Thursday, June 29, 2017



சூழ்நிலையே!

எட்டுத் திசையிருந்தும் அம்புகளாய்ப் பாய்ந்துவந்து
முட்டிமுட்டித் தாக்கும் நிலையிருந்தால்-- எப்படி
உள்ளம் உளைச்சலின்றி சீராய்த் துடித்திருக்கும்?
எல்லாமே சூழ்நிலை தான்.


மழுங்கிய கணைகள்

எடுத்தேன் கவிழ்த்தேன் எனப்பேசும் மாந்தர்
தொடுக்கும் கணைகள் முனைமழுங்கி வீழும்!
மடுவை மலையாக்கி சிக்கித் தவிப்பார்!
உறுத்தலில் வாடுவார் இங்கு.

முயலும் ஆமையும்

ஊமைக் கனவுகள் வேகமாய்ச் சென்றாலும்
ஆமைக் கனவுகள் வெற்றிகாணும் நேரத்தில்
ஊமைக் கனவோ முயல்போலத் தோற்கிறது!
ஞானத்தின் வாசல் இது.

Tuesday, June 27, 2017


ஆதார்!

ஆதாரம் இல்லாமல் வாழலாம்! கண்மணியே!
ஆகாரம் இல்லாமல் வாழலாம் ! செந்தமிழே!
ஆதார் அடையாளம் இல்லாமல் நாட்டிலே
தோதாக வாழமுடி யாது.

பொருட்காட்சியல்ல!

அழகை வெளிக்காட்டும் ஆடை! அசிங்கம்!
அழகுக்( கு) அழகூட்டும் ஆடை! அழகு!
அழகை அசிங்கமாக்கி வாழாதே! உந்தன்
அழகு பொருட்காட்சி யா?





வாழ்விலே எல்லாம் இழந்தும் சிலநேரம்
தோள்தட்டும் நம்பிக்கை கைகொடுக்க முன்வரும்!
ஆழமான பள்ளமே என்றாலும் நெஞ்சுறுதி
ஆடுபோல் தாண்டவைக்கும் பார்.

வெறும் சாம்பலே!

காமக் கலசமென்பார் கன்னிக் கதலியென்பார்
ஈமச் சடங்கிலே அந்தக் கலசமோ
ஞானம் இதுவே என உணர்த்திக் கண்முன்னே
ஈனமான சாம்பலாவாள் பார்.

Tuesday, June 20, 2017

.இயற்கை தந்த நன்கொடை

மலைமுகட்டில் முகிலினங்கள் கொஞ்சி விளை யாடும்!
மரக்கிளையில் புள்ளினங்கள் இசைமீட்டிப் பாடும்!
கடலுக்குள் மீன்பிடிக்க கடற்கரையில் நாரைகள் கூடும்!
கடலலைகள் கரைதொட்டே
கடலுக்குள் மீண்டுந்தான் ஓடும்!

சோலையிலே வண்ணவண்ண மலரினங்கள் சிரித்தேதான் ஆடும்!
நீலமேகப் பரப்பினிலே வெண்ணிலாதான் தோன்றும்!
அங்கங்கே குழந்தைகள் நிலாவைத்தான் காட்டும்!
அம்மாவின் கரங்களோ மழலைக்கு அமுதத்தைத்தான் ஊட்டும்!

மலையிடையில் அருவிகளோ துள்ளிவந்து வீழும்!
அருவிகளோ நதிகளாக மாறித்தான் ஓடும்!
அலைக்கரத்தில் கயலினங்கள்
அங்குமிங்கும் தாவும்!
மீன்வலைகள் கயல்பிடிக்க எத்தனித்துச் சூழும்!

கண்கவரும் சித்திரங்கள்
இயற்கைதந்த நன்கொடை!
நன்றிசொல்லி வாழ்ந்திருப்போம்
மண்ணுலகில் நாமெல்லாம்!


விரக்தி

உடைந்து நொறுங்கி உடைந்து நொறுங்கி
உடைந்த துகள்கள் பறந்து பறந்தே
நிறைத்து நிறைத்தே இதயத் துடிப்பை
நிறுத்திக் களித்துச் சிரித்துச் சிரித்தே
உறுத்தி உறுத்தி தளரத் தளர
நடைதடு மாற நடைதடு மாற
உடைந்தேன் தெருவில் விழுந்து




மனசாட்சி

உள்ளத்தின் எண்ணத்தைச் சொன்னாலும் மற்றவர்கள்
உள்ளத்தில் ஓடுகின்ற எண்ணத்தை யாரறிவார்?
கள்ளத் தனமா? இல்லையா என்பதைச்
சொல்லும் கருவியுண்டோ சொல்.

அவரவர் நம்பும் மனசாட்சி ஒன்றே
அவரவர் சாட்சியென்பார்! நம்பவேண்டும் மாந்தர்!
தவறுகளைக் கூட தவறில்லை என்றால்
எவரென்ன செய்வார் ? உரை.

 சும!

சுமையிறக்க நாடிவந்து சொன்னபோதோ எந்தன்
இமையோ சுமைதாங்கி என்றுமே நீதான்!
சுமைதாங்கி  யாகத்தான் மாறிவிடு! என்றே
அமைதியாய்ச் சொன்னது பார்.

சுமைதாங்கி என்றும் சுமைதாங்கி யாக
சுமைதாங்கும் கல்லாக நாள்தோறும்  இங்கே
சுமையை வகைவகை யாக சுமந்து
சுமந்தே பழகவேண்டும் பார்.

தோள்கள் வலித்தாலும் நெஞ்சு துடித்தாலும்
கால்கள் துவண்டாலும் தாங்கப் பழகவேண்டும்!
தேள்கள் கொட்டினாலும் வேடிக்கை பார்க்கவேண்டும்!
பார்பார் சுமைதாங்கி பார்.

