Monday, April 17, 2017

உள்ளக் குமுறல் நல்லதல்ல!

வளர்ப்பில் அரவணைப்பா? உள்ளம் மகிழும்!
வளர்ப்பில் அடிஉதையா? உள்ளம் குமுறும்!
வளரும் குழந்தைக்குத் தேவை மகிழ்ச்சி!
தளர்ச்சி திறமைக்கு வேட்டு.

Friday, April 14, 2017

பதினாறும் பெற்று வாழ்க

பதினாறும் பெற்று வாழ்க!

கல்வி,அறிவுடன் ஆயுளும்,ஆற்றல்,
துள்ளும் இளமை,துணிவு,பெருமை
நல்வளப் பொன்னும் பொருளும்,நற்புகழும்
பல்வள மண்நிலம் நல்லொழுக்கம்,நோயின்மை
வெல்லும் முயற்சியுடன் வெற்றி எனவாழ்வில்
சொல்லும் பதினாறு செல்வங்கள் பெற்றேதான்
இவ்வுலகில் வாழ்கபல் லாண்டு.

Tuesday, April 11, 2017

சமநிலை வேண்டும்

ஆழத்தின் ஆழமும் உச்சத்தின் உச்சமும்
காலம் தருகின்ற பாடங்கள்-- ஆழத்தில்
சோர்வதும் உச்சத்தில் துள்ளுவதும் கூடாது!
வாழ்வில் சமநிலையைப் பேண்.