Monday, February 28, 2011

மீனவரைக் காப்பது யார்?

==================================
இந்திய நாட்டின் அரசும் இலங்கையுடன்
எண்ணற்ற பேச்சுவார்த்தை மூலம் உணர்வுகளை
பண்புடன் இங்கே உரைத்தும் பயனில்லை!
இந்தியன்! என்செய்வான்? சொல்.

விலங்குகளைப் பாதுகாக்க சட்டங்கள் உண்டு!
நிலமண்ணைப் பாதுகாக்க சட்டங்கள் உண்டு!
தரணியிலே மீனவரைக் காப்பதற்கு நாடே!
ஒருசட்டம் இல்லையா? இங்கு!

நூற்றுக் கணக்கான மீனவரைச் சாகடித்தான்!
தூற்றாமல் பேச்சுவார்த்தை சொக்கட்டான் ஆடுகின்றார்!
ஏட்டுச் சுரைக்காய்த் தூது விடுகின்றார்!
காக்க முடியாதா? கூறு!

இலங்கை உணர்வை மதிக்கவேண்டும் என்றே
தயங்காமல் சொல்லும் குணத்தோரே! அந்தோ!
கலங்கிநிற்கும் மீனவரை நீங்கள் மதிக்கும்
உளம்பெற்றால் நன்றென்போம் நாம்.

எல்லையைத் தாண்டினால் சாகடிக்க வேண்டுமா?
எல்லையைத் தாண்டினால் காவலில் கொண்டுபோ!
இல்லையேல் நாட்டில் முறையிடு! இன்னுயிரைக்
கொல்வதற்கு நீயார்?.விளம்பு!

இலங்கையைக் கட்டுப் படுத்தும் துணிவை
இழந்ததேன் என்நாடே! இந்தியன் என்றால்
இலங்கைக்கேன் இந்த இளக்காரம்!அய்யோ!
துயரத்தைத் தீர்ப்பது யார்?

1 Comments:

Blogger Pranavam Ravikumar said...

வாழ்த்துக்கள்!

11:12 PM

 

Post a Comment

<< Home