Saturday, January 31, 2015

கடையேழு வள்ளல்கள்
பேகன்—பாரி—காரி-- ஆய் அண்டிரன்
அதியமான்--- நள்ளி-- ஓரி
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பேகன்
-----------------
கடுங்குளிரைத் தாங்காமல் காட்டில் மயிலோ
நடுங்கி அகவுதோ என்றே தவித்து
நொறுங்கிய பேகன் மயிலுக்குப் போர்வை
கொடுத்தான்! கொடைப்பண்பை வாழ்த்து.

பாரி
------------------
முல்லைக் கொடியோ கொழுகொம்பைத் தேடித்தான்
அல்லாடும் கோலத்தைப் பார்த்ததும் பாரிவள்ளல்
முல்லைக் கொடிபடரத்  தன்தேரைத் தந்துவிட்டான்!
வள்ளலின் கொடைமடத்தை வாழ்த்து.

காரி
-----------------
வலிமையான நல்ல குதிரைகள் மற்றும்
தெளிவாய் அறிவுரைகள் தந்து--அழியாப்
புகழ்பெற்றான் காரி கொடைமடத்தால் என்றும்!
அகங்குளிரப் போற்றுவோம் நாம்.
---------------------------------------------------------------------------------------------
ஆய் அண்டிரன்
-----------------------------------------
ஒளிமிக்க நீலமணியை, நாகம் அளித்த
கலிங்கமென்னும் ஆடையை, தேடிவந்த ஏழை
எளியவர்க்குத் தந்து மகிழ்ந்தவன் ஆய்தான்!
புவியில் நிலைத்தவனை வாழ்த்து.

அதியமான்
-------------------------
தன்னுடைய வாழ்நாளைக் கூட்டும் எனத்தெரிந்தும்
தன்னிடம் வந்துசேர்ந்த நெல்லிக் கனிதன்னை
வண்டமிழ் அவ்வையார் நீடுவாழத் தந்துவந்தான்!
மன்னன் அதியமானை வாழ்த்து.

நள்ளி
---------------------
இரவலரை வாட்டும் பசிப்பிணி நீங்க
பெரும்பொருள் தந்தே அவர்கள் உள்ளம்
பெருகும் மனநிறைவில் தான்மகிழ்ந்தான் நள்ளி!
அருந்தமிழால் வாழ்த்துவோம் நாம்.

ஓரி
----------
கூத்தாடி வாழும் கலைஞர்கள் ஆற்றலை
ஊக்குவிக்கும் எண்ணத்தில் நாடுபல தந்தவன்!
போற்றும் புகழ்நிலைக்கும் ஓரி, கொடைமடத்தின்
ஊற்றென்றே பாத்தமிழால் வாழ்த்து.

Thursday, January 29, 2015

சவ்வூடு பரவுதல்(OSMOSIS)
-------------------------------------
வேர்கள் உறிஞ்சுகின்ற நீரை இலைகளுக்குச்
சேர்த்தும் அதைத்தொடர்ந்து  தாவர உச்சிக்கும்
போய்ச்சேர வைப்பதே சவ்வூ டுபரவுதல் என்பதாகும்!
போய்ச்சேரும் தண்ணீரை ஆவியாகிப் போகாமல்
நாள்தோறும் காத்தே  இலைகளைக் காப்பதையும்
ஆர்வமுடன் செய்கிறது பார்.


மதுரை பாபாராஜ் 

மூத்தோரே தளம்
---------------------------------------
கட்டி முடித்துவிட்ட கட்டிடம் மூத்தோர்!
கொட்டிக் கிடக்கின்ற செங்கல் இளையோர்!
இத்தரணி வாழ்க்கையை எப்படிக் கட்டுவது?
கற்கவேண்டும் செங்கற்கள் கட்டிடத்தைப் பார்த்தேதான்!
கட்டிடமே வாழ்வின் தளம்

மரங்களின் நேயம்
--------------------
வேரும் அடிமரமும் ஓங்கிப் படர்ந்தேதான்
சார்ந்த கிளைகளும் பச்சை இலைகளும்
சேர்ந்துநிற்கும்  இந்த மரங்கள் நிழலளித்து
வாழவைக்கும் நேயத்தைப் பார்.

அண்ணலுக்கு அஞ்சலி
30.01.2015
------------------------------------------------
உத்தமர் காந்தியைப் போலொரு அண்ணலை
இத்தரணி  காண்பதுதான் என்று? அகிம்சையை
சுற்றிச் சுழல்கின்ற ஆயுதமாய் ஏந்தித்தான்
வெற்றிக் கனிபறித்தார் இங்கு.

ஒளிச்சேர்க்கை!
------------------------
ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள் இங்கே
உயிர்வாழ்வ தற்கே உணவைத் தயாரித்து
புவிவாழ என்றும் பிராணவாயு தன்னை
வெளிப்படுத்தும் அற்புதந்தான் பார்.

மாயை!
------------
படித்து முடித்து பணியில் நிலைத்து
மதித்தெளிவு பெற்றபின் காதல் வலையில்
பிடிபட்டால் உண்மையான அன்பிலே ஒன்றிக்
கடிமணம் ஏற்கலாம் இங்கு.

படிக்கும் பொழுதே இனக்கவர்ச்சி மாயைப்
பிடியிலே சிக்கினால் நாளும் பொழுதும்
படிப்பும் விரயமாகும்! தத்தளிக்க வைக்கும்!
எதிர்காலம் கேள்விக் குறி!

மதுரை பாபாராஜ்

Wednesday, January 28, 2015

மகரந்தச் சேர்க்கை!
------------------------
வண்ணத்துப் பூச்சிகளும் வண்டுகளும் போட்டிபோட்டு
வண்ணவண்ணப் பூவில் மதுவுண்ட போதிலும்
இங்கே மகரந்தச் சேர்க்கை நிகழ்வதற்குப்
பொன்றாத் துணையாகும் பார்.

Tuesday, January 27, 2015

அதிர்வுகள்
-----------------
வாழ்வின் அதிர்வுகள் ஏற்படுத்தும்  சூழ்நிலையின்
கோலங்கள் உள்ளத்தைக் கொத்தடிமை யாக்கித்தான்
காலம் நகர்த்துகின்ற காய்களாக்கி ஏங்கவைக்கும்!
வாழ்க்கை அதிரவைப்ப தேன்?

சிறகிழந்த பறவை!
------------------------
இதயக் கடலில் நிகழ்வின் அலைகள்
பதறப் பதற எழுந்தாடும் கோலம்!
சிறகை இழந்த பறவையைப் போல
முயற்சியெல்லாம் தோல்வியில் வீண்.

நழுவவிடாதே!
-----------------;---
தங்கமல்ல எந்த உலோகமும் இல்லையம்மா!
மண்பாண்டம் இங்கே விழுந்து நொறுங்கியது!
ஒன்றுசேர்க்கும் வாய்ப்பில்லை! வாய்ப்புவந்தால் என்றுவரும்?
கண்முன்னே கானல்நீர் தான்.

கல்லாதார் மேல்!
----------------------
கற்பூர வாசனையைத் துர்நாற்றம் என்கின்றார்!
அற்பத்தை அற்புதம் என்றேதான் சொல்கினறார்!
கற்கண்டை எட்டிக்காய் என்றே வெறுக்கின்றார்!
கற்றவர்க்குக் கல்லாதார் மேல்.

குழப்பக் கிடங்கு!
-----------------
இதுவோ? இல்லை அதுவோ? இரண்டில்
எதுவோ? இரண்டுமோ? என்றே குழம்பித்
தடுமாறும் மாந்தரின் வாழ்க்கை குழப்பக்
கிடங்காக மாறிவிடும் பார்.

Sunday, January 25, 2015

தீதின்றி வாழ்வோம்!
------------------------------------
புகைப்பழக்கம் தீது! மதுப்பழக்கம் தீது!
பகையுணர்ச்சி தீது! பழியுணர்ச்சி தீது!
புறங்கூறல் தீது! புண்படுத்தல் தீது!
பதற்றமே வாழ்வாகும் பார்.

மதுரை பாபாராஜ்

பார்த்தேன்! வியந்தேன்!
------------------------------------------------------
கண்பார்வை இல்லை! கரங்கள் பிடித்திருக்கும்
கம்பைத் தெருவிலே தட்டி ஒலியெழுப்பி
நம்மைப்போல் இங்கே நடந்துபோன நம்பிக்கை
கண்டு மலைத்தேன்! வியந்து.

உருளும்கல்!
ROLLING STONE
-------------------------
வாழ்க்கை உருட்டிவிடும்! நாமோ உருளவேண்டும்!
தாழ்வில் கடகடா! மேட்டில் குடுகுடு!
ஓய்வில் அசைவற்ற கல்லாய்க் கிடப்போம்நாம்!
வாழ்வின் உருளும்கல்  நாம்.

மதுரை பாபாராஜ்

குடியரசு நாளே வா!
26.01.2015
-----------------------
குடிபோதை இல்லாத நாடாக வேண்டும்!
படிப்பறிவை எல்லோரும் பெற்றாக வேண்டும்!
நதிகளை எல்லாம் இணைத்தாக வேண்டும்!
மதவெறியைத் தூண்டாமல் நாடாள வேண்டும்!
அகந்தோறும் மக்கள்  மகிழ்ந்திருக்க வேண்டும்!
நடப்பது நாளும் நல்லதாக வேண்டும்!
மகத்தான வல்லரசாய் நாடுமாற வேண்டும்!
பகைநாடு நட்புறவை நாடிவர வேண்டும்!
குடியரசே வாழவைக்க வா!

மதுரை பாபாராஜ்

திருந்தாத மக்கள்!
----------------------
கண்ட இடங்களில் எச்சிலைத் துப்புகின்றார்!
எங்கெங்கோ மக்கள் சிறுநீர் கழிக்கின்றார்!
கண்டபடி குப்பையைக் கொட்டிக் குவித்தே
கண்மணியே! துர்நாற்றம் வீசச் செய்வார்!
என்ன பழக்கமோ இப்பழக்கம்!  மக்களுக்குத்
தன்னொழுக்கம் இல்லையே ஏன்?

இவர்கள் வெளிநாடு சென்றால் மட்டும்
தவறாமல் அந்தநாடு சொல்லும் விதியைக்
கவனமாக பின்பற்றி வாழ்கின்றார் அம்மா!
இவர்கள் திருந்துவாரோ? சொல்

இணக்கமற்ற வீடு
--------------------------------------------------
கயிறில்லா பட்டம் அலையில்லா ஆழி
ஒளியில்லா கண்கள் கரையில்லா ஆறு
ஒலியில்லா வீணை இவைபோலத் தானே
தவிக்கும் இணக்கமற்ற வீடு!

