Wednesday, August 30, 2017




வாழ்வியல்!

எல்லாம் நமக்கென்றே எண்ணுகின்ற நேரத்தில்
எல்லாம் உனக்கில்லை என்றுணர்த்தும் வாழ்வியல்!
மெள்ள நகர்வோம் நமக்கில்லை என்றுதான்
எல்லாம் நமைச்சூழும் பார்.

இளமை/ முதுமை

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப்போல்
துள்ளும் இளமை துடித்திருக்க-- வில்லில்
இழுபடும் நாண்போல நாளும் முதுமை
இழுபறியில் வாடுது பார்.

Tuesday, August 29, 2017

கிடைத்ததே இன்பம்!

கிடைத்திருக்கும் வாழ்க்கையை விட்டுவிட்டு நீயோ
கிடைக்காத ஒன்றெண்ணி எங்கே பயணம்?
கிடைத்ததில் நிம்மதியைக் காண்பதே இன்பம்!
கிடைத்ததில் வாழப் பழகு.

குற்றாலம்

நீரின்றி நாளும் வறண்டிருந்த குற்றாலம்
நீரலைகள் துள்ளிவந்து தொட்டவுடன் உற்சாகம்
பேரலைகள் கோலத்தில் பொங்கிவர சேய்கள்போல்
பாரதிர கைகொட்டும் பேரழகில் மெய்மறந்து
தாளமிடும் பேரின்பம் பார்.

மாயை

கோடி கோடி கோடி கோடி
கொட்டி கொட்டி கொட்டியே
மாடி மாடி மாடி மாடி
கட்டி கட்டி கட்டியே
தேடித் தேடி தேடித் தேடி
குவித்துக் குவித்துக் குவித்துப் பொருளுடன்
தடுக்கித் தடுக்கி விழுந்த போதிலும்
ஓடி ஓடி ஓடி ஓடி
நாளு மிங்கே உழைக் கின்றார்.
நாடி நாடி நாடி நாடி
நாடி ஓட்டம் நிற்கும் மட்டும்
கூடிக் கூடிக் கூடிக் கூடி
மாயை யிலே வாழ்கின்றார்!

Wednesday, August 23, 2017


ஈடற்ற ஓவியர்!

வாடகை வீட்டில் சுவர்முழுதும் சித்திரங்கள்!
ஈடற்ற ஓவியரோ பேரக் குழந்தைகள்!
ஆகா! எனப்போற்றும் தாய்தந்தை சுற்றத்தார்!
வாடகை கேட்கவந்தார் வீட்டின் உரிமையாளர்!
வாயடைத்துப் போனார் மயங்கி விழாக்குறைதான்!
ஈடற்ற சேட்டையென்றார் பார்.


நிறம்பூச வேண்டாம்!

நடப்பதை எல்லாம் இயல்பாய்க் கருது!
நடப்பதற் கெல்லாம் நிறம்பூச வேண்டாம்!
நிறம்பூசிப் பார்த்தால் நிலைகுலைய வைக்கும்!
நிறங்களை நம்பாதே நீ.


நிம்மதிக்கு வேட்டு!

நிறையும் குறையும் நிறைந்தது வாழ்க்கை!
நிறைகளில் நிம்மதி காணப் பழகு!
குறைகளை எண்ணிக் குமுறிட வேண்டாம்!
பதைபதைத்தல் நிம்மதிக்கு வேட்டு


அமாவாசை

மற்றநாளில் மாசுகளின் கூடாரம்! பெற்றோரை
சற்றும் நினைக்காத நன்றி  அவதாரம்!
ஒற்றைநாள் இந்த அமாவாசை மட்டுமே
பெற்றோரை எண்ணும் திருநாளாம்! நாள்தோறும்
பெற்றோரைப் போற்றுதலே பண்பு.

பேச்சும் சர்ச்சையும்!

தேவையற்ற  பேச்சுகளால் தேவையற்ற சர்ச்சைகள்!
தேவையுடன் பேசினால் தேவைக்குள் சர்ச்சைகள!
தேவையோ இல்லையோ சர்ச்சைகள் எப்படியும்
ஆவலுடன்  வந்துநிற்கும் முன்.

