Saturday, January 27, 2018

27.01.2018

இணையர்:

எழிலரசன்-- சத்தியபாமா

மகன்கள்: நிகில் அபிசேக்-- வருண் ஆதித்யா

இல்லற மாண்புகளை உள்ளத்தில் போற்றியே
நல்லறம் காத்து மகிழ்ந்தேதான் வாழியவே!
பல்வளங்கள் சூழ அமோகமாக வாழியவே!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

ஆசிகளுடன்
தந்தை: பாபாராஜ்
தாய் : வசந்தா

உடன் வாழ்த்தும் இதயங்கள்
ரவி-- சுபாதேவி-- சுசாந்த் ஸ்ரீராம்

Thursday, January 25, 2018


பண்படுத்த வேண்டும்!

பண்பட்ட நற்கருத்தை அன்றாடம் சொல்பவர்கள்
பண்பற்ற சொற்களில் மாறுபட்ட கோணத்தில்
தன்கருத்தாய்ச் சொல்தல் சரியல்ல! சான்றோர்கள்
பண்படுத்திப் பார்த்தல் கடன்.

இன்றைய தேவை நல்லிணக்கம்!

சாதிமத எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைந்து
கூடி  விழாக்கள் அனைத்தையும் கொண்டாடிப்
பாடி மகிழவேண்டும்! மக்களெல்லாம் சேர்ந்துவிட்டால்
ஈடில்லா நல்லிணக்கம் நாட்டில் உருவாகும்!
ஓடி ஒளியும் வெறி.





சமையலுக்குத் துணைபுரியும்
தனம்மாள் கைவண்ணம்

பானையிலே பொங்கலோ பொங்கிவர செங்கரும்பு
பானையின் பக்கத்தில் நின்றிருக்க மேலங்கே
யானை அழகுசெய்ய காட்சியைக் கோலமாக்கி
காணவைத்தார் இங்கே பொங்கல்நாள் இன்று
தனம்மாள்! திறமையை வாழ்த்து

பெருந்தன்மை கோழைத்தனமல்ல!

யாரென்ன சொன்னாலும் சாதி மதப்பெயரை
ஊர்முழுதும் வம்பிழுக்கத் தோண்டித் துருவுகின்ற
பார்வை புதிதாய் முளைக்கிறது! ஆக்கபூர்வ
பார்வை குறுகுவதேன் சொல்

Tuesday, January 09, 2018


எல்லைகள் தொல்லைகளில்லை!

எந்த உறவெனினும் எல்லையை மீறினால்
சொந்தமும் நட்பும் பகையாக மாறிவிடும்!
என்றும் உளைச்சலின்றி வாழ்வதற்கோ எல்லையைப்
பின்பற்றி வாழ்தல் சிறப்பு.



இணக்கத்தைப் போற்று!

மனம்விட்டுப் பேசும் குணமிருந்தால் போதும்!
மனச்சுமை நீங்கும்! அமைதியே தோன்றும்!
மனப்போக்கை மாற்று!  மனிதனாக மாறு!
இணக்கமாய் வாழப் பழகு.



மூட்டைப்பூச்சியே போ!

இரவிலே மூட்டைப்பூச் சிக்கே தினமும்
விருந்தாகித் தூக்கமின்றி வாழ்கின்றோம்! எங்கே
இருந்துவரும்? எப்படித் தான்வரும்? என்றே
தெரியவில்லை! மூட்டையே! போ.

அன்பா? வம்பா?

தந்தையின் தாயின் அணுகுமுறை கண்டுதான்
அன்றாடம் பிள்ளைகள் பண்புகளைக் கற்றிடுவார்!
அன்பென்றால் தென்றலாய் மாறிடுவார்! வம்பென்றால்
வன்புயலாய் மாறிடுவார் இங்கு.

Saturday, January 06, 2018

TMPLE CITY HOTELS


2027
எண்ணற்ற மாற்றங்கள் நாளும் அரங்கேறும்
கண்கொள்ளாக் காட்சிகளைக் காண்கின்ற நேரத்தில்
இன்னுமென்ன மாற்றங்கள் தோன்றும் எனநினைத்தால்
அம்மம்மா ரோபோ வடிவத்தில் ஊழியர்கள்
வந்தே மலைக்கவைக்கும் காட்சி வருகிறதே!
அந்தோ இரண்டாயி ரத்து இருபத்தே ழாண்டிலே
கண்முன்னே அற்புதத்தைக் காண்.