நிறைவான வீடு
----------------------------------------
இசைதவழும்  வீணை மணங்கமழும் பூக்கள்
அசைந்துவரும் தென்றல் அலையாடும் ஆழி
கறையற்ற உள்ளம் இவைபோலத் தானே
நிறைவான இல்லறத்தின் வீடு.

Saturday, January 24, 2015

சிக்கலான நூல்கண்டு
-------------------------
சிக்கல் நிறைந்திருக்கும் நூல்கண்டில் சிக்கிவிட்ட
சிக்கலை நீக்க முயற்சித்தால் சிக்கலுக்குள்
சிக்கல் விழுந்து தடுமாறச் செய்தது!
இப்படித்தான் வாழ்க்கையும் இங்கு.

மதுரை பாபாராஜ்

Friday, January 23, 2015

மனமில்லை
----------------------------
சோலை இருக்கிறது! காற்றை வெறுக்கின்றார்!
நாலுபக்கம் ஜீவநதி! நீரை வெறுக்கின்றார்!
பாலம் இருந்தும் வழியை வெறுக்கின்றார்!
வாழ்க்கை இருந்தும் நெறியை வெறுக்கின்றார்!
வாழத் தெரியாதோர் பார்.

பெருமை
------------------
குழந்தையைக் கொஞ்சுதல் தாயின் பெருமை!
நிழலை அளித்தல் மரத்தின் பெருமை!
மழையைப் பொழிதல் முகிலின் பெருமை!
மலையின் பெருமை உயர்வு.

நல்லதைச் சொல்
---------------------
எதைச்சொன்னால் புண்படும் என்று தெரிந்தே
அதைச்சொல்லும் மாந்தர்கள் நல்லவ ரல்ல!
அதைத் தவிர்த்து நல்லதை மட்டும்
மறைக்காமல் சொல்வது சிறப்பு.

கவிதைக்குக் கேடு
---------------------
கருத்தை விதைத்துச் சமுதாயந் தன்னைத்
திருத்த முனையும் படைப்பே கவிதை!
வருகிறதே காசென்றே ஆபாசப் பாட்டைத்
தருவது பாவினக் கேடு

வம்பை விலைக்கு வாங்காதே!
--------------------------------------+------------
கவிதைக்குக் கருத்தைக் கொடுத்த திருமதி.அமுதவல்லி அவர்களுக்கு நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
சைக்கிளை ஓட்டி முடித்துவிட்டு ஸ்கூட்டரை
அக்கறையாய் ஓட்டிவிட்டு ஆசையாய்க் கார்வாங்கி
நித்தம் பயணித்தோம்!கால்களுக்கு வேலையில்லை!
முட்டிவலி தாக்க மருத்துவரை நாடினால்
தப்பாமல் இங்கே நடைப்பயிற்சி வேண்டுமென்றார்!
இப்போதோ மீண்டுமிங்கே ஓடாத சைக்கிளில்
நற்றமிழே!  ஏறி நடக்கின்றேன்! வம்புகளை
இப்படித்தான் வாங்குகிறோம் நாம்.

காக்கும் கரங்கள்
---------------------
தாத்தாவும் பாட்டியும் என்னதான் பார்த்தாலும்
ஏக்கமுடன் காத்திருக்கும் பிள்ளைகள் தாய்வந்தால்
ஊற்றெடுக்கும் உற்சாகம் பொங்கிவர ஓடிவிடும்!
காக்கும் கரங்களே தாய்.

நடைமுறை உண்மைகள்
-------------------------
நடைமுறையைப் பார்த்தால் மனைவி இறந்தால்
நடைப்பிணமாய் மாறும் கணவனோ வாழ்வில்
நடைமுறைத் துன்பச் சுமையாக மாறி
துடுப்பற்ற ஓடமாவான் பார்.

கணவன் இறந்தால் மனைவி இருப்பில்
சுணக்கமோ இன்றி சுமையாக இன்றி
மணக்கும் தொடரும் குடும்ப இயக்கம்!
மனைவி குடும்பத்தின் வேர்.

இடமறிந்து பேசு
--------------------
இடம்பொருள் ஏவல் உணர்ந்து பேசும்
இதமறிந்து நாமோ செயல்பட்டால் கேட்போர்
கடமையே என்றேதான் கேட்காமல்  என்றும்
அகங்குளிரக் கேட்பார் மதித்து.

Thursday, January 22, 2015

சற்றுநேர போதை!
----------------------
பட்டம் பதவி விருதுகள் எல்லாமே
சற்றுநேரம் வந்துபோகும் மின்னலைப் போலத்தான்!
பெற்றநாள் மட்டும் மகுடம் தரித்திருப்போம்!
சற்றுநேர போதைப் புகழ்.

சாலையும் வாழ்வும்
--------------------
சாலைகளுக் கேற்ப பயணத்தை மேற்கொண்டால்
ஊரை அடையலாம்! வாழ்வில் அதுபோல
சூழலுக் கேற்ப நடந்துகொள்ளும் பக்குவந்தான்
வாழ்வை வசப்படுத்தும் பார்.

Tuesday, January 20, 2015

அன்பே உயிர்!
--------------------
ஒன்றிரண்டு மூன்றுநான்கு ஐந்துஆறு ஏழுஎட்டு
ஒன்பது பத்தென நட்புப் பயிர்வளர
அன்பு மழைபொழிந்தால்
உள்ளம் மகிழ்ந்திருக்கும்!
அன்புதான் வாழ்வின் உயிர்.