Sunday, August 20, 2017

மாயை

உருவக் கவர்ச்சி பருவக் கிளர்ச்சி
இரண்டும் உலவும் தொடுவானம், காதல்!
இரண்டு மனங்கள் புரள்கின்ற மாயை
களமமைக்க நாளும் தவிப்பு.

Friday, August 11, 2017

பொன்விழா நாயகன் சரவண பெருமாள்




பொன்விழா நாயகன்
மு.சரவணப் பெருமாள் பிறந்தநாள் வாழ்த்து

03.08.2017

பொன்விழா நாயகன் எங்கள் சரவணன்
இன்பமான இல்லறத்தில் இல்லத் தரசியும்
பொன்மகளும் சூழ்ந்திருக்க பல்வளங்கள் பெற்றேதான்
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்( மாமா)
வசந்தா( அத்தை)


உடன் வாழ்த்தும் இதயங்கள்

                     
               ரவி--சுபா—சுஷாந்த்            எழில்--சத்யா--நிகில்---வருண்

சூழ்நிலைக் கோலம்!

நடப்பதோ இங்கே நடக்கிறது! என்னால்
நடப்பதை ஏற்க மனமில்லை! ஆனால்
நடப்பதை வேடிக்கை பாரென்றால்  நானோ
இயங்காத பொம்மையா? இங்கு.

உணர்ச்சி துடிக்கிறதே! உள்ளத்தில் ஏதோ
இனம்புரியா வேதனை என்னை வதைத்து
மனம்பதைக்க வைக்கிறதே! என்னென்பேன்! தாயே!
தினமிந்தக் கோலந்தான் ஏன்?

உன்விதியா? என்விதியா? தங்குதடை  இல்லாமல்
தன்வழியில் வாழ்க்கைப் பயணம்
தொடர்கின்ற
பொன்னான பாதையிலே வேகத் தடைபோல
அங்கங்கே தோன்றுவதேன்? சொல்.

Thursday, August 03, 2017


எல்லைக்குள் வாழ்வோம்!

உறவுகளின் எல்லை சரிந்திடும் போது
சிறகடிக்கும் வக்கிர எண்ணங்கள் துள்ளி!
தடம்மாறிப் போகும் நல்லொழுக்க வாழ்க்கை!
முடைநாற்றம் வீசுமடா பண்பு.


சூழ்நிலையே காரணம்

சூழ்நிலையை ஏற்படுத்தி ஏளனம் செய்வதற்கு
வாய்ப்பைத் தருவதைக் காட்டிலும் -- சூழ்நிலையே
ஏற்படாமல் பார்த்துக்கொள்! யாரும் நகைப்பாரோ?
சூழ்நிலையே காரணம்! சொல்.



நீர்க்குமிழி!

மகிழ்ந்தேன் எனநினைத்தேன்! ஆனால் நொடியில்
மகிழ்ச்சி மறைந்தது! நீர்க்குமிழி போல!
துடித் தேன்!துவண்டேன்! அழு தேன்! கலக்கப்
பிடியில் தளர்ந்தேன் சரிந்து.



ஏமாற்றம்!

நடந்து விடுமோ என அஞ்சி நின்றேன்!
நடக்கவே கூடாது! காத்திருந்து பார்த்தேன்!
நடந்ததும்  சோர்ந்தேன்! இனியென்ன செய்ய?
நடந்ததை ஏற்றேன் நகைத்து.

களங்கள்

போர்க்களத்தில் போராட்டம் வீரத்தைக் காட்டலாம்!
பார்க்களத்தில் போராட்டம் நம்மறிவைக் காட்டலாம்!
தேர்க்களத்தில் போராட்டம் ஒற்றுமையைக் காட்டலாம்!
போர்க்களம் உள்ளமானால் துள்ளும்  உளைச்சலுக்குத்
தீர்வெங்கே காண்பது?செப்பு.