TEMPLE CITY HOTELS



2005

நீளமான மேசையில் வண்ண விரிப்புகள்
காரசார உண்ணும் வகைகளோ பாத்திரத்தில்
சீருடை ஊழியர்கள் முன்நின்றே பார்த்திருக்க
நாடிவரும் மக்கள் நடந்தேதான் தட்டுடன்
ஆடி அசைந்தேதான் தாங்களாக வேண்டியதை
தேடி எடுத்துவைத்துப் போட்டேதான் சாப்பிடுவார்!
மாறிய மாற்றம் இரண்டாயி ரத்தைந்தில்!
மாறிவரும் கோலத்தைப் பார்.

TEMPLE CITY HOTEL




1995
பெரியமேசை வண்ணத் துணிவிரிப்பு,மேலே
தெளிவாக வண்ணங்கள் பூசிய காட்சி!
களிப்புடன் சேர்ந்தே அமர இருக்கை
சிரிப்புடன் சீருடை போட்டே உணவைப்
பரிமாறும் ஊழியர்  என்றேதான் மாற்றம்
உருவிலே தொன்ணூற்றைந் தாமாண்டில் கண்டோம்!
உருமாற்றம் பார்த்தோம் ரசித்து.

TEMPLE CITY HOTEL



1985
மேசை,சுழல்கின்ற நாற்காலி மின்விசிறி
மேசைமுன் மூன்றுநான்கு மாந்தர்கள் உட்கார
சீருடை போட்டுப் பரிமாறும் ஊழியர்
ஆர்வமுடன் தட்டில் உணவுவகை வைத்திருக்க
சேர்ந்தே உணவுண்டோம் எண்பத்தைந் தாமாண்டு!
பார்த்திருந்தோம் மாற்றத்தை ஏற்று.

TEMPLE CITY HOTEL MADURAI

1975
மேசையின் முன்னால் நாமோ அமர்ந்திருக்க
மேசையில் வாழை இலைபோட்( டு) உணவுகளை
நாசூக்காய் நின்று பரிமாற சாப்பிட்டோம்
ஆசையுடன் தானே எழுபத்தைந் தாமாண்டு!
நாகரிக மாற்றத்தைப் பார்.

TEMPLE CITY HOTEL MADURAI

1968


தரையில் அமர்ந்தே இலைபோட்டுச் சாதம்
பரிமாற பின்னால் ஒருவர் விசிறி
களிப்புடன் நின்று விசிறுகின்ற பண்பில்
திளைத்தோம் அறுபத்து எட்டிலே இங்கு!
பழங்காலம் அன்பைத்தான் பார்.


உயிரே ஒதுக்கினால்!

உயிருக் குயிராய் உறவாடும் நேரம்
உயிராய்க் கருதும் உயிரே உயிரைப்
புவியில் ஒதுக்கி ஒதுங்கி நடந்தால்
உயிர்தான் துடிக்கும் தவித்து.


என்னவள்

கொஞ்சநேரம் என்னைத்தான் பார்க்கவில்லை என்றாலோ
அங்குமிங்கும் கண்கள் சுழன்றோட உள்ளமோ
எங்கெங்கோ சுற்றிவரும்! எண்ணத்தில் அச்சமுடன்
இங்கிருப்பாள்  அம்மா! தவித்து.

வளையலின் நாணம்!

வளைக்கரத்தாள் வளைக்கரத்தால் வளைத்தாள்! மலைத்தேன்!
மலைத்தேன் மலைக்க மலைக்கப் பொழிந்தாள்!
திளைத்தேன்! களைத்தேன்! உலகை மறந்தேன்!
வளையல்கள் நாணின வீழ்ந்து.

படத்தை அனுப்பியவர் நண்பர்.மகாகணேசன்

நம்பிக்கை!

நீர்மீது செல்லும் படகினை நம்புவதா?
நீரோ கவிழ்க்காது! நீரைத்தான் நம்புவதா?
நீரில் துடுப்பியக்கும் மாந்தரை நம்புவதா?
கார்மலைபோல் நின்றிருக்கும் யானையை நம்புவதா?
யாரைத்தான் யார்நம்பிச் செல்கின்றார்? நம்பிக்கை
வேர்பற்றிப் போகிறது வாழ்வு.


வறண்ட நதி

எதிர்பார்ப்பின் போக்கோ எதிர்மறை  யானால்
புதிராகும் வாழ்க்கை! புயலாகும் உள்ளம்!
நதிவறண்ட கோலம்போல் வாழ்வே வறட்சிப்
பிடியின் உளைச்சலில் தான்.


சாதனை உன்வசம்!

முயற்சி உழைப்பு மனத்தூய்மை மூன்றும்
உயர்வைத் தருகின்ற முன்னேற்றச் சொற்கள்!
அயராமல் பாடுபடு வெற்றி உறுதி!
தரமான சாதனையை நாட்டு.


எண்ணப் பறவை!

உறவுகளை நட்புகளை எல்லாம் விலக்கி
உடலளவில்  எங்கோ தனித்திருந்த போதும்
உட லுக்குள் உள்ளத்தின் எண்ணப் பறவை
பறந்திருக்கும் அவற்றை நினைத்து.



நிம்மதிக்கு வித்து!

அமைதியான வாழ்வை அமளியின்றி வாழ்தல்
சுமையென்ற போதும்  இமையாகி வாழ்தல்
மனையறத்தைக் காத்து மகிழ்ச்சியுடன் வாழ்தல்
தினந்தோறும் நிம்மதிக்கு வித்து.

நெருடல் தவிர்

நெருங்கிப் பழகிடும் நேரத்தில் வாழ்வில்
நெருடல் முளைத்துக் கவர்ந்தே இழுக்கும்!
நெருடலை விட்டே ஒதுங்கப் பழகு!
பெருக்கெடுக்கும் நிம்மதி தான்.

Monday, January 01, 2018

துவாதசி 2017



துவாதசி் சமையல்!(30.12.17)


பத்திரண்டு ஏழுவகைக் காய்கள் குழம்பாக
முத்துமுத்தாய் ஆகா உருளைக் கிழங்குடன்
பச்சை அகத்தி, அவரையுடன் வாழையும்
முற்றும் பொரியலாக மொச்சை வறுவலும்
அப்படியே சேனை வறுவலுடன் வெண்டைக்காய்
பச்சடி ,கேரட்டும் வெள்ளரியும் வெண்தயிர்
பச்சடியும் வாழைப்பூ வாலே வடைகளும்
இச்சையுடன் நீள்புடலைக் கூட்டும் சுவைசேர்க்க
பச்சைப் புதினாவால் சட்னியும் பீர்க்கங்காய்
வைத்த துவையலும் அப்பளம் மற்றுமிஞ்சி
வைத்தேதான் பச்சடியும் வீட்டில் துவாதசிநாள்
சுற்றுச் சமையலாக வைத்தார் விருப்புடன்!
எப்படி எங்கள் விருந்து?


புத்தாண்டே வருக!
       2018

புத்தாண்டே வாராய்! புதுப்பொலிவைத் தாராய்!

அனைத்துமத நல்லிணக்கம்
விழுதுவிட்டுப் படரட்டும்!

அமைதியான வாழ்விங்கே
ஆக்கபூர்வ மாகட்டும்!

தனிமனித நல்லொழுக்கம்
தங்கித் தழைக்கட்டும்!

அறவழியில் முன்னேற்றம்
சமுதாயம் காணட்டும்!

எல்லோர்க்கும் எல்லாமும்
அன்றாடம் கிடைக்கட்டும்!

சமதர்மச் சமுதாயம்
பூத்தேதான் குலுங்கட்டும்!

தமிழ்நாடும் தமிழ்மொழியும்
தலைநிமிர்ந்தே நடக்கட்டும்!

திருக்குறளைக் கடைப்பிடித்து
மக்களிங்கே வாழட்டும்!

வல்லரசாய் நம்நாடு
மாற்றத்தைக் காணட்டும்!

புத்தாண்டே வருக !வருக!
சிறப்புகளைத் தருக !தருக!


ஏகாதசி நாள்  சிற்றுண்டி(29.12.17)

அரிசி,மிளகு கலந்துவைத்த உப்புமா,
அளவாய் இனிப்பு அவலுடன் அப்பம்
எலுமிச்சைச் சாறு புளிப்பு அவலும்
உழுந்த வடையும்,மல்லிகைப்பூ இட்லி
முறுகலான காகிதம்போல் தோசையுடன் சாம்பார்
இருவகை சட்னியும் சிற்றுண்டி யாக
அருமையாய் ஏகா தசிநாளில் வீட்டில்
கருத்துடன் தந்தார் சமைத்து.




மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்

28.12.17

அரசியல் விற்பன்னர்! பண்பாளர்! வாழ்வில்
தரமான பண்புகளின் நாயகன்! ஆழ்ந்த
இலக்கியப் பற்றும் எளிமையும் கொண்டே
உலவிய செம்மலைப் போற்று.

பகுத்தறிவுப் பகலவன்
பெரியாரின்
நினைவு நாள்!
25.12.2017

தந்தை பெரியாரின் தன்மானச் சிந்தனைகள்
அன்றாட வாழ்க்கையில் மக்களுக்குப் புத்துணர்ச்சி
தந்தே தலைநிமிர வைத்து மனிதனை
சிந்திக்கத் தூண்டியது செப்பு.