Saturday, December 16, 2006

சிலைகளுக்ககு மரியாதை செலுத்துவோம்

சந்தடிகள் நிறைந்திருக்கும் சந்தை முன்னால்
சந்துகளோ கூடுகின்ற முனையில் மற்றும்
கண்டபடி வாகனங்கள் ஓடும் கோட்டில்
கடைத்தெருவில் நடுத்தெருவில் எல்லாம் நாட்டில்
பண்பாட்டுச் சின்னமான சிலைகள் தம்மை
பரவலாக நிறுத்திவைத்தால் பொறுப்பு யாரோ?
கண்ணெதிரே பறவைகள் எச்சம் இட்டே
கறைப்படுத்தும் களங்கத்தைப் பார்த்தே நிற்போம்!

வரலாறாய் வாழ்ந்தவர்கள் சிலைக ளாக
வடிவங்கள் பெற்றால்தான் நாமும் நாட்டின்
வரலாற்று நாயகரை உணர்ந்து கொள்வோம்!
மறுக்கவில்லை! அதற்காக முறைகள் இன்றி
பலவாறாய் நிற்கவைத்தல் தேவை தானா?
பண்பட்ட அறிஞர்கள் கலந்து பேசி
சிலைவைக்க வரைமுறையை வடித்துத் தந்தால்
சிலையாலே சிக்கலின்றி அமைதி கிட்டும்!

அந்தந்த அமைப்புகளின் வளாகத் திற்குள்
அன்புடனே சிலைநிறுவிப் பராம ரித்தால்
எந்தவொரு வன்முறைக்கும் இடமே இல்லை!
இதயத்தில் நேசமுடன் வணங்க லாமே!
இன்பமுடன் திருவிழாவை வீட்டுக் குள்ளே
இயல்பாகக் கொண்டாடும் நிலையைப் போல
பண்பாட்டின் சின்னமான பெரியோ ருக்குப்
பக்குவமாய் மரியாதை செலுத்த லாமே!

Friday, December 15, 2006

இதுதான் பக்குவம்

உனக்கென உள்ளதை யார்தடுக்கக் கூடும்?
உனக்கில்லை என்பதை இங்கே -- தினையளவும்
யார்கொடுக்கக் கூடும்? அமைதியுடன் பக்குவமாய்ப்
பாரினிலே வாழ்வதுதான் பண்பு.

ஷேர் ஆட்டோ

அதிகப் படியாக ஆட்களை ஏற்றி
கதிகலங்க வைக்கின்ற காட்சி -- அதிர்ச்சியைத்
தந்தாலும் சட்டம் தயங்குவது வேடிக்கை!
என்றுதான் தீர்வோ இதற்கு.