Sunday, June 18, 2017


அகமூடி நல்லதல்ல!

அகத்திலே ஒன்றும் முகத்திலே ஒன்றும்
முகமூடி போட்டுப் பழகும் உறவின்
முகத்தில் விழிக்கும் நிலையைத் தவிர்ப்போம்!
அகமூடி வாழ்க்கை இழிவு.

மெய்ப்பொருள் காண்க!
--------+-----------------------------
என்னசொன்ன போதும் சரியாய்ப் புரிந்துகொண்டால்
என்றும் உளைச்சல் நெருங்காது!---சொன்னதைத்
தப்பாய்ப் புரிந்துகொண்டால் உள்ளமெல்லாம் எப்பொழுதும்
குப்பையும் கூளமுந்தான் கூறு.

Thursday, June 15, 2017


துடிக்கின்றேன்!

காரணத்திற் கானவர்கள் கண்ணயர்ந்து தூங்குகின்றார்!
காரணப் பாட்டுத் தலைவனுக்கோத் தூக்கமில்லை!
காரணம் நெஞ்சை உலுக்க உயிரிங்கே
காரணமாய் மாறியது காண்

நாம்

என்கால்கள் உங்களுக்குப் பிCனால் வருகிறதே!
அன்பே! தெரியலையா? உள்ளம் புரியலையா?
உங்கள் உயிருக்குள் நாந்தான் உலவுகிறேன்!
என்றும் இருவரும் ஒன்று.

Monday, June 12, 2017

A claypot having milk will be ranked higher,
Than a golden pot having poison.
Its not our outer glamour, but our inner virtue that make us valuable. Gm.

பொற்கிண்ணம் ஏந்துகின்ற நஞ்சினைக் காட்டிலும்
மட்பானை உள்ளிருக்கும்
பாலே உயர்ந்தது!
அற்புத மான புறத்தோற்றம் ஏமாற்றும்!
உட்புறப் பண்பே மதிப்பு.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்

Saturday, June 10, 2017



ஒருதலை ராகம்

ஒருவரை இங்கே வாழ்த்துவதற் காக
ஒருவரைத் தாழ்த்துவது நல்லதல்ல! கண்ணே!
விருப்பு வெறுப்பை ஒதுக்கினால் நன்று!
ஒருதலை ராகமோ தப்பு.


வீடுபேறு!

வீடு விரட்ட தெருவில் நடந்துசென்றேன்!
மாடு விரட்ட தலைதெறிக்க ஓடினேன்!
தாறுமாறாய் வண்டிகள் பாய நிலைகுலைந்தேன்!
வீடுநோக்கி வந்தேன் விரைந்து.


கடலாட்டம்

கடலில் கலந்தேன்! அலையில் புரண்டேன்!
இடம்பொருள் ஏவல் அனைத்தும் மறந்தேன்!
அடடா! அடடா!  தொடுவானம் தொட்டேன்!
கடலில் விழுந்தேன் மறந்து.

தெளிவின் தொடக்கம்!

உரிக்க  உரிக்க  முழுதும் வெறுமை!
தெரியத் தெரியத் தெளிவின் தொடக்கம்!
தெளியத் தெளிய  அளிகள் பறக்க
ஒளியில் கலந்தேன் தெளிந்து.

Saturday, June 03, 2017

எல்லைக்குள் அழகு!

எல்லைக்குள் அழகு!

இயற்கை அழகே! அதனதன் எல்லை
வரையைரைக்குள் உள்ளவரை! எல்லையைத் தாண்டும்
நிலையோ அலங்கோலப் பேருருவில் அச்சம்
குலைநடுங்க வைக்கும் உணர்.

காண்பது பொய்.

அமைந்திருக்கும் சூழ்நிலையில் நாள்தோறும் உன்னை
அமைதியாக்கி வாழும் கலைகளைக் கற்றால்
அமளி மனதிலே தோன்றாது கண்ணே!
குமுறித் துடிக்கா( து) உயிர்.

வைரவிழா நாயகர்--வண்டமிழ்க் காவலர்

குறளோவியம் கலைஞருக்கு

வாழ்த்துப்பா!

03.06.2017
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கலைஞர் எழுதத் தொடங்கினால் சொற்கள்
அலைதிரண்( டு) ஓடிவந்து நின்றுதான் கெஞ்சும்!
மலைக்கவைக்கும் சந்தநடைப் பாக்களில் கொஞ்சும்!
சுவைகளோ போட்டிபோடும் சொல்.

திரைப்படமா! மேடை முழக்கமா! இல்லை
கலைஞர் கடிதமா! எங்கும் தமிழே
நிலைக்கும்! அரசியல் ஏந்தும் அறிக்கை
தழைக்கும் தமிழால் செழித்து.

நெருப்பு முனையைத் திருப்பு முனையாய்
உருவாக்கிக் காட்டிய விற்பன்னர்! ஏந்தல்!
நெருப்பாற்றை நீந்திக் கடந்துவந்த சோழன்!
அருந்தமிழ் வாழ்க்கையின் முத்து.

சோதனையின் கொம்பொடித்துச் சாதனையாய் மாற்றியவர்!
நாடறிய ஏழைகள் முன்னேறத் திட்டங்கள்
வீடுதோறும்  தந்த விடிவிளக்கு நம்கலைஞர்!
நாடுபோற்றும் நல்லவரை வாழ்த்து.

சட்டமன்ற வைரவிழா நாயகரே! செந்தமிழே!
நற்றமிழ் போற்றும் குறளோ வியங்கண்ட
அற்புதக் காவியமே! வெற்றியின் புன்னகையே!
எப்பொழுதும் வாழவேண்டும் நீ.