மதுரை பாபாராஜ்

Monday, January 19, 2015

ஊழல்
-------------------
இவரோ அவருக்கு வேண்டியவர்! ஆனால்
அவரோ இவருக்கு வேண்டியவர்! யாரோ
எவருக்கோ வேண்டியவர் என்றே எவரோ
தவறைத் தொடர்கின்றார் பார்.

மதுரை பாபாராஜ்

Sunday, January 18, 2015

இப்படி வாழ்பவரும் உண்டு!
(தொலைக்காட்சித்தொடரில்           ஒரு காட்சி)
---------------------------
சொந்த மகன்வீட்டில் அல்லது மகள்வீட்டில் அன்னியர்போல் பெற்றவர்கள்
வந்துபோக நேரிட்டால்
தங்களை வாட்டி எடுக்கும் விதியெண்ணி
நொந்து வதங்கிடுவார் பார்.

மதுரை பாபாராஜ்
11.01.15

உரசினால் விபத்து
---------------------
அரைவட்ட மாக பறவைகள் வானில்
உரசாமல் செல்லும்பார் ஒற்றுமையாய்ச் சேர்ந்தே!
உரசாமல் சென்றால் விபத்துகள் இல்லை!
உரசினால் என்றும் விபத்து.

நிறைகுடமாய் மாறு
---------------------
நிறைகுடம் துள்ளித் ததும்பாமல் நிற்கும்!
குறைகுடம் துள்ளித் ததும்பியே சிந்தும்!
நிறைகுடம்போல் வாழ்ந்தால் உளைச்சலே இல்லை!
குறைகுடமா? நிச்சயம் உண்டு.

கண்டபடி வாழாதே

கண்டபடி வாழாதே!
------------------------
கண்டதே காட்சியென்றும் கொண்டதே கோலமென்றும்
தன்னலக் கூட்டுக்குள் வாழாதே---கண்மணியே
வாழ்க்கை நெறிமுறைச் சாலை விதிகளை
வாழ்வாக்கி வாழ்தல் சிறப்பு.

வாழ்வியல் ஆசான்
-----------------------
இயற்கைப் படைப்பெல்லாம் ஒன்றையொன்று சார்ந்தே
இயல்பாக வாழ்வை ரசித்து நடத்தும்
அழகிய அற்புதத்தை மாந்தரும் கற்றால்
உரசலின்றி வாழலாம் இங்கு.

Saturday, January 17, 2015

நினைவில் நிற்கும் 
விளையாட்டுகள்
-----------------------
சில்லாக்கு கோலாட்டம் மற்றும் கிளித்தட்டு
கல்சுண்டும் சொட்டாங்கல்
மற்றும் கயிறுதாண்டல்!
பல்வகை ஆட்டங்கள் பெண்களுக்கு என்றுண்டு!
உள்ளங்கள் துள்ளும் மகிழ்ந்து.

பம்பரம் கில்லி கபடி டியாண்டோ
குண்டு குனியவைத்துத் தாண்டுதல் சீட்டாட்டம்
சுண்டுப் பலகையாட்டம்
மற்றும் எறிப்பந்து
என்பவை ஆண்களுக்கு உண்டு.

இந்தத் தலைமுறையைச் சார்ந்த குழந்தைகள்
இத்தனை ஆட்டங்கள் இங்கே இருந்தனவா?
அப்பப்பா என்றே மலைக்கின்றார்! பள்ளிகளில்
இப்போது கற்கின்றார் காண்.

மதுரை பாபாராஜ்

குழந்தை வளர்ப்பு
---------------------------------------------------------------------
தாய்தந்தை போட்டிபோட்டுச் செல்லம் கொடுப்பது
சேய்களைக் கண்டதே காட்சியென்று வாழவைக்கும்!
வாழ்வில் கெடுவதற்கு வாய்ப்புகளை உண்டாக்கும்!
வாய்மைத் திசைமாறும் பார்.
----------------------------------------------------------------------------------------
வேகம் விவேகம் இரண்டிற்கும் போட்டிவைத்தால்
வேகத்தைப் பிள்ளை வளர்ப்பிலே தோற்கடித்துப்
பாசமுடன் நாளும் விவேகத்தை வெற்றிவாகை
சூடவைத்தால் முன்னேற்றம் உண்டு.
-------------------------------------------------------------------------------------------
தாயும் கடுமையாய்க் கண்டிப்பார் நாள்தோறும்!
பாயும் புலியாகித் தந்தையும் கண்டிப்பார்!
சேய்கள் பெற்றோரைக் கண்டு நடுங்குவார்!
சேய்கள் மனம்பிறழும்  செப்பு.
--------------------------------------------------------------------------------------------
செல்லம் கொடுப்பதும் கண்டிப்பைக் காட்டுவதும்
எல்லைக்குள் நாளும் இருக்கவேண்டும்! சேய்களும்
நல்லவராய் வல்லவராய் கட்டுக்குள் வாழ்ந்திருப்பார்!
எல்லை! விவேகத்தின் கோடு.
----------------------------------------------------------------------------------------------------
தாயோ எரிமலை! தந்தை கடும்புயல்!
சேய்களின் பெற்றோர் இதுபோல் அமைந்துவிட்டால்
சேய்களின் உள்ளம் உளைச்சலில் ஊசலாடும்!
நாள்தோறும் ஏக்கத் துடிப்பு.
---------------------------

