வாழக் கற்றுக்கொள்!
=========================
வாழ்ந்து முடித்து விளிம்பிலே உள்ளவர்கள்
வாழ்வைத் தொடங்கும் இளையோர் மகிழ்ந்திருக்க
நாள்தோறும் விட்டுக் கொடுத்தேதான் வாழவேண்டும்!
வாழ்க்கையின் சாரம் இது.
மனஉரலில் தேவையற்ற எண்ணத்தைப் போட்டுத்
தினமும் அரைத்திருந்தால் நிம்மதி போகும்!
மனஉளைச்சல் தாக்கித்தான் தத்தளிக்க வைக்கும்!
மனத்தை அடக்கப் பழகு.
சந்தேகம் என்னும் களையை அனுமதித்தால்
உண்மையைப் பொய்த்தோற்றம் போலத்தான் நம்பவைக்கும்!
அந்த நிலையில் தலையாட்டி பொம்மையாவார்!
என்னசொன்ன போதும் மறுத்தே புறக்கணிப்பார்!
உண்மை நிலைபுரிய காலம் வழிகாட்டும்!
உண்மை தெரிந்ததும் நாணிக் குறுகிடுவார்!
புண்பட்டதே மிச்சம் உணர்.
இல்லாத ஒன்றை இருப்பதைப் போல்நினைத்துப்
பொல்லாத உள்ளம் பதற்றத்தை ஏற்படுத்தும்!
உள்ளத்தின் தூண்டிலுக்குள் மாட்டித் துடிக்காமல்
உள்ளவரை நிம்மதிதான் கூறு.
உள்ளத்தில் ஊறும் கசடுகளை நீக்கவே
உள்ளத்தைச் சல்லடையாய் மாற்றிச் சலிக்கவேண்டும்!
அல்லவை நீங்கித் தெளிந்துவிடும்! நல்லவை
உள்ளத்தைத் தூய்மையாக்கும் பார்.
மரத்தில் இருக்கும் பலாக்காயை எண்ணி
கரத்தில் இருக்கும் கலாக்காயை விட்ட
ஒருநிலை போல இருப்பதை விட்டே
நெருடலில் வாழ்தல் தவிர்.
0 Comments:
Post a Comment
<< Home