Thursday, March 10, 2011

கலப்புத் திருமணம்

==========================
தலைமுறைச் சிந்தனையின் போக்கால் இங்கே
கலப்புத் திருமணத்தை ஏற்கின்ற கோலம்
அரங்கேறும் காலகட்டம்! மாற்றங்கள் எல்லாம்
மலைத்திட வைக்கிறது பார்.

முற்போக்கா? பிற்போக்கா? ஒன்றும் தெரியாது!
இப்போக்கோ அப்போக்கோ எப்போக்கில் சென்றாலும்
அக்கப்போர் இல்லாமல் வாழ்தல் அறிவுடைமை!
ஒற்றுமையை வேரூன்றச் செய்.

ஒவ்வொரு சாதிக்கும் வாழ்க்கை முறையுண்டு!
ஒவ்வாமை தன்னைப் புறக்கணித்து வாழவேண்டும்!
எல்லா முறைகளையும் ஏற்கின்ற பக்குவந்தான்
தொல்லையின்றி வாழவைக்கும் சொல்.

கலப்புத் திருமணத்தில் எப்படியோ வாழ்ந்த
இரண்டு குடும்பத் துருவங்கள் சேரும்!
உளமாற விட்டுக் கொடுப்பதே மேன்மை!
களமமைத்தல் கீழ்மை! உணர்.

வாழையடி வாழை மரபுகள் மாறிவிடும்!
வாழ்வின் புரிதல் உணர்வுகளும் மாறிவிடும்!
வாழ்க்கை அமையும் முறைக்கே உடன்பட்டு
வாழ்வதற்குக் கற்றுக்கொள் இங்கு.

Wednesday, March 09, 2011

வாழக் கற்றுக்கொள்!


=========================
வாழ்ந்து முடித்து விளிம்பிலே உள்ளவர்கள்
வாழ்வைத் தொடங்கும் இளையோர் மகிழ்ந்திருக்க
நாள்தோறும் விட்டுக் கொடுத்தேதான் வாழவேண்டும்!
வாழ்க்கையின் சாரம் இது.

மனஉரலில் தேவையற்ற எண்ணத்தைப் போட்டுத்
தினமும் அரைத்திருந்தால் நிம்மதி போகும்!
மனஉளைச்சல் தாக்கித்தான் தத்தளிக்க வைக்கும்!
மனத்தை அடக்கப் பழகு.

சந்தேகம் என்னும் களையை அனுமதித்தால்
உண்மையைப் பொய்த்தோற்றம் போலத்தான் நம்பவைக்கும்!
அந்த நிலையில் தலையாட்டி பொம்மையாவார்!
என்னசொன்ன போதும் மறுத்தே புறக்கணிப்பார்!
உண்மை நிலைபுரிய காலம் வழிகாட்டும்!
உண்மை தெரிந்ததும் நாணிக் குறுகிடுவார்!
புண்பட்டதே மிச்சம் உணர்.

இல்லாத ஒன்றை இருப்பதைப் போல்நினைத்துப்
பொல்லாத உள்ளம் பதற்றத்தை ஏற்படுத்தும்!
உள்ளத்தின் தூண்டிலுக்குள் மாட்டித் துடிக்காமல்
உள்ளவரை நிம்மதிதான் கூறு.

உள்ளத்தில் ஊறும் கசடுகளை நீக்கவே
உள்ளத்தைச் சல்லடையாய் மாற்றிச் சலிக்கவேண்டும்!
அல்லவை நீங்கித் தெளிந்துவிடும்! நல்லவை
உள்ளத்தைத் தூய்மையாக்கும் பார்.

மரத்தில் இருக்கும் பலாக்காயை எண்ணி
கரத்தில் இருக்கும் கலாக்காயை விட்ட
ஒருநிலை போல இருப்பதை விட்டே
நெருடலில் வாழ்தல் தவிர்.

Tuesday, March 08, 2011

பொறாமைத் தீ !
======================
அடுத்தவரைப் பார்த்துப் பொறாமையைத் தேக்கித்
தடுமாறும் வாழ்க்கை தறிகெட்டுப் போகும்!
மடுவை மலையாக்கும்! தீயாக மாறி
படுத்தி அலறவைக்கும் பார்.
-----------------------------------------------------------------------------------------
சூழ்நிலை வெள்ளம்!
==========================
பட்டதும் போதும்! படுவதும் போதுமே!
தொட்டனைத் தூறும் மணற்கேணி போலவே
எக்கணமும் சூழ்நிலை வெள்ளப் பெருக்கானால்
நற்றமிழே! என்செய்வேன்? நான்.
-------------------------------------------------------------------------------------

Thursday, March 03, 2011

புறக்கணிப்பு

=======================
இளமையில் நம்மைப் புறக்கணித்தால் நாமும்
களமமைத்துப் போராடி சந்தித்து நிற்போம்!
தளரும் முதுமையில் என்றால் கலக்கத்தில்
புலம்பல்தான் மிஞ்சும்!உணர்.