3. நீத்தார் பெருமை
குறளுக்குக் குறள்வடிவில் பொருள்
3. நீத்தார் பெருமை
குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவென்றார் அய்யன்!
ஒழுக்கமான உண்மைத் துறவிகளை நூல்கள்
பழுதின்றிப் போற்றும் உணர்.
குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்றென்றார் அய்யன்!
இறந்தோர் அளவைக் கணித்தல் அரிது!
துறவிப் பெருமையும் தான்.
குறள் 23:
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகென்றார் அய்யன்!
இருநிலை இன்பதுன்பம் நன்கறிந்தே ஆசை
அறவே நீக்கல் உயர்வு.
குறள் 24:
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தென்றார் அய்யன்.
உறுதியெனும் அங்குசத்தால் ஐம்புலனை வென்றோன்
துறவு நிலத்திற்கு வித்து.
குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரியென்றார் வள்ளுவர்!
ஐம்புலன் ஆசையால் இந்திரன் சீரழிந்தான்!
வென்றால் உயர்வுக்குச் சான்று.
குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தாரென்றார் அய்யன்!
உயர்செயல் செய்வோர் பெரியோர்!
இழிந்த
செயல்செய்வோர் தாழ்ந்தோர் உணர்.
குறள் 27:
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகென்றார் அய்யன.
புலனடக்கம் உள்ளோர்க்கே என்றும்
உலகம்
வசப்படும் வாழ்வார் நிமிர்ந்து.
குறள் 28:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடுமென்றார் அய்யன்.
அறிஞர்கள் பண்பை அவர்களது பேச்சு
செறிவுடன் காட்டும் உணர்.
குறள் 29:
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிதென்றார் அய்யன்.
அறச்சீற்றம் கொண்ட துறவிகளின் கோபம்
புகைந்தால் எதிர்த்தல் அரிது.
குறள் 30:
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லானென்றார் அய்யன்!
அன்பு கருணை கடைபிடிப்போர் எல்லோரும்
அந்தணர் என்றழைப்போம் சாற்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home