Thursday, July 30, 2009

அரவணைப்பின் இன்பம்

தாய்ப்பறவை கூட்டில் எதிர்பார்த்துக் காத்திருக்கும்!
சேய்ப்பறவை செல்லும் சிறகுக்குள் -- சேயிழை
என்னவளின் கைகளுக்குள் நானும் அதுபோல
சென்றேன்! நெகிழ்ந்தேன்!மகிழ்ந்து.

பாட்டியே உயிரோட்டம்!

பாட்டியே உயிரோட்டம்!
---------------------------------------
அழியாத செல்வம் படிப்பைப் புகட்டி
உயிரான பேரன்கள் பேத்திகளுக் காக
உயிரைத் திரியாக்கி நாளும் உழைக்கும்
உயிரோட்டம் பாட்டி!உணர்.

நம்பினால் வாழ்வு!

--------------------------------
தனித்திறமை எல்லோர்க்கும் உண்டென்பேன்! ஆனால்
தனித்திறமை தன்னை வெளிப்படுத்தும் வாய்ப்பு
கனிந்துவர காலந்தான் நல்வழி காட்டும்!
அனைவருக்கும் வாய்ப்புண்டு நம்பு.

எம். எல்.ஏ க்களுக்கு வீட்டுமனை- தமிழக அரசு திட்டம் (தினமணி செய்தி)

========================================================================
மக்கள் குடியிருக்க வீடில்லை! சாலையில்
முட்டிமோதித் தூங்கும் அவலங்கள் -- இப்படி
நாடிருக்க சட்டமன்ற நாவலர்க்கு வீட்டுமனை
தேடிவரும் வேடிக்கை பார்.

தன்னலக் காடு!

--------------------------
பெண்களும் ஆண்களும் ஒன்றுவதே வாழ்வாகும்!
பெண்களின்றி ஆண்களும் ஆண்களின்றிப் பெண்களும்
தன்னந் தனியாக வாழ்ந்திருந்தால் வாழ்க்கையே
தன்னலக் காடாகும்! சாற்று.

இயற்கை தரும் இன்பம்

---------------------------------
என்னதான் மின்விசிறி காற்றை அளித்தாலும்
கண்ணெதிரே பச்சை மரமசைய ஏந்திவரும்
தென்றலுக்(கு) ஈடாமோ? தாயே! இயற்கைதரும்
இன்பமே இன்பம்!உணர்.

Friday, July 24, 2009

நல்லொழுக்கம் காப்போம்!

பஞ்சும் நெருப்பும் அருகில் இருந்தாலும்
கெஞ்சும் சலனத்தை வென்றேதான் -- நன்னெறியில்
வாழும் ஒழுக்கத்தைப் போற்றினால் நிம்மதி!
வாழவேண்டும் நல்லொழுக்கம் காத்து.

மதுரை பாபாராஜ்