Friday, January 16, 2015

கூடா நட்பு!
அகர வரிசையில்
--------------------
அடக்கமில்லா மாந்தர்
ஆணவத்தில் ஆடுவோர்
இழிமனப் பித்தர்
ஈனவாழ்க்கை வாழ்வோர்
உழைக்காத சோம்பேறி
ஊதாரி மூடன்
எடுத்தெறிந்து பேசுவோர்
ஏளனம் செய்வோர்
ஐந்தாம் படை சார்ந்தோர்
ஒழுக்கத்தை வெறுப்போர்
ஓரவஞ்சனைக் காரர்
ஔவியத்தைத் தூண்டுவோர்
நட்பெல்லாம் கூடா நட்பாகும்!

மதுரை பாபாராஜ்

புரிந்து கொள்ள மறுப்போர்
------------------------------------------------
அந்த மரத்தின் நிழலில் இளைப்பாற எந்தவித
சொந்தத் தொடர்பற்றோர் எல்லாம் வருகின்றார்!
சொந்த உரிமை இருந்தும் புரிந்துகொள்ள
இங்கே மறுப்பதேன் கூறு

எரிமலை மனிதர்கள்
--------------------------------------
எரிமலைகூட குமுறிக் குமுறித்தான் சீறும்!
எரிமலை உள்ளத்தைக் கொண்டோர் குமுறல்
தெரியாமல் இங்கே உடனேதான் சீறி
எரித்துப் பொசுக்கிடுவார் பார்.

முந்த விரும்பாத வரிசை!
----------------------------------------------
எந்த வரிசையில் நின்றாலும் முந்திமுந்திச்
சென்றேதான் வம்பிழுத்து முன்னேறி நின்றிருப்பார்!
இங்கே மரண வரிசையில் மட்டுந்தான்
முந்த வரமாட்டார் பார்.

Thursday, January 15, 2015

      திரையுலகே
குடிப்பதற்குத் தூண்டாதே!
-------------------------
குடிப்பதற்குத் தூண்டுகின்ற பாட்டெழுது வோர்கள்,
நடிப்பில் நடிப்பவர்கள்,காட்சி படைப்போர்
அறியாப் பருவத்தில் தத்தளிப் போரை
நெறிபிறழ வைப்பதைச் சாடு.

மதுரை பாபாராஜ்

மனைவியை வாழ்த்து
----------------------
தவறாமல் நாளும் சமையலைச் செய்தே
அவரவற் கேற்ப  சுவைகளைச் சேர்ப்பாள்!
அவளின் சமையலை வாழ்த்தி ஒருசொல்
வரவேண்டும் என்றே எதிர்பார்ப்பாள் நின்று!
உளமார வாழ்த்து மகிழ்ந்து.

அலையும் கரையும்
--------------------
தேடிவந்து கால்தொட்டேன்! வேடிக்கை பார்த்திருந்தாய்!
ஊடிவிட்டே உள்வாங்கி வீட்டுக்குள் சென்றபோது
பாடிவா! என்றேதான் தூதுவிட்டாய்! நாணத்தில்
ஓடிவிட்டேன் பாட மறுத்து.

Wednesday, January 14, 2015

வாய்ப்பந்தல்
----------------
வாய்ப்பந்தல் போட்டே எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்(டு)
ஏய்ப்பவரைக் காட்டிலும் சொல்லாமல் செய்பவர்கள்
நேயமனங் கொண்டவர்கள் நேர்மையான பண்பாளர்!
வாய்ப்பந்தல் போடாமல் செய்.

தமிழ்ப் புத்தாண்டே வா!
பொங்கல் திருநாளே வா!
-------------------------------------------
இலங்கைத் தமிழினம்
நிம்மதியாய் வாழவேண்டும்!
இந்திய மீனவர்கள்
அச்சமின்றி வாழவேண்டும்!
அனைத்துமத நல்லிணக்கம்
இந்தியாவில் நிலைக்கவேண்டும்!
உலகமக்கள் எல்லோரும்
எல்லாமும் பெறவேண்டும்!
தமிழ்ப் புத்தாண்டே வாழ்த்து!
பொங்கல் திருநாளே வாழ்த்து!

நிம்மதி நம்கையில்!

நிம்மதி நம்கையில்!
-------------------------
பாத்திரத்திற் கேற்றவாறு தண்ணீர் வடிவுபெறும்!
நாட்டிலே வாழ்க்கை நிலைக்கேற்ப  மாறவேண்டும்!
மாற்றத்தில் நிம்மதியை ஏற்படுத்தி வாழவேண்டும்!
மாற்றத்தில் நிம்மதி காண்.

நடைமுறை!
-----------+------------------------------------
நடப்பது வாழ்வில் நடந்துதான் தீரும்!
கிடைப்பதுதான் இங்கே கிடைக்கும்! நமக்குக்
கிடைப்பதை வைத்தே திருப்தியைக் காணும்
நடைமுறைப் பண்பிலே ஒன்று.

பத்துமாத நிம்மதி!
--------------------
கருவறையில் பதுதுமாதம் நிம்மதியாய் வாழ்ந்தேன்!
உருப்பெற்றே இவ்வுலக வாழ்வில் உருண்டேன்!
கருவறை நிம்மதி காணாமல் போக
ஒருவாறாய்க் கல்லறைக்குச் சென்றுவிட்டால் மீண்டும்
வருமோ நிம்மதி? சொல்.

Monday, January 12, 2015

பகிர்ந்துண்ணாத
     காகம்!
-----------------------------------------------------
சப்பாத்தி வைத்தவுடன் காகங்கள் வந்தன!
அப்படியே கொத்தியது அங்கே ஒருகாகம்!
அப்பா! பகிர்ந்துண்ணும் காகம் படித்துள்ளேன்!
இப்படி மாறியதேன் இன்று.

குழப்பத்தில் உரிமை
----------------------
உரிமைக்கும் நாளும் பெரியோர்க்குக் காட்டும்
மரியாதைப் பண்பிற்கும் வேறுபா(டு) உண்டு!
இரண்டையும் போட்டுக் குழப்பினால் வாழ்க்கை
உளைச்சலின் கூடாரந் தான்.

புலமையும் வறுமையும்
-------------------------
கலைமகள் வந்தாள்!
அலைமகள் சென்றாள்!
இருக்க இடமில்லை ஏழ்மையின் ஆட்சி!
விருதுகள் பட்டங்களைத் தந்து மதித்தார்!
விருதுகளை வைக்க இடமில்லை வாங்கிப்
பரண்மேல் அடுக்கிவிட்டேன் பார்.

மதுரை பாபாராஜ்

Sunday, January 11, 2015

கண்ணாடிப் பாத்திரம்
-----+-----------------
கண்ணாடிப் பாத்திரத்தை ஏந்திக் கயிற்றின்மேல்
அன்றாடம் எச்சரிக்கை யாக நடப்பதுபோல்
என்றென்றும் வாழ்வில் இணக்கத்தைக் காக்கவேண்டும்!
கொஞ்சம் நழுவி  விழுந்தாலும் கண்ணாடி
துண்டாய்ச் சிதறிவிடும்! சொல்.

மதுரை பாபாராஜ்

-கொஞ்சநேர வாழ்க்கை!
--------------------------------------------
தாய்தந்தை பிள்ளைகளைப் பார்ப்பது கொஞ்சநேரம்!
சேய்களோ பெற்றோரைப் பார்ப்பது கொஞ்சநேரம்!
சேய்களுடன் பெற்றோர்கள் பேசுவது கொஞ்சநேரம்!
நாள்தோறும் தம்பதி பார்ப்பது கொஞ்சநேரம்!
வாழ்க்கையின் இன்றைய போக்கு.

பயனுள்ளவை
-------------------
ஒழுக்கமான கல்வி இனிமையான பேச்சு
பழம்குலுங்கும் தோப்பு பசியாற்றும் கோயில்
உழவர்கள் உழைப்பு உறவுகளின் பாசம்
பயனுள்ள வாழ்க்கைத் தளம்..

இவனா மனிதன்?
-------------------------------------
இயற்கை அழகில் மனமோ லயிக்கும்!
இயற்கை எழுதும் மரபுக் கவிதை
இலக்கணந் தன்னைச் சிதைத்தே மனிதன்
செயற்கை படைத்தல் அழிவு.

மதவாத சிந்தனை அமளிக்கு வழிவகுக்கும்!
(கலைஞரின் கருத்தை வரவேற்போம்)
------------------------+--------------------------------------------
மதவாதக் கட்சியைச் செந்தமிழ் நாட்டில்
தடம்பதிக்க விட்டுவிட்டால் ஒட்டகம் போல
முதலில் கழுத்தை நுழைத்துப் பிறகு
உடலைத் திணிக்கும்! அமைதியான வாழ்வை
முடக்கி அமளியாக்கும் பார்.

சேய்களின் அரண்!
---------------------
தாய்தந்தை நேரடிப் பார்வையில் வாழ்கின்ற
சேய்களின் உள்ளத்தில் பாதுகாப்புச் சூழ்நிலை
நாளும் இருப்பதால் இங்கே உளைச்சலில்லை!
தாய்தந்தை சேய்களுக்குக் காப்பு.

Saturday, January 10, 2015

படரும் முதுமை!
--------------------
விரல்கள் வலியெடுக்க மூட்டு வலிக்க
நரம்புகள் சோர்ந்திட பேச்சு குழற
தளர்ச்சியில் நாளும் நடைதடு மாற
வளரும் முதுமை படர்ந்து.

மதுரை பாபாராஜ்

தீர விசாரிப்பதே மெய்!
--------------------------
பனைமரத்தின் கீழ்நின்றே பாலைக் குடித்தால்
பனங்கள் குடிகாரன் என்றெண்ணிச் சாடும்
மனப்பதற்றம் இன்றி விசாரித்த பின்பே
குணத்தை எடைபோட்டுச் சொல்.

மதுரை பாபாராஜ்

சிறகு முளைத்ததும்
----------------------
சிறகு முளைக்காத மட்டும் பறவை
அடங்கி நடக்கும் உறவுகளின் கூட்டில்!
சிறகு முளைத்தால் விரிக்கும் சிறகை!
பறந்து வெளியேறும் சொல்லாமல் நாளும்!
நடப்பதைச் சொன்னால்தான் உண்டு.

மதுரை பாபாராஜ்

பம்பரந்தான் மாந்தர்கள்!
------------------------
ஆடவிட்ட பம்பரம்போல் மாந்தர்கள் வாழ்க்கையின்
தேடலிலே ஓடுகின்றார்! ஓடுகின்றார்! செந்தமிழே!
ஆடவிட்ட பம்பரம் ஓய்ந்தேதான் சாய்வதுபோல்
தேடல் குறையுடனே ஓய்வு.

மதுரை பாபாராஜ்

Friday, January 09, 2015

வீரத் தமிழன்!
-----------------
பாய்ந்துவரும் காளை பிடிக்கவரும் வீரனுக்குக்
கால்தூசுக் கொப்பாகும்! காளைத் திமில்பிடித்துக்
காளையைத் தானடக்கி வெற்றி நடைபோடும்
வீரத் தமிழனைப் பார்.

எச்சரிக்கை மீறாதே!
------+---------------
தோளிலே செல்போன்! அதன்மேல் தலைசாய்த்துச்
சாலையில் பேசியே வண்டியை ஓட்டுகின்றார்!
 சாலை விபத்தை விலைகொடுத்து வாங்குகின்றார்!
பாவம்! பரிதாபம்! பார்.

மதுரை பாபாராஜ்


தன்பிள்ளை தானாக வளரும்
---------------------------
சொந்தக் குழந்தையை வீட்டிலே விட்டுவிட்டு
எந்தக் குழந்தையோ நாளும் வளர்வதற்குச்
சென்றே உழைக்கின்றாள் ஆர்வமுடன் உத்தமி
தன்குழந்தை நன்குவாழத் தான்.

மதுரை பாபாராஜ்

Thursday, January 08, 2015

மேகங்கள்
-----------------------
சொந்த உறவெனினும்
வந்த உறவெனினும்
என்றும் கடந்துசெல்லும் மேகங்கள் போலத்தான்!
வந்தவாறே செல்லவேண்டும்!வாழ்க்கை நியதியாம்!
உண்மை இதுதான் உணர்.


மதுரை பாபாராஜ்

Wednesday, January 07, 2015

துரும்பும் கரைசேர்க்கும்!
-------------------------
கடலில் விழுந்தால் கிடைத்ததை வைத்துக்
கடந்து கரைசேரத் தான்பார்ப்போம்! வாழ்வில்
கிடைத்ததை வைத்தேதான் முன்னேற வேண்டும்!
கிடைத்தவாய்ப்பை விட்டுவிட்டால் தாழ்வு.

Monday, January 05, 2015

பேச்சைச் சுருக்கு!
---------------------
தேவையற்ற பேச்சே உறவுகளைப் பாதிக்கும்!
தேவையான செய்தியை மட்டும் தெளிவாக
நாமணக்கப் பேசினால் வாழ்க்கை வரமாகும்!
நாவடக்கம் ஒற்றுமைக்குத் தூது.

மதுரை பாபாராஜ்

சட்டத்தை மதிப்போம்!
------------------------
வண்டிகளில் கண்டபடி வண்ண விளக்குகள்!
கண்களைக் கூசவைத்துக்  கண்ணொளியை மங்கவைக்கும்!
பண்புடன் சட்ட விதியை மதிக்கவேண்டும்!
தன்னலத்தை என்றும் விலக்கு.

மதுரை பாபாராஜ்

Sunday, January 04, 2015

காகம் குயிலாச்சு!
-----------------------
காகம்போல் சேகரித்துக் கூடுகட்டி வாழ்ந்தவன்
வேகமாக ஓடிவிட்ட காலம் அவனையோ,
சூசகமாய்ச் சூழ்ச்சிவலை பின்னி உறவுகள்
காகமல்ல! நீயோ குயிலென்றே கூட்டைவிட்டுப்
போகவைத்தார்! இன்றிங்கே கூடின்றி நிற்கின்றான்!
காகம் குயிலாச்சு காண்.

மதுரை பாபாராஜ்

மனக்கடலில் மண அலைகள்
-------------------------------------------------------
கைத்தலம் பற்றிக் கணவன் மனைவியாய்
முத்திரை ஏற்றே குழந்தைகள் பெற்றெடுத்துக்
கற்றறிந்த  மானிடராய் மாற்றி சமுதாயச்
சுற்றில் நிலைபெறச் செய்தே முதுமையில்
தத்தளித்து மீண்டும் மனைவியின் கைத்தலம்
பற்றித்தான் நான்நடக்க என்கையை இல்லாளும்
பற்றி நடக்கின்றாள்! இளமைப் பருவத்தில்
அக்கறையாய் ஏற்ற திருமணக் கோலத்தில்
பற்றுடன் ஒன்றியது நெஞ்சு.

மதுரை பாபாராஜ்

பிறந்த வீடு--புகுந்த வீடு
கூட்டுப் பொறுப்பு
------------------------
பிறந்தவீட்டைப் போற்றிப் புகுந்தவீட்டைக் காக்கும்
கடமை, கணவன் மனைவி இல்லறத்தில் நாளும்
சிறந்த பொறுப்பாய் இருவருக்கும் உண்டு!
உறவுகளின் பாலமே வீடு.

உரிமைக் கோளாறு!
----------------------
ஆணுக்குப் பெண்ணோ அடிமையில்லை! ஏற்போம்!
மானே! அதற்காக இங்கே கணவனைத் துச்சமாகத்
தான்நினைத்தே என்றும் மதிக்காமல் வாழ்வதா?
ஈனம் உரிமையல்ல!சொல்

பனிப்போர்!
--------------
பனிப்போரோ நாட்டுக்கும் நாட்டுக்கும் உண்டு!
பனிப்போர் நிறுவனத் திற்குள்ளே உண்டு!
பனிப்போர் குடும்பத்தில் என்றால் உளைச்சல்
தணியாத போர்க்களந்தான்! சாற்று.

Saturday, January 03, 2015


போடா ! போடி !
--------------------
கணவனைப் போடா எனச்சொல்லும் இல்லாள்!
மனைவியைப் போடியென்று
சொல்லும் கணவன்!
இணையர்தான் என்றாலும்
இப்படிப் பேசும்
மனப்பான்மை நல்லதல்ல சொல்.

மதுரை பாபாராஜ்

Friday, January 02, 2015

வழிகாட்டியல்ல!
--------------------
படிப்பறிவே இன்றி சிகரத்தில் வாழ்வார்!
படித்தவர்  பள்ளத்தில் வாழ்வார்! தமிழே!
விதிவிலக்காய் உள்ளோர் வழிகாட்டி யல்ல!
விதிவிலக்கு, காலத்தின் வாய்ப்பு.

மதுரை பாபாராஜ்

சந்தேகப் பார்வை!
----------------------
 சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கிவிட்டால்
சொந்த நிழல்கூட அச்சத்தைத் தூண்டிவிடும்!
சொந்தபந்தம் எல்லாம் பகையாகக் காட்சிதரும்!
சந்தேகம் கொள்வது தீது.

மதுரை பாபாராஜ்

ஊனத்தின் உரு!
--------+---------
ஆணவத்தின் உச்சாணிக் கொம்பேறி நிற்பவர்கள்
ஈனமனப் பித்தர்கள்! ஊனக்கண் பெற்றவர்கள்!
பூமணத்தைக் குப்பையின் துர்நாற்றம் என்பவர்கள்!
ஊனத்தின் மொத்த உரு.

மதுரை பாபாராஜ்

புத்தாண்டே வா!
      2015
-----------------------
புத்தாண்டே வா!வா!
புதுவசந்தம் வா!வா!வா!
 இத்தரணி வாழ்வில் மகிழ்ச்சிபொங்க வா!வா!வா!
சுற்றத்தின் ஒற்றுமைக்குத் தூதுவிட்டு வா!வா!வா!
வெற்றிக்கு வித்திட்டு வா.

Thursday, January 01, 2015

சொர்க்கவாசல்!
-------------------
ஆண்டுதோறும் சொர்க்கவாசல் சென்றுவந்த போதிலும்
மீண்டும் மனிதன்  மனப்பான்மை மாறாமல்
ஆண்டுப்  பயணத்தை நாளும் தொடர்கின்றான்!
ஆண்டவன் ஏற்பதுபோல் மாறு.

PP&C

 திட்டமிடுதல்
அடுக்களையில் இருந்து
    ஆரம்பம்

எனது மேலாளர் திரு குமரப்பன் சொன்ன கருத்துக்குக் கவிதை:

MR. O.KUMARAPPAN IN A MEETING
---------------------------------------------------------------------
PLANNING STARTS FROM KITCHEN
          (PP&C)
------------------------------------------------------------------------------
நம்வீட்டில் நல்விருந்து உண்பதற்கு நண்பர்கள்
நண்பகலில் வந்திடுவார்! கண்ணே!  சமைத்திடுவாய்
என்றேதான் சொல்லிவிட்டுச் செல்வார் கணவர்தான்!
கண்மூடிச் சிந்திப்பாள் காண்

என்ன வகையுணவு யாருக்கு எப்படி
என்றெதான் கேட்டறிவாள்! அங்கே அதற்கேற்ப
தன்மனதுள் திட்டமிட்டே பட்டியல் போடுவாள்!
அங்கே செயல்படுவாள் சென்று.

இருப்பில் உள்ளபொருள் காய்கறிகள் மற்றும்
இருப்பிலே இல்லாத தென்ன? என்றே
கருத்துடன் திட்டமிட்டு வாங்கிவந்து வைத்தே
அருமை மணங்கமழ அங்கே சமைப்பாள்!
விருந்து தயார்தான் பார்.

பிடித்தது மற்றும் பிடிக்காத தென்ன?
நொடியில் கணக்கிட்டே அங்கே பிரிப்பாள்!
இடத்தையும் கண்ணாடி போலாக்கி வைப்பாள்!
இடத்தூய்மை வல்லுநரைப் பார்.

விருந்தினர் வந்தே முகம்மலர உண்பார்!
பெருமிதம் கொள்வாள் அடுக்களை மங்கை!
விருந்தைத் திட்டமிடும் அந்தத் திறமை
அரும்புதல் இவ்விடத்தில் தான்.

உற்பத்தி செய்வதற்குத் திட்டமிடும் ஆலையிலே
கச்சிதமாய்ச் செய்கின்றார்! இத்தனைக்கும் மூலமெங்கே?
திட்டமிடும் ஆற்றல் அடுக்களையில் ஆரம்பம்!
கற்றதெங்கே அம்மங்கை? சொல்

மதுரை பாபாராஜ்

விளையாட்டுப் பிள்ளை!
-------------------------
வயதோ அறுபதுக்கு மேலானால் தூக்கம்
விலகும்! நெருங்கும்! விலகும்! நெருங்கும்!
விளையாட்டுப் பிள்ளையாய் மாறி இரவில்
அலைபாய வைத்திருக்கும் பார்.

மதுரை பாபாராஜ்