Wednesday, August 31, 2011

பட்டிமன்றமும் பாப்பையாவும்


பட்டிமன்றமும் பாப்பையாவும்
நூலின் தாக்கத்தில் விளைந்த
கவிதை
=====================================
அடிப்படைத் தேவைகள் கிட்டாத வாழ்க்கை!
விடியலும் தோன்றுமா என்றதோர் ஏக்கம்
கசிந்திடும் நெஞ்சுடன் தேரை நகர்த்தி
முடிந்தவரை சேர்த்துவிட்டார் தாய்.

நிகழ்வுகளின் பின்னணியில் ஊடாடும் சோகம்
பதறவைக்கும் நூலைப் படித்திடும் போது!
நடப்பதை எல்லாம் இதயத்தில் தாங்கி
கடந்துவந்த பாதையெல்லாம் முள்.

சுற்றங்கள் வேடிக்கை பர்த்தேதான் நின்றிருக்க
உற்றதுணை யாகத்தான் நண்பர்கள் முன்வந்து
வெற்றிபெற வைத்ததை நன்றியுடன் அய்யாதான்
அக்கறையாய்க் கூறிவிட்டார் பார்.

படிதாண்டும் போதோ இடிபோலத் தாக்கி
இடறவைக்கச் செய்த துரோகங்கள் எல்லாம்
தடம்மாறிச் சென்றுவிட்ட அற்புதத்தைக் கண்டார்!
அறமிங்கே வீழுமோ? கூறு.

யார்யாரை எங்கெங்கே கூறவெண்டும் என்றெண்ணி
யாரையும் புண்படுத்தும் நோக்கமின்றி இந்நூலில்
நேயமுடன் நம்முன் படம்பிடித்துக் காட்டிவிட்டார்!
காலத்தை வென்றுநிற்கும் காண்.

கிராமத்தில் தோன்றி நகரத்தில் ஊன்றி
உலாவர சந்தித்த சோதனைகள் எல்லாம்
உராய்ந்து துடிக்கவைத்துப் பார்த்தாலும் வாழ்க்கை
பலாபோல் கனிந்தது பார்.

பட்டிமன்றம் என்றாலே பாப்பையா என்றேதான்
பட்டிதொட்டி எல்லாம் இலக்கணமாய் ஆனதே!
பட்டிமன்றம் வாயிலாக மக்களுக்கு வாழ்வியலை
அற்புதமாய் ஊட்டுகின்றார் பார்

பழைய மதுரை புதிய மதுரை
இவையிரண்டைக் கண்முன்னே காட்டும் நயத்தில்
களைகட்டிச் செல்கிறதே ஓவியமாய் இந்நூல்!
மலைத்தேன் தோற்றது சொல்.

என்னுடைய ஆசானாம் அய்யாவின் தாள்பணிந்தே
என்றென்றும் ஆசிகளை நாடித்தான் கேட்கின்றேன்!
பண்பாளர் நெஞ்சில் எனக்கும் இடமளிக்கும்
அன்பை மறப்பேனோ நான்?

----மதுