6. வாழ்க்கைத் துணைநலம்
குறளுக்குக் குறள்வடிவில் விளக்கம்
6. வாழ்க்கைத் துணைநலம்
குறள் 51:
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணையென்றார் அய்யன்!
மனையறம் காத்து வருவாய்க்குள் வாழும்
குணவதியே இல்லாள்! உணர்.
குறள் 52:
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்லென்றார் அய்யன்!
அனைத்து வளமிருந்தும் பண்பற்ற இல்லாள்
அமைந்தால் சிறப்பெல்லாம் வீண்.
குறள் 53:
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடையென்றார் வள்ளுவர்!
இல்லாள் பண்பரசி! வாழ்க்கை ஒளிமயந்தான்!
முள்ளாய் அமைந்தால் இருள்.
குறள் 54:
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறினென்றார் வள்ளுவர்!
பண்புகளும் கற்பும் மனைவியின் மூச்சானால்
பெண்ணுக்கு மாண்புண்டோ வேறு?
குறள் 55:
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழையென்றார் வள்ளுவர்!
தெய்வமாய் என்றும் கணவனைப் போற்றுபவள்
நல்மழை போன்றவள்! சாற்று.
குறள் 56:
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள்
பெண்ணென்றார் வள்ளுவர்!
அக்கறை கொண்டே குடும்பத்தை, சார்ந்தோரை
எக்கணமும் காப்பவள் பெண்.
குறள் 57:
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலையென்றார் அய்யன்!
சிறைவைக்கும் பெண்ணடிமை காக்குமா? பெண்ணின்
முறையான பண்புகளே காப்பு.
குறள் 58:
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகென்றார் வள்ளுவர்!
இல்லறப் புத்துலகம் பொன்னாகும் பெண்ணுக்கு
இல்லறத்தான் தன்மை பொறுத்து.
குறள் 59:
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடையென்றார் அய்யன்!
தாறுமாறாய் வாழ்வில் இணையர் அமைந்துவிட்டால்
ஏறுபோல் நன்னடை ஏது?
குறள் 60:
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறென்றார் வள்ளுவர்!
பண்புகளே இல்லறத்தின் வேராகும்! பிள்ளைகள்
நல்லவராய் வாழ்ந்தால் புகழ்.
மதுரை பாபாராஜ்
குறளும் எழுதி, குறள்வழிப் பொருள்மிகுக் கவியும் எழுதும் தங்களின் புதிய முயற்சி வெல்க! வாழ்க!!
நற்றமிழ் செ.வ. இராமாநுசன்
0 Comments:
Post a Comment
<< Home