Monday, November 30, 2020

முத்துவீர குமார் பிறந்தநாள்

 முத்துவீரகுமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து

மனைவி: சரோஜா


நாள்: 01.12.2020

சீரடி பாபாவின் பக்தர் குமாராவார்!

சீர்வைத்துப் பாவியற்றும் ஆற்றல் படைத்தவர்!

நேர்வழியில் இல்லறம் ஏற்றே நடத்துகின்றார்!

வாழ்விலே அன்பு மனைவியுடன் பல்லாண்டு

வாழியவே நாளும் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்(மாமா)

வசந்தா( அத்தை)


7.மக்கட்பேறு

 

குறளுக்குக் குறள்வடிவில் விளக்கம்

7. மக்கட்பேறு

குறள் 61:

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிறவென்றார் அய்யன்.

அறிவிற் சிறந்தவராய்ப் பிள்ளைகள் வாழ்ந்தால்

மதிப்புள்ள வேறுபேறு ஏது?

குறள் 62:

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறினென்றார் அய்யன்!

விழுமிய பண்பார்ந்த பிள்ளைகளைப் பெற்றால்

எழுபிறப்பும் துன்பமில்லை கூறு.

குறள் 63:

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தந்தம் வினையான் வருமென்றார் வள்ளுவர்!

நம்வாழ்க்கை நம்செயல் நம்பயன்கள்

இப்படித்தான்

பிள்ளைகள் வாழ்க்கை அவர்க்கு.

குறள் 64:

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழென்றார் அய்யன்!

அமிழ்தையும் விஞ்சுவது பிள்ளை பிசைந்த

அமுதாகும் பெற்றோர்க்(கு) உணர்.

குறள் 65:

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கென்றார் வள்ளுவர்!

பெற்றோர்க்குப் பிள்ளையைத் தீண்டலோ  மெய்க்கின்பம்!

சொல்மழலை இன்பம் செவிக்கு.

குறள் 66:

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவரென்றார் 

அய்யன்!

குழலோசை யாழோசை இன்பமென்றே சொல்வார்

மழலைச்சொல் கேட்காதோர் தான்.

குறள் 67:

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயலென்றார் வள்ளுவர்!

தந்தை உழைத்துக்  குழந்தைகள் ஆற்றலுடன் 

முன்னேற வைத்தல் கடன்.

குறள் 68:

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிதென்றார் வள்ளுவர்!

பெற்றோரை விஞ்சும் அறிவார்ந்த பிள்ளைகள்

இத்தரணிக் கெல்லாம் பயன்.

குறள் 69:

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாயென்றார் வள்ளுவர்!

தன்பிள்ளை  போற்றப் படும்போது பெற்றெடுத்த

இன்பத்தை விஞ்சும் மகிழ்வு.

குறள் 70:

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்லென்றார் அய்யன்!

இவன்போல் மகன்பெற என்னதவம் 

செய்தார்?

வியக்கவைத்தல் மைந்தன் கடன்.

மதுரை பாபாராஜ்



















 



















மதுரை நினைவுகள்

 மதுரை நினைவுகள்

ஓவியம்: 

நண்பர் கேப்ரியல் பெர்னாண்டோ

1955--1958

கார்த்திகை விழா!

சிறுவனாக வலம்வந்தபோது கார்த்திகை நாளில்!

தெருத்தெரு வாக நடந்துசெல்வோம்! வீட்டின் 

சுவர்களில் கம்பிகளுக்கு மத்தியில் மாடிக்

குடியிருப்பில் என்றே விளக்குகள் தம்மை

அருகருகே வைத்திருக்கும் கோலம்  அழகு!

பெருமகிழ்ச்சி உள்ளத்தில்  அன்று.

கம்பி முனையில் துணிகளைக் கட்டிவைத்தே

எண்ணெயில் முக்கி நெருப்பினைப் பற்றவைப்பார்!

பந்தம் எரியும்! சுழற்றுவார் கம்பியை!

அங்குமிங்கும் ஓடுவார் பார்த்து.

தீப்பந்தம் சுற்றுவதே தேர்ந்த கலையாகும்!

காற்றடிக்கும்! தூறல் மழைபெய்யும்! இப்படித்

தாக்கும் தடைகளிலும் பந்தத்தைச் சுற்றுவார்

ஆற்றலும் வீரமும் என்று.

மதுரை பாபாராஜ்



நண்பர் ஸ்ரீதரன் அனுப்பிய சொல்லோவியம்

 நண்பர் ஸ்ரீதரன் அனுப்பிய சொல்லோவியம்


வெவ்வேறு நீளம் விரல்கள் இருந்தாலும்

எல்லாம் வளைந்திடும் போது சமமாகும்!

இவ்வுலக வாழ்வில் வளைந்தே அனுசரித்தால் 

நம்வாழ்க்கை என்றும் எளிது.

மதுரை பாபாராஜ்

சொல்லழகும் பொருளழகும் பொதியப்பெற்ற வரிகள்..

ஸ்ரீதர்


6. வாழ்க்கைத் துணைநலம்

 குறளுக்குக் குறள்வடிவில் விளக்கம்


6. வாழ்க்கைத் துணைநலம்

குறள் 51:

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணையென்றார் அய்யன்!

மனையறம் காத்து வருவாய்க்குள் வாழும்

குணவதியே இல்லாள்! உணர்.

குறள் 52:

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்லென்றார் அய்யன்!

அனைத்து வளமிருந்தும் பண்பற்ற இல்லாள்

அமைந்தால் சிறப்பெல்லாம் வீண்.

குறள் 53:

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடையென்றார் வள்ளுவர்!

இல்லாள் பண்பரசி! வாழ்க்கை ஒளிமயந்தான்!

முள்ளாய் அமைந்தால் இருள்.

குறள் 54:

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறினென்றார் வள்ளுவர்!

பண்புகளும் கற்பும் மனைவியின் மூச்சானால்

பெண்ணுக்கு மாண்புண்டோ வேறு?

குறள் 55:

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழையென்றார் வள்ளுவர்!

தெய்வமாய் என்றும்  கணவனைப் போற்றுபவள்

நல்மழை போன்றவள்! சாற்று.

குறள் 56:

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் 

பெண்ணென்றார் வள்ளுவர்!

அக்கறை கொண்டே குடும்பத்தை, சார்ந்தோரை

எக்கணமும் காப்பவள் பெண்.

குறள் 57:

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலையென்றார் அய்யன்!

சிறைவைக்கும் பெண்ணடிமை காக்குமா? பெண்ணின் 

முறையான பண்புகளே காப்பு.

குறள் 58:

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகென்றார் வள்ளுவர்!

இல்லறப் புத்துலகம் பொன்னாகும் பெண்ணுக்கு

இல்லறத்தான் தன்மை பொறுத்து.

குறள் 59:

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடையென்றார் அய்யன்!

தாறுமாறாய் வாழ்வில் இணையர் அமைந்துவிட்டால்

ஏறுபோல் நன்னடை ஏது?

குறள் 60:

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறென்றார் வள்ளுவர்!

பண்புகளே இல்லறத்தின் வேராகும்! பிள்ளைகள் 

நல்லவராய் வாழ்ந்தால் புகழ்.

மதுரை பாபாராஜ்

குறளும் எழுதி, குறள்வழிப் பொருள்மிகுக் கவியும் எழுதும் தங்களின் புதிய முயற்சி வெல்க! வாழ்க!!

நற்றமிழ் செ.வ. இராமாநுசன்





























Sunday, November 29, 2020

நண்பர் IG சேகருக்கு வணக்கம்

 நண்பர் IG சேகருக்கு வணக்கம்



நிவர்புயல் போனது! புள்ளினமே!! நாளை

புரேவி புயலாய் வருவதை எண்ணிக்

கலங்காதே எல்லாம் கடந்துபோகும் இங்கே!

புலர்காலை நேர வணக்கத்தைத் தந்தாய்!

விளம்புகிறேன் நன்றியை நான்.


மதுரை பாபாராஜ்

5 இல்வாழ்க்கை

குறளுக்குக் குறள்வடிவில் விளக்கம்.

5. இல்வாழ்க்கை

குறள் 41:

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணையென்றார் வள்ளுவர்!

இல்லாள்  குழந்தைகள் பெற்றோர் இவர்களுக்கு

இல்லறத் தானே துணை.

குறள் 42:

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணையென்றார் அய்யன்!

துறவி , வறியோர்கள், ஆதர வற்றோர்க்(கு)

அறத்துணை இல்லறத்தான் தான்.

குறள் 43:

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தா றோம்பல் தலையென்றார் வள்ளுவர்!

வாழ்ந்தவர்கள், வாழ்வோர், விருந்தோம்பல், சுற்றத்தார்

பேணுதல் இல்லறத்தான் பண்பு.

குறள் 44:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இலயென்றார் அய்யன்!

பழியின்றி சேர்த்த பொருளைப் பகுத்துக்

களித்துண்ணும் வாழ்வே உயர்வு.

குறள் 45:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அதுவென்றார் வள்ளுவர்!

அன்பும் அறமுமிங்கே இல்வாழ்வின்

நற்பயனும்

பண்பென்று மாகும் உணர்.

குறள் 46:

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ தெவனென்றார் அய்யன்.

அறநெறி இல்வாழ்வின் நற்பயனை வேறு

நெறிகளேற்றால்   காண்போமா? கூறு.

குறள் 47:

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலையென்றார் அய்யன்!

இயல்பாக இல்வாழ்க்கை வாழ்வோன் மற்ற

முயற்சி உடையோர்முன் ஏறு.

குறள் 48:

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்தென்றார் வள்ளுவர்!

போற்றும் அறவழியில் மற்றவரை வாழவைப்போர்

பற்றற்றோர் நோன்பைவிட மேல்.

குறள் 49:

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்றென்றார் அய்யன்,!

பழியற்ற இல்வாழ்க்கை வாழ்தல் அறமாம்!

அழியாப் புகழ்தரும் வாழ்வு.

குறள் 50:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படுமென்றார் வள்ளுவர்!

இல்லறத்தில் நல.லறத்தைப் போற்றியே வாழ்பவன்

தெய்வப் பிறவிதான் இங்கு.

மதுரை பாபாராஜ்



4.அறன் வலியுறுத்தல்

 


4. அறன்வலியுறுத்தல்

குறள் 31:

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கென்றார் அய்யன்!
அறவழி மேன்மையும் செல்வமும் என்றும்
சிறந்த பயனைத் தரும்.

குறள் 32:

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடென்றார் அய்யன்!
அறச்செயல் செய்வதைப்போல் வேறுநன்மை உண்டோ?
அதைமறத்தல் என்றுமே தீது.

குறள் 33:

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயலென்றார் வள்ளுவர்!
செய்கின்ற நற்செயலை எல்லாம் அறவழியில்
செய்யவேண்டும் எங்கெனினும் செப்பு.

குறள் 34:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிறவென்றார் அய்யன்!
மனத்தளவில் குற்றமின்றி வாழ்தல் அறமே!
மனவேடம் ஆரவாரந் தான்.

குறள் 35:

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறமென்றார் அய்யன்!
பொறாமையும் ஆசையும் கோபமுடன் வன்சொல்
இலாத குணமே அறம்.

குறள் 36:

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணையென்றார் வள்ளுவர்!
அன்றன்றே நல்லறம் செய்யவேண்டும்!
அப்புகழே,
சென்றபின்பும்  நிற்கும் நிலைத்து.

குறள் 37

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடையென்றார் அய்யன்!
அறவழி இன்பம் சிவிகைக்குள் உள்ளோன்!
மறந்தால் சுமப்போன் துயர்.

குறள் 38:

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்லென்றார் வள்ளுவர்!
வாழ்நாள் முழுதும் விதைக்கும் அறச்செயல்
வாழ்க்கையைச் சீராக்கும் கல்.

குறள் 39:

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இலவென்றார் அய்யன்!
அறவழி இன்பமே இன்பமாம் மற்ற
வழிவந்தால் துன்பந்தான் செப்பு.

குறள் 40:


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழியென்றார் அய்யன்!
அறவழியைப் பின்பற்று நன்மை திரளும்!
புறக்கணித்தால் என்றும் பழி.

மதுரை பாபாராஜ்























Saturday, November 28, 2020

3. நீத்தார் பெருமை

 குறளுக்குக் குறள்வடிவில் பொருள்



3. நீத்தார் பெருமை

குறள் 21:

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவென்றார் அய்யன்!

ஒழுக்கமான உண்மைத் துறவிகளை நூல்கள்

பழுதின்றிப் போற்றும் உணர்.

குறள் 22:

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்றென்றார் அய்யன்!

இறந்தோர் அளவைக் கணித்தல் அரிது!

துறவிப் பெருமையும் தான்.

குறள் 23:

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்

பெருமை பிறங்கிற் றுலகென்றார் அய்யன்!

இருநிலை இன்பதுன்பம் நன்கறிந்தே ஆசை

அறவே நீக்கல் உயர்வு.

குறள் 24:

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்தென்றார் அய்யன்.

உறுதியெனும் அங்குசத்தால்  ஐம்புலனை வென்றோன் 

துறவு நிலத்திற்கு வித்து.

குறள் 25:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரியென்றார் வள்ளுவர்!

ஐம்புலன் ஆசையால் இந்திரன் சீரழிந்தான்!

வென்றால் உயர்வுக்குச் சான்று.

குறள் 26:

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தாரென்றார் அய்யன்!

உயர்செயல்  செய்வோர் பெரியோர்!

இழிந்த

செயல்செய்வோர் தாழ்ந்தோர் உணர்.

குறள் 27:

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகென்றார் அய்யன.

புலனடக்கம் உள்ளோர்க்கே என்றும்

உலகம்

வசப்படும் வாழ்வார் நிமிர்ந்து.


குறள் 28:


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடுமென்றார் அய்யன்.

அறிஞர்கள் பண்பை அவர்களது பேச்சு

செறிவுடன் காட்டும் உணர்.


குறள் 29:


குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்தல் அரிதென்றார் அய்யன்.

அறச்சீற்றம் கொண்ட துறவிகளின் கோபம்

புகைந்தால் எதிர்த்தல் அரிது.


குறள் 30:


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லானென்றார் அய்யன்!

அன்பு கருணை கடைபிடிப்போர் எல்லோரும்

அந்தணர் என்றழைப்போம் சாற்று.

மதுரை பாபாராஜ்

2.வான்சிறப்பு

 குறளுக்குக் குறள்வடிவில் பொருள்

2.வான்சிறப்பு

குறள் 11:

வானின் றுலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் என்றுணரற் பாற்றென்றார் வள்ளுவர்!

வான்மழை இவ்வுலகைக் காப்பதால் 

அம்மழை

தேனமிழ்(து)  என்றேதான் செப்பு.

குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉ மழையென்றார் வள்ளுவர்!

பெய்தே உணவைத் தருகிறது

தானுமிங்கே

நன்னீர் உணவாகும் சொல்.

குறள் 13:

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின் றுடற்றும் பசியென்றார் வள்ளுவர்!

முக்கடல் நீரிருந்தும் வான்பொய்த்தால் நம்பசியோ

பற்றித் துடிக்கவைக்கும் பார்.

குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் காலென்றார் வள்ளுவர்!

வான்மழை பொய்த்தால்  உழவுத்

தொழில்கூட

தேன்மொழியே! குன்றிவிடும் கூறு.

குறள் 15:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழையென்றார் அய்யன்!

கெடுக்கும் உயிரின வாழ்வைத்தான் பொய்த்து!

கொடுக்கும் வளத்தைத்தான் பெய்து.

குறள் 16:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண் பரிதென்றார் அய்யன்!

மழைத்துளி பெய்தால் பசும்புல்  தழைக்கும்!

மழைபொய்த்தால் புல்முளைக் காது.

குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடினென்றார் அய்யன்!

கொடுக்கின்ற வானியல்பு பொய்த்தால் கடல்நீர்

கடுகளவாய் வற்றிவிடும் காண்.

குறள் 18:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டென்றார் அய்யன்!

முறைமழை பொய்த்தால் விழாக்கள்,

பூசை

நடக்காமல் தேங்கிவிடும் செப்பு.

குறள் 19:

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

வானம் வழங்கா தெனினென்றார் வள்ளுவர்!

வான்மழை பொய்த்தால் வழங்குகின்ற தானமும்

ஏற்கும் தவமும் அரிது.

குறள் 20:

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கென்றார் வள்ளுவர்!

யாரெனினும் நீரின்றி வாழ்தல் அரிதாகும்!

நீரோ மழைபெய்தால் தான்.

மதுரை பாபாராஜ்

குறள்நெறிக் குரிசில் சி.ஆர்.வாழ்த்து

புது வடிவம்.. 

புதுவெள்ளம்..

புதிய 

குறள் மேல்வைப்பு நூல்..

 வாழ்த்துகள் பாபா.. 

புகுந்து விளையாடுங்க 👍😊💐

Dr.C.ரமேஷ் அனுப்பிய படம்

 

Dr.C.ரமேஷ் அனுப்பிய படம்


மொழியாக்கம்!

மலைபோன்ற மாச்செயல் செய்வதற்கு நாமோ

தடைபோடும் சின்னஞ் சிறுகற்கள் தம்மைப்

புறக்கணித்துச் செல்லவேண்டும் இந்தப் புவியில்!

திறம்படச் செய்தல் முனைப்பு.


மதுரை பாபாராஜ்

நண்பர் பாலமுருகன் நற்றமிழ்போல் வாழ்க!

 ThamizhiyalanPeter: 

சான்றோர்த்தளத்தின் இயக்குநர் முனைவர். பாலமுருகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.👍

நண்பர் பாலமுருகன் நற்றமிழ்போல் வாழ்க!


28.11.20

சான்றோர் தளத்தின் இயக்குநர், வல்லுநர்

பால முருகனின் பன்முக ஆற்றலுடன்

தேன்தமிழ்த் தொண்டு வளர்ந்தோங்கி  வாழியவே!

பாமணக்க வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

Friday, November 27, 2020

1. கடவுள் வாழ்த்து

 குறளுக்குக் குறள்வடிவில் பொருள்


1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகென்றார் அய்யன்!

அகரம் மொழிக்கு முதலாம்! இறையோ

உலகின் முதலென் றறி.

2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனினென்றார் வள்ளுவர்!

கற்றும் பணிவின்றி சான்றோர்முன் பண்பிழந்தால்

சற்றும் பயனில்லை சாற்று.

குறள் 4:

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இலயென்றார் வள்ளுவர்!

வேண்டியோர் வேண்டாதோர் பாராத சான்றோரைப்

போற்று, துயரில்லை இங்கு.

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வாரென்றார் அய்யன்!

நெறிபிறழ்வே இன்றியே ஐம்புலனை ஆட்கொள்!

ஒழுக்கம் நிமிரவைக்கும் சொல்.

குறளுக்குக் குறள்வடிவில் பொருள்

குறள் 7:

தனக்குவமை  இல்லாதான் தாள்சேர்ந்தார்க்  கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிதென்றார் அய்யன்.

இணையற்ற சான்றோர் வழிநடந்தால்

தீரும்

மனக்கவலை மக்களுக்குத் தான்.

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தாரென்றார் அய்யன்!

நெறிபிறழாச் சான்றோர் வழிமறந்தால் 

நீந்த

முடியாது துன்பக் கடல்.

மதுரை பாபாராஜ்



மதுரை பாபாராஜ்

மலை- அலை- சிலை!

 மலை- அலை- சிலை!



கற்கள் திரண்டே எழுந்தால் மலையாகும்!

துளிகள் திரண்டே எழுந்தால் அலையாகும்!

கற்கள் உருவம் அடைந்தால் சிலையாகும்!

அற்புத ஆற்றல் இயற்கைக்கும் மாந்தருக்கும்

எப்போதும் உண்டென் றுணர்.


மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை

தமிழ்போல் தலைநிமிர்ந்து நிற்கின்றாய் வந்து!

இமயத்தின் கம்பீரம்! 

வெவ்வேறு வண்ணம்

அமைந்துமே ஒற்றுமை இந்தியா போல!

வணங்குகிறேன் நன்றி யுடன்.


மதுரை பாபாராஜ்


நண்பர். IG சேகர்் அனுப்பிய படம்

 வணக்கம்🙏



நண்பர் IG சேகருக்கு வணக்கம்


கீழ்வானில் மஞ்சள் நிறக்கதிரோன் மேலெழுந்து

காலை வணக்கத்தைக் கூறி விடிந்ததை

வாழ்த்திக் கடற்பரப்பைத்

தன்கதிரால் தொட்டணைக்கும்

காட்சிக் கவிதையைக் காண்.


மதுரை பாபாராஜ்

மரம் உணர்த்தும் பாடம்

 மரம் உணர்த்தும் பாடம்!


நுரையீரல் போல்வடிவில் நிற்கும் அருமை

மரம்நமக்குத் தேவை பிராணவாயு என்றே

உரக்க உரைத்தேதான் எச்சரித்து மக்கள்

நுரையீரல் காக்கவேண்டும் என்றே உணர்த்தி

இயல்பாக சொல்கிறது பார்.


மதுரை பாபாராஜ்


உழவு

 உழவே தலை!


மழையே பொழிந்தால் உழவர் உழைப்பார்!

உழைத்தால் உழவும் தழைக்கும்! உழவர் தழைப்பார் ! தழைத்தால் உழவர் பிழைப்பார்!

உழந்தும் உழவே  தலை.


மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகருக்கு நன்றி

 வணக்கம்.


அருமைப் பறவையே! காலைப் பொழுதில்

தருகின்றாய் நட்பு வணக்கத்தை நின்று!

இருவண்ணப் பறவையே நண்பருக்கு நன்றி

தருகின்றேன்  சொல்லவேண்டும் சென்று.


மதுரை பாபாராஜ்


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்

கூட்டில்  குடும்பமாக கூட்டமாய் வாழ்கின்றாய்!
நாட்டில் தனிமையில் சுற்றி வருகின்றாய்!
நாட்டிலோ வீட்டிலோ எங்கிருந்த போதிலும்
மாந்தர்கள்  நாங்கள் தனித்திருக்க வேண்டுமாம்!
ஆட்டும் கொரோனாவைச் சாடு.

மதுரை பாபாராஜ்

திண்டுக்கல் ராசாவுக்கு வாழ்த்து

 திண்டுக்கல் ராசாவுக்கு வாழ்த்து


திண்டுக்கல் வீட்டுத் தோட்டம்


காலைப் பொழுதிலே கைகட்டி நின்றுகொண்டு

தோட்டத்தில் பூத்திருக்கும் சூரிய காந்தியை

ஆசையுடன் பார்த்திருக்கும் ராசாவே! பூந்தோட்டக்

காவலரே வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகருக்கு வணக்கம்.

 நண்பர் IG சேகருக்கு வணக்கம்.



நிவரே! நகர்ந்தேதான் சென்றாய்! கடலும்

சுவடின்றி பேரமைதி காட்ட கதிரோன்

அழகாக வானத்தில் எட்டித்தான் பார்க்க

கலைமனம் காலை வணக்கத்தைக் கூற

வழங்குகிறேன் நண்பருக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

பண்பே உரைகல்

 பண்பே உரைகல்!


குறள் 505


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்லென்றார் அய்யன்!

சிறுமையே வாழ்வின் பெருமையென எண்ணி

உறுத்தலின்றி வாழ்வோர் நடைப்பிண மாவார்!

சிறுமை பெருமை இரண்டுமே பண்பைப்

பொறுத்தே அமையும் உணர்.


மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பிய படம்

 மருமகன் ரவி அனுப்பிய படம்


மொழியாக்கம்


பார்ப்பவரின் பார்வை பொறுத்தே அழகாகும்!

பார்ப்பவர் வண்ணவண்ணக் கண்ணாடி யால்பார்த்தால்

பார்ப்பதெல்லாம் வண்ணமாகி காட்சிப் பிழையாகி

சேரும் குழப்பங்கள் தான்.


மதுரை பாபாராஜ்


பாலா நாட்டுக்குறள் குறுந்தகடு வெளியீடு

 

நாட்டுக்குறள் குறுந்தகடு வெளியீடும்

www.voice of valluvar.org இணையதளம்

தொடக்கவிழாவும்



நாள் 27.11.2016


குறளிசைப்

பாடல்கள் : கவிஞர் பாலா

இசை.       : தாஜ் நூர்


குறள்கள் குறள்களுக் கேற்றவண்ணம் பாலா

தடம்பதித்த பாடல்கள் பாடலுக் கேற்ப

இசைப்பண் பாடலைப் பாடியவர் என்றே

சிறப்பான கூட்டணியில் சேர்ந்தே ரசித்தோம்!

மறக்க முடியுமா? நிகழ்வு.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில் புத்தன் அனுப்பிய படம்

 நண்பர் எழில் புத்தன் அனுப்பிய படம்



நீயோ மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டுமென்றே

தாரணியில் நாளும் நொடிகள் மணித்துளிகள்

வாழ்வில் உருவாக்கப் பட்டன! ஒத்திவைத்து

காரணம் சொல்லாதே! வாழ்வை அனுபவி!

வாழ்க்கை ஒருமுறை தான்.


மதுரை பாபாராஜ்

Thursday, November 26, 2020

அகழ்வாரைத் தாங்கும் நிலமே மக்கள்

 அகழ்வாரைத் தாங்கும் நிலமே மக்கள்!


அவரைச் சரியில்லை என்றேதான் சொல்லி

இவர்வருவார்! கண்ணே! இவர்தவறைச் சொன்னால்

அவர்செய்ய வில்லையா? என்பார்!  இவர்கள்

அவரைத்தான் சொல்ல அவர்கள் இவரைத்

தவறென்று சொல்ல மக்களோ பார்ப்பார்!

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலைநிலையில் மக்கள்!

எவரைத்தான் நம்புவதோ இங்கு?


மதுரை பாபாராஜ்


நிவர் தாக்கம்

 நிவர் புயலின் தாக்கம்!


ஆழியில் தோன்றி நகர்ந்து நகர்ந்தேதான்

ஊழியாய் மாறி கரையைக் கடந்திடும்

வேளையில் ஊருக்கும் மக்களுக்கும் சேதத்தை

ஊளையிட்டே  பேரழிவாய் ஏற்படுத்திச் செல்கின்றாய்!

கூரைகளைப் பிய்த்தெறிந்தும் வாழை, பயிரினத்தை

ஈவிரக்கம் இல்லாமல் சாய்த்துவிட்டுப் போகின்றாய்!

மாமரங்கள் சாய்ந்தே சரிந்துவிழும் கோலங்கள்!

மின்கம்பம் சாய்ந்துவிழ வெள்ளப் பெருக்கெடுத்து

அங்கங்கே வீட்டுக்குள் பாய்கின்றாய்

மக்களோ

எங்கெங்கோ ஓடுகின்றார் வாழ்விடம் தேடித்தான்!

துன்பத் துயரே நிவர்.


மதுரை பாபாராஜ்


இதுவும் கடந்து போகும்


 இதுவும் கடந்து போகும்..🙏முருகு


கடந்தேதான் போவதற்குள் நம்மைக்

கடைந்துக்

கடைந்தே ஒருவழி யாக்கித்தான் பார்க்கும்!

நடக்கவும் தெம்பின்றி வாழவழி யின்றி

முடக்குமே என்செய்வார்  இங்கு?


மதுரை பாபாராஜ்

பேத்தி திவ்யஸ்ரீ-- பிறந்தநாள் வாழ்த்து

 


பிறந்தநாள் வாழ்த்து


பேத்தி திவ்யஸ்ரீ-- பிறந்தநாள் வாழ்த்து



பெற்றோர்: 

ராதிகா -- நாராயணன் இணையர்


26.11.20


இன்று உனக்குப் பிறந்தநாள்                  

அனைவரும் மகிழும் சிறந்தநாள்


நாங்கள் எல்லாம் கூடிநின்று

பாடு கின்றோம் வாழ்த்துப்பா!


அம்மா அப்பா சொன்னபடி

கேட்டு நடந்தால் நல்லது!


தாத்தா பாட்டி பெரியோர்கள்

ஆசிகள் பெற்று வாழியவே!


ஆசான் சொல்லும் பாடத்தைப்

படித்து நாளும் முன்னேறு!


படிக்க கிடைக்கும் வாய்ப்புகளில்

கற்றுத் தெளிதல் கடமையாம்!


ஓவியத் திறமையை  வளர்த்துக்கொள்!

பன்முக ஆற்றல் உன்னிடந்தான்!


உழைப்பே என்றும் உயர்வுதரும்!

கடமை உணர்வே புகழ்சேர்க்கும்.!


வாழ்க வாழ்க திவ்யஸ்ரீ!

தமிழ்போல் வாழ்க வாழியவே!


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்




நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பர் IG சேகருக்கு வணக்கமும் நன்றி


யும்!


என்ன பறவையே? அப்படிப் பார்க்கிறாய்?

தென்றலை எண்ணிவந்து வன்புயலில் சிக்கினாயா?

எங்களைப் போலத்தான் கூட்டில் அடங்கினால்

இந்த நிவர்ப்புயலின் வேகமுன்னைத் தாக்காது!

வந்தாய் வணக்கத்தைத் தந்துவிட்டாய் நண்பருக்கு

நன்றியைக் கூறிவிட்டுப் பாதுகாப்பாய்க் 

கூட்டுக்குள்

சென்றுவிடு பாதுகாப்பாய்த் தான்.


மதுரை பாபாராஜ்

Wednesday, November 25, 2020

நிவர்புயல் அரசுக்கும் முன்களப் பணஅனைவருக்கும் நன்றி!

 நிவர் புயல் 

முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி!



உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.


புயல்வெள்ளம் பாராமல் மக்களைக் காக்கும்

களப்பணி யாளர் அனைவருக்கும் நன்றி!

பலவாறு சிந்தித்து தன்னல மின்றிப்

பொதுநலத் தொண்டில் பம்பரம்போல் சுற்றிச்

சுழன்றே கடமைகள் நேயமுடன் செய்தார்!

கழன்றுவிழும் ஆடையைக் காக்கும் கரம்போல்

விழிப்புடன் காத்தவரை வாழ்த்து.


முதல்வர் முதலாய் அமைச்சர்கள் நின்று

கடமைகள் ஆற்றினர் எச்சரிக்கை தந்தே!

எதிர்க்கட்சி, ஆர்வலர்கள்  எல்லோரும்  வந்தே

துணைநின்றார் மக்களுக்கு! ஊர்கூடித் தேரை

இழுத்தனர் பங்கெடுத்து தான்.


மதுரை பாபாராஜ்

வருகிறது நிவர்

 வருகிறது நிவர்!


25.11.20


மழைபெய்யும் காரணத்தால் பூங்கா

மரத்தில்

அழகாய்ப் பறவைகள் வந்தே ஒலிகள்

இசைக்கும் 

நிலைமாறி இங்கே தவளைகள் கூட்டம்

ஒலியெழுப்பும் கோலமாச்சு பார்.


பூங்காவில் தண்ணீரோ தேங்கி நிறைந்திருக்க

ஆங்காங்கே வீடுகளின் பின்புறம் நீர்த்தேக்கம்!

தேங்குகின்ற தண்ணீர் பெருகித்தான் வீட்டுக்குள்

போகத் துடிக்கிறதே பார்.


தெருவில் முழங்கால் அளவில் மழைநீர்!

பெருமூச்சு விட்டேதான் மின்சாரம் இன்றி

ஒருவாழ்க்கை காணும் அனுபவத்தில் இன்று!

வருமாம் புயல் நிவர்.


மதுரை பாபாராஜ்


Tuesday, November 24, 2020

இயற்கை படைக்கும் அழகு


 இயற்கை படைக்கும் அழகு!


கொடிச்சரம் தந்த இயற்கைக் கரங்கள்

படைத்த அழகோ அழகெனப் பாடு!

மழைச்சரம் தந்தே இயற்கை வளத்தைப்

பெருக்கும் அழகோ அழகு.


மதுரை பாபாராஜ்

திருமதி அலமேலு சொக்கலிங்கம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

 மதிப்பிற்குரிய அலமேலு சொக்கலிங்கம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து



25.11.20


வள்ளுவத்தின் இல்லறத்தை அன்றாடம் பின்பற்றி

நல்லதொரு நற்குடும்பம் பல்கலைக் கூடமென்ற

நல்லறத்தைப் பேணுகின்றார்! அன்புக் கணவனும்

நல்லமகன் ராம்குமாரும் சூழ்ந்திருக்க பெற்றோரின்

ஆசியுடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


Dr.C.ரமேஷ் vovஅனுப்பிய படம்

 குடும்பமே வாழ்க்கை!


நேரத்தை நீங்கள் அதிகமாக

உங்களுடன்

வாழ்ந்து பாருங்கள் உங்களை 

யாரென்று

நீங்கள் உணர்ந்தே விரும்புவீர்கள் உங்களை!

நீங்கள் வாழ்வின் உயிர்.


மதுரை பாபாராஜ்


திரு குமரப்பன் அனுப்பிய காணொளி

 

திரு குமரப்பன் அனுப்பிய காணொளி

இஸ்ரேல் பாலைவன ஜின் ( ZIN) ஆறு

மழைநீரால் உயிர்த்தெழ்ழுந்த காட்சி!


மலைப்பக்கம் மாமழை பெய்து வறண்ட

நிலைகொண்ட பாலை வனத்துள்ளே ஆற்றில் 

மழைநீர் திரண்டு நிரம்பி வழிந்து

குழிக்குள் நிரம்பியதைக் கண்டேதான் மக்கள்

விலகிநின்று பார்த்து ரசித்தார் களித்து!

உயிர்த்தெழுந்த ஆறோ அழகு.


மதுரை பாபாராஜ்


குருமா குழம்பு

 குருமாக் குழம்பு


உருளைக்கி ழங்கு, புடலங்காய், வாழை

முருங்கைக்காய், முள்ளங்கி, கத்திரி நூல்கோலும்

உருண்டையாய் டர்னிப்பு, காயொன்றப்  போட்டு

குருமா குழம்பினை வைக்கலாம்  வாகாய்!

குருமா மணமே மணம்.


செய்முறை


பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றியே பட்டையுடன் 

சோம்பு கிராம்புதனைச் சேர்த்துப் பொறித்ததும்

வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்!

பச்சை மிளகாயும் பூண்டுடன் இஞ்சியும்

கொஞ்சம் கருவேப் பிலையுடன் காய்சேர்த்து

நன்கு  வதக்கி தனியா பொடியுடன் 

மஞ்சள் மிளகாய்ப் பொடிசேர்த்து உப்புடன்

தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிட்டு காய்களோ

வெந்ததும் தேங்கா, கசகசா, முந்திரியை

நன்கு அரைத்து கலந்து கொதிக்கவிட்டு

கொத்தமல்லி தூவியே நெய்விட்டுப் பாருங்கள்

அப்பாடி! அங்கே குருமா தயார்தான்!

அப்படியே ஊற்றிச் சோறில் பிசைந்தேதான்

இப்போதே சாப்பிடுங்கள் பார்த்து.


மதுரை பாபாராஜ்



பெயரில் என்ன இருக்கிறது?

 ரோமியோ ஜூலியட்!


பெயரில் என்ன இருக்கிறது?



WHAT IS THERE IN A NAME?


ரோமியோ ஜூலியட்!


பெயரில் என்ன இருக்கிறது?


WHAT IS THERE IN A NAME?


ரோமியோ என்ற பெயர்தானே வில்லங்கம்?

ரோமியோ சார்ந்த குடும்பத்தார்  ஜூலியட்

தான்சார்ந்து வாழும் குடும்பத்தார் நேர்ப்பகை

வான்முட்ட உள்ளவர்கள் அங்கு.


ரோசாவை எப்பெயர் கொண்டே அழைத்தாலும்

ரோசா நறுமணம் மாறுமோ? நாட்டில்தான்!

ரோமியோ என்ற பெயரிலென்ன உள்ளது?

ரோமியோவின் பண்புகள் மாறாது! அன்பகமே!

ரோமியோ! பேர்மாற்றம் செய்துவிடு! அப்பெயரில்

ஏனோ பகைமனம் கொள்கிறார்! மாற்றிவிடு!

வீணர்கள் என்றேதான் சாடு.


மதுரை பாபாராஜ்

தக்கார் வி என் சிதம்பரம்


 பண்பாளர் தெய்வத்திரு வி. என். சிதம்பரம் அய்யாவுக்கு 

நினைவேந்தல் பா!


24.11.20


ஆறாத் துயரில் துடிக்கின்றோம் நாங்கள்தான்!

மாறா மனிதர் இவர்போல யாருளார்?

வாராது வந்திருந்த மாமணி எங்குசென்றார்?

பார்த்துபார்த்து வாழவைத்தார் இங்குதான் நேயமுடன்!

ஈரமனத் தக்காரை நாளும் வணங்குவோம்!

பார்போற்ற வாழும் புகழ்.


மதுரை பாபாராஜ்

Monday, November 23, 2020

இராமாநுசன் தம்பி மகன் பேத்திகளுடன்

  Vovramanujan: எனது தம்பி மகன் சோழவேந்தனின் தோள்களில் தொற்றிக் கொண்டிருப்பவர்கள் உறவில் பெயர்த்திகள் ஐயா!



சோழவேந்தன் தோள்களில் ராமா நுசனாரின்

பேத்திகள் தொற்றிப் படர்ந்தே சிரிக்கின்றார்!

ஊற்றெடுக்கும் இன்பத்தில் மெய்மறந்து சோழவேந்தன்

தானும் சிரிக்கின்றார் சேர்ந்து.


மதுரை பாபாராஜ்

ஓவியரின் கலைத்திறன்

 

ஓவியரின் கலைத்திறன்!


முதுமை வழியும் முகங்களை உற்றுக்

கவனித்தால் அங்கே இளைஞர்

இசையைக்

கருவியில் மீட்டவும் மங்கையோ பார்த்து

ரசிக்கின்ற காட்சியும் பார்ப்போம்! கலைஞன்

விரல்களின் ஓவிய ஆற்றல் புரியும்!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


நிவர் புயல்! நகர்ந்தால் நலம்!

 நிவர் புயல்! நகர்ந்தால் நலம்!



எப்படித் தாக்குமோ? எங்குவந்து தாக்குமோ?

அப்படியே தாக்கினால் என்னென்ன செய்யவேண்டும்?

இப்படியும் அப்படியும் சிந்தித்தே எச்சரிக்கை

மக்களுக்குச் செய்கின்றார்  செப்பு.


கனமழை பெய்யுமோ?  வன்புயல்தான் வீசி

மனக்கலக்கம் அச்சத்தை ஏற்படுத்த லாமோ?

மனைவீடு தாழ்வுப் பகுதிகள் எல்லாம்

அணையுடைத்த வெள்ளமாகு மோ?


பேரிடர் மீட்புக் குழுவும், அமைச்சர்கள்

நாளிதழ், ஊடகங்கள், கட்சிகள் எல்லோரும்

ஓய்வின்றி முன்வந்தே காக்கும் பொறுப்பினை

ஆர்வமுடன்  ஏற்கின்றார் இங்கு.


பாதித்தால் எல்லாம் தலைகீழாய் மாறிவிடும்!

பதிப்பே இன்றி நகர்ந்தால் நலமாகும்!

ஊர்கூடி தேரிழுக்கும் இந்த முயற்சிக்குத் 

தோள்கொடுப்போம் எல்லோரும் சேர்ந்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகருக்கு வணக்கம்!

 நண்பர் IG சேகருக்கு வணக்கம்!



நிவர் புயல் எச்சரிக்கை!


24/25.11.20


கனமழையா? இல்லை புயல்மழையா? என்றே

மனதில் கலக்கமுடன் வந்திருக்கும் நீயோ

வணக்கத்தைத் தந்தே

கடமை தன்னைச்

சுணக்கமின்றி செய்தமைக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

இயல்பு

 இயல்பு!


விழுந்தோம் எழுந்தோம் எழுந்தும் விழுந்தோம்

விழுந்தால் அழுதோம் எழுந்தால் சிரித்தோம்

சிரித்தும் விழுந்தோம் அழுதும் எழுந்தோம்!

இரண்டுமே வாழ்வின் இயல்பு.


மதுரை பாபாராஜ்

குறவர்கள்

 நரிக்குறவர்கள்


குறிஞ்சி மலைப்பகுதி வாழ்ந்தோர் குறவர்!

குறிஞ்சியை விட்டேதான் வாழ்நிலைக் கேற்ப

அரசின் குடியிருப்பில் வாழ்கின்றார் சேர்ந்து!

நரிபிடித்து வாழ்ந்தவர்கள் பாசிமணி ஊசி

தெருத்தெருவாய் விற்றவர்கள் முன்னேற எண்ணிப்

படிப்புக் களத்தில் பணிக்களத்தில் என்று

நெறிமுறை வாழ்வை விரும்புகின்றார் இன்று!

குறவர் மொழியான வக்போலி தன்னில்

குறள்கள் மொழிபெயர்க்கப்  பட்ட பெருமை,

சிறப்பு இவர்களுக்(கு) உண்டு.


மதுரை பாபாராஜ்


நண்பர் பென்னர்குமரப்பன் OK

 நண்பர் பென்னர்குமரப்பன் OK


அவர்களுக்கு 


அகவை 75


பிறந்தநாள் வாழ்த்து.


23.11.20


(அதிகாரம்:தெரிந்து வினையாடல் குறள் எண்:517)


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடலென்றார் அய்யன்!

இதற்குப் பொருத்தம் குமரப்ப னாவார்!

சிறப்புடன் வாழ்க மகிழ்ந்து.


பன்முக ஆற்றல் மிளிர்கின்ற நண்பர்

அன்பு மனைவி, மகனும் மருமகளும்

பாசமிகு பேத்திகள் உற்றார் உறவினர்கள்

அன்பு மகளும் மருமகனுடன் பேரன்கள்

என்றுமே சூழ்ந்திருக்க பல்லாண்டு வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

ஆசிகளை நாடும்

மதுரை பாபாராஜ்

வசந்தா

ஜெய்சுக்ரீவ் பிறந்தநாள் வாழ்த்து

 செல்லப்பேரன் 

ஜெய்சுக்ரீவ் பிறந்தநாள் வாழ்த்து



ஐந்தாம் பிறந்த நாள்


பெற்றோர்:

இராமச்சந்திரன் சித்ரா இணையர்


23.11.20


இன்று உனக்குப் பிறந்தநாள்                  

அனைவரும் மகிழும் சிறந்தநாள்


நாங்கள் எல்லாம் கூடிநின்று

பாடு கின்றோம் வாழ்த்துப்பா!


அம்மா அப்பா சொன்னபடி

கேட்டு நடந்தால் நல்லது!


ஆசான் சொல்லும் பாடத்தைப்

படித்து நாளும் முன்னேறு!


படித்து படித்து முன்னேறு

பண்பை வளர்த்து முன்னேறு


திறமையை நன்கு வளர்த்துக்கொள்!

நாளைய வாழ்க்கை உன்வசந்தான்!


உழைப்பே என்றும் உயர்வுதரும்!

கடமை உணர்வே புகழ்சேர்க்கும்.!


வாழ்க வாழ்க ஜெய்சுக்ரீவ்

தமிழ்போல் வாழ்க வாழியவே!


மதுரை பாபாராஜ்

வசந்தா






Sunday, November 22, 2020

நண்பர் எழில் புத்தன் அனுப்பிய சொல்லோவியம்!

 நண்பர் எழில் புத்தன் அனுப்பிய சொல்லோவியம்!



மொழியாக்கம்


ஒன்றால்  உலகத்தை  மாற்ற முடியுமென்றால்

அன்பால்தான் சாதிக்கக் கூடும்! மனிதாநீ

அந்த உயிர்த்துடிப்பாய் மாறு!

மணம்பரப்பு!

உன்னை மதிக்கும் உலகு.


மதுரை பாபாராஜ்

ஒற்றுமையே வலிமை

 ஒற்றுமையே வலிமை!


நான்கு மாடுகள் ஒன்றாக

புல்லை மேய்ந்து வாழ்ந்தனவாம்!


அதனைப் பார்த்த சிங்கராஜா

மாட்டைத் தாக்கப் பாய்ந்ததங்கே!


மாடுகள் நான்கும் சேர்ந்தேதான்

சிங்கத்தை விரட்டித் திரும்பினவாம்!


இதனைப் பார்த்த நரியாரோ

மாடு களைநான் பிரித்திடுவேன்


என்றே சிங்கத் திடம்சொல்ல

சிங்கமும் ஆகா என்றதுவே!


தனித்தனி யாகப் புல்மேய்ந்தால்

நிறைய கிடைக்கும் என்றேதான்


ஆசை மூட்டி மாடுகளைப் 

பிரிந்தே போக வைத்ததுவே!


குகையின் அருகே ஒருமாடு

தனியாய் வந்ததும் சிங்கந்தான்


பாய்ந்தே அடித்துக் கொன்றதங்கே!

நரிக்கும் பங்கைக் கொடுத்ததுபார்!


இதனைப் பார்த்த மாடுகளோ

நரியை அடித்து விரட்டியது!


மூன்று மாடுகள் ஒற்றுமையின்

வலிமை தன்னை உணர்ந்ததுபார்!


ஒற்றுமை தானே வலிமைதான்!

ஒன்றாய் வாழ்தல் விவேகந்தான்!


மதுரை பாபாராஜ்


Dr.சி.ரமேஷ் அனுப்பிய படம்

 PICTURE SENT BY Dr.C.RAMESH,DEHRADUN 


மொழியாக்கம்


எண்ணங்கள் சுற்றிவரும் போக்கு வரத்துள்ள

எண்ணற்ற பாதைகள் கொண்டதே மாந்தரை

ஆட்டும் மனமன்றி வேறில்லை! தேர்ந்தெடுக்கும்

பாதை கவனமுடன் தேர்ந்தெடுத்து வாழவேண்டும்!

பாதை தவறினால் வாழ்க்கை வழிமாறும்!

பாதையே வாழ்வின் திசை.


மதுரை பாபாராஜ்



Saturday, November 21, 2020

காரக் குழம்பு

 காரக்குழம்பு


கத்தரிக்காய் வெண்டைக்காய் பாகற்காய் சுண்டைக்காய்

மஞ்சள் நிறப்பூச(ணி) மற்றும் கருணையுடன்

இத்தகைய காய்களில் ஒன்றைப் பயன்படுத்தி

வைக்கலாம் காரக் குழம்பு.


செய்முறை


மண்சட்டிக் குள்ளே அளவுடன் நல்லெண்ணெய்

மற்றும் வடகமோ அல்லது வெந்தயம்

சீரகம் மற்றும் கடுகு பொறித்ததும்

வெங்காயம் பூண்டு கருவேப் பிலையுடன்

தக்காளி சேர்த்து வதக்கவும்! காய்போட்டு

மஞ்சள்,  புளி,குழம்பு மிளகாய்த்தூள் எல்லாம் கலந்தே அரைத்துவைத்த தேங்காயை

உள்ளிட்டால் உண்ணத் தயார்தான் இக்குழம்பு!

நல்ல சுவைதான் குழம்பு.


மதுரை பாபாராஜ்







இஞ்சியப்பன் கதை

 வஞ்சகரை நம்பாதே!

இஞ்சியப்பன் பொம்மைக் கதை!

GINGER BREAD BOY  STORY

இஞ்சிரொட்டிப் பையனை இஞ்சியப்பன் என்றழைப்போம்!

இஞ்சியப்பன் தன்னை வாங்கிவந்து உண்பதற்குத்

தொட்டபோது துள்ளித்தான் ஓட

 துரத்தினர்!

சிட்டாய்ப் பறந்தான் விரைந்து.


மாடுகள் கொட்டிலுக்குள் சென்றான் முறைத்தன!

ஓடினான் அங்கே குதிரைகள் லாயத்துள்ளே!

ஓங்கிக் கனைத்தன அஞ்சியே ஓடினான்!

ஆற்றங் கரையில் நரிகண்டான்  நின்றுவிட்டான்

ஆற்றைக் கடப்பதற்கே பார்த்து.


நரியும் முதுகிலே ஏறச் சொல்ல

நரியுடைய வால்பகுதிக்கு இஞ்சியப்பன் சென்றான்!

நரியோ நடுப்பகுதிக்கு வந்ததும் தண்ணீர்

உயர்ந்திட, இஞ்சியப்பா! என்முதுகுக்கு வாஎன்(று)

அழைக்க முதுகுமேல் வந்தமர்ந்தான் அங்கு!

சிலதூரம் சென்றது காண்.


இஞ்சியப்பா! என்மூக்கின் மேலே அமர்ந்துவிடு

நன்றாக பாதுகாப்பாய்க் கொண்டுசெல்வேன் வந்துவிடு

என்றதும் இஞ்சியப்பன் நம்பியே வந்துவிட்டான்!

வஞ்சகம்  கொண்ட  நரியங்கே தந்திரமாய்த்

தின்றது இஞ்சியப்ப னைத்தான் ஆசையுடன்!

வஞ்சகரை நம்புதல் தீது.


மதுரை பாபாராஜ்