்!

அறவழிச் செயலில் புகழ்சேரும்!
பிறவழிச் செயலில் பழிசேரும்!





நீத்தார் பெருமை --3
------------------------------------------------------------------------------------
புலன்களை அடக்கு புகழின் சிகரம் நிச்சயம்
----------------------------------------------------------------------------------
ஆசையை விட்டே ஒழுக்கமுடன்
வாழ்ந்தால் புகழும் நூல்கள்தான்!
இறந்தவர் எத்தனை பேர்களென்றே
எண்ணி முடித்தல் அரிதாகும்!
அதுபோல் துறந்தார் பெருமைகளை
அளவிடல் என்றும் அரிதாகும்!

இல்லறம் துறவறம் எடைபோட்டே
உலகப் பற்றைத் துறந்தோரின்
உண்மைத் துறவின்  பெருமைதான்
உலகில் உயர்ந்தது பார்!பார்!பார்!

வலிமை என்னும் அங்குசத்தால்
அய்ம்புலன் அடக்கும் தூயவனே
வீடு பேற்றின் விதையாவான்!
ஐம்புலன் ஆசையை அடக்கியவன்
ஆற்றலின் சாட்சி இந்திரன்தான்!

செய்ய முடியாப் பெருஞ்செயலைச்
செய்து முடிப்பவர் பெரியோராம்!
முடிக்கத் தவிப்போர் சிறியோராம்!
ஐம்புலன் ஆசையை வேரறுத்தால்
வையகம் வசப்படும் உணர்வாயே!

அறிவில் சிறந்தவர் என்பதையோ
பேசும் மணிமொழி காட்டிவிடும்!
பண்பில் சிறந்த சான்றோர்கள்
கோபம் தங்க அனுமதியார்!

அனைத்து உயிரும் சமமென்றே
இரக்கம் கொண்டு வாழ்பவர்கள்
உலகம் போற்றும் சான்றோராம்!
அன்புடன் வாழும் அந்தணராம்!


திருக்குறள்
------------------------------
வான்சிறப்பு --2
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மழை இல்லையேல் உயிரினம் இல்லை

வான்மழை செழிப்பைத் தருவதாலே
வான்மழை நமக்கு அமுதந்தான்!

உணவைச் சமைக்க உதவிடுமே!
தானும் உணவாய் மாறிடுமே!

மழையோ பெய்யத் தவறிவிட்டால்
உயிரினம் பசியால் துடித்திடுமே!

மழையின் அளவோ குறைந்துவிட்டால்
உழவுத் தொழிலும் செழிக்காது

வளமாய் வாழ்ந்தோர் வளமிழப்பார்!
மழையோ இங்கே பொழிந்துவிட்டால்
வளத்தை இழந்தோர் வளம்பெறுவார்!

மேகம் மழையைப் பொழியாமல்
வேக மாக நகர்ந்துவிட்டால்

பசும்புல் நுனிகள் தழைக்காது!
அலைகடல் இங்கே வற்றிவிடும்!

வாழ்க்கை எல்லாம் வறண்டுவிடும்!
உலகின் இயக்கம் நின்றுவிடும்!

பூசை திருவிழா நடக்காது!
தான தர்மம் நடக்காது!
மனிதம் இங்கே வளராது
ஒழுக்கப் பண்பு இருக்காது!
தண்ணீர் மட்டும் இல்லைö¯ன்றால்
யாருக்கும் இங்கே வாழ்வில்லை!
 


அறத்துப்பால்
--------------------------------
திருக்குறள்
------------------------------
கடவுள் வாழ்த்து 1
-----------------------------------------------
தமிழின் தொடக்கம் அகரம்
உலகின் தொடக்கம் இயற்கை
-------------------------------------------------------
எழுத்தின் தொடக்கம் அகரந்தான்!
உலகின் தொடக்கம் இயற்கைதான்!

சான்றோர் வழியை வணங்கிடுவோம்
இல்லையேல் கற்றது வீணாகும்!

நினைக்க நினைக்க நிம்மதிதான்!
நீண்ட காலம் வாழ்ந்திடலாம்!

துன்பம் நம்மை நெருங்காது
தீவினை நம்மைச் சேராது!

ஆசை தன்னை அடக்கித்தான்
ஒழுக்கத் தோடு வாழ்ந்திடலாம்!

அவரடி பணிந்தால் போதுமே
கவலைகள் எல்லாம் நீங்குமே!

மறந்து போன மற்றவர்க்கோ
கவலைகள் நிலையாய் மாறிடுமே!

ஆசைக் கடலைக் கடப்பதற்கோ
அன்புத் தோணி சான்றோர்தான்!

சான்றோரை வணங்காத் தலைகளோ
இயங்காப் புலன்போல் பயனில்லை!

சான்றோர்  வழியில் நடந்தாலே
பிறவிக் கடலை நீந்தலாம்!


பொம்மைகள்

சாவி முடுக்கிவிட்ட பொம்மைகள்போல் வாழ்விலே
தாவித்தான் எட்டுதிக்கும் ஓடுகின்றோம் நாள்தோறும்!
சாவி வலிமை குறைந்தவுடன் நாம்தளர
ஆவி அடங்கிவிடும் இங்கு.

Wednesday, July 11, 2018


அகநக நட்பது

குறள் 786

முகநூலில் உள்ளவர்கள் உண்மையான அன்பால்
அகநூலில் நாளும் இடம்பெறுதல் வேண்டும்!
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.


நமது மண்வாசம் வாழ்த்து!

மண்வாசம் நாளும் மணக்கட்டும் நற்கொள்கைப்
பண்பாடு மற்றும் தமிழ்மண் கட்டமைப்பைக்
கண்முன்னே கொண்டுவரும் நல்முயற்சி
என்றும் தொடரட்டும் வென்று.

பகையை நகையாக்கு

பகையை நகையாக்கு!

நகைச்சுவைப் பேச்சில் சிலநேரம் சொற்கள்
பகைச்சுவை தூவுதல்போல் தோன்றும்! உள்ளம்
பகைக்கும் எதிர்மறைப் போக்கை ஒதுக்கி
நகைச்சுவையாய் எண்ணவேண்டும் சொல்.


கானலா?

புற்றீசல்  போலிங்கே சாதிமதம்  ஊன்றித்தான்
சுற்றிவரும் நேரத்தில் நாட்டில் சமத்துவம்
வெற்றரவக் கூச்சலாக மட்டுமே கேட்கிறது!
நற்றமிழே! கானலா? சொல்.



முரண்

வெளிநாட்டில் ஆலயத்தை நம்மவர் கட்டும்
தெளிவைப் பண்பாட்டைப் போற்றுகின்றார் என்போம்!
வெளிநாட்டார்  நம்நாட்டில் கட்டினால் நாமோ
தவித்து மதம்பரப்பும் வஞ்சகம் என்போம்!
புவியே! அடுக்குமா? சொல்.

உலகளந்த குறளடி



உலகளந்த குறளடி!

நாற்சீர் ஓரடியாய் முச்சீர்கள் ஓரடியாய்
ஈரடியால் வள்ளுவர் ஆக்கிப் பொதுமுறையாய்
மூன்றாம் அடியாம் மலரடியை நற்கருத்தாய்
ஊன்றியே மக்கள் அகத்தில் உலகளந்தார்!
வான்புகழ் வள்ளுவரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

முதலும் திரவம்! முடிவும் திரவம்!

திரவத்தால் சேர்ந்து திடப்பொரு ளாகி
திரவத்தில் தேங்கித் திடமாக வந்தே
உலகில் திடமாய் நடந்து திரிந்து
உழன்றே உருகி பலநிலை கண்டே
சுழன்று விழுவோம் திடநிலை சாய!
திரவ அழுகை திடத்தை நனைக்க
அரற்றிப் புலம்பி திரவக் குடங்கள்
திரவத்தை ஊற்றிக் கதறும் உறவுகள்
திரவ உருவாய் மனைவி குழந்தை
திரவம் விழியில் பெருகிப் பெருகி
கிளம்பும் திடமோ உணர்ச்சியே இன்றி
உலகைத் துறந்து உறவை மறந்து
அவலச் சுவையின் சிகரம்! தகனம்!
கரையும் கரையும் திடநிலை எல்லாம்
கரைப்பார் இறுதியாய்ச் சாம்பல் பொடியை!
திரவக் கடலில் கலப்போம்! தொடக்கம்
திரவம்! முடிவும் திரவமாக வாழ்க்கைப்
பயணம் முடியும் உணர்.



அன்றும் இன்றும்!

GRILLED ITEMS

காட்டு மிராண்டிகள் காட்டில் நெருப்பிலே
வாட்டி இறைச்சியை உண்டனர் அன்றுதான்!
நாட்டு மிராண்டிகள் இன்றோ இரும்பிலே
மூட்டவரும் தீயிலே சுட்டுத்தான் உண்கின்ற
காட்சியைக் காண்கின்றோம் காண்.


பாசமழை!

பாசம் மழைநீரைப் போலத்தான் கீழ்நோக்கிப்
பாயும்! ஒருகாலும் மேல்நோக்கிப் போகாது!
வாழ்விலே பிள்ளைகள் தங்கள் குழந்தைமேல்
காட்டுவதைப் பெற்றோர்மேல் காட்டமாட்டார்! அப்பெற்றோர்
காட்டியதும் அப்படியே! பாசமழை கீழ்நோக்கி
ஓடுமன்றி மேல்நோக் காது.

நீக்கமுடியாது!

இப்பாசம் அப்பாசம் எப்பாசம் என்றாலும்
அத்துணைப் பாசத்தை நீக்கியே வாழலாம்!
அப்பப்பா! பேரக் குழந்தைகள் பாசத்தை
எப்படி நீக்கவோ? கூறு.

ஊன்மனம்/ வான்மனம்!

காவிரி நீர்!

ஊன்மனம் தண்ணீர் தரமறுத்த கோலத்தை
வான்மனம் தந்தேதான் மாற்றியது!
கோணல் மனங்கொண்ட காரணத்தால் தேன்மழையால்
வானம் வழங்கியதை வாழ்த்து.

Bring some news!

Oh! My wandering clouds!
My beloved damselle
Living there in the far east!
If you happened to go there
Please shed some water droplets!
And say that a despondent soul
Wriggling under unbearable misery
Thinking always her and her alone!
Please bring the message on your return!
I will be waiting here anxiously!