Monday, November 30, 2020

7.மக்கட்பேறு

 

குறளுக்குக் குறள்வடிவில் விளக்கம்

7. மக்கட்பேறு

குறள் 61:

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிறவென்றார் அய்யன்.

அறிவிற் சிறந்தவராய்ப் பிள்ளைகள் வாழ்ந்தால்

மதிப்புள்ள வேறுபேறு ஏது?

குறள் 62:

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறினென்றார் அய்யன்!

விழுமிய பண்பார்ந்த பிள்ளைகளைப் பெற்றால்

எழுபிறப்பும் துன்பமில்லை கூறு.

குறள் 63:

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தந்தம் வினையான் வருமென்றார் வள்ளுவர்!

நம்வாழ்க்கை நம்செயல் நம்பயன்கள்

இப்படித்தான்

பிள்ளைகள் வாழ்க்கை அவர்க்கு.

குறள் 64:

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழென்றார் அய்யன்!

அமிழ்தையும் விஞ்சுவது பிள்ளை பிசைந்த

அமுதாகும் பெற்றோர்க்(கு) உணர்.

குறள் 65:

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கென்றார் வள்ளுவர்!

பெற்றோர்க்குப் பிள்ளையைத் தீண்டலோ  மெய்க்கின்பம்!

சொல்மழலை இன்பம் செவிக்கு.

குறள் 66:

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவரென்றார் 

அய்யன்!

குழலோசை யாழோசை இன்பமென்றே சொல்வார்

மழலைச்சொல் கேட்காதோர் தான்.

குறள் 67:

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயலென்றார் வள்ளுவர்!

தந்தை உழைத்துக்  குழந்தைகள் ஆற்றலுடன் 

முன்னேற வைத்தல் கடன்.

குறள் 68:

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிதென்றார் வள்ளுவர்!

பெற்றோரை விஞ்சும் அறிவார்ந்த பிள்ளைகள்

இத்தரணிக் கெல்லாம் பயன்.

குறள் 69:

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாயென்றார் வள்ளுவர்!

தன்பிள்ளை  போற்றப் படும்போது பெற்றெடுத்த

இன்பத்தை விஞ்சும் மகிழ்வு.

குறள் 70:

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்லென்றார் அய்யன்!

இவன்போல் மகன்பெற என்னதவம் 

செய்தார்?

வியக்கவைத்தல் மைந்தன் கடன்.

மதுரை பாபாராஜ்



















 



















0 Comments:

Post a Comment

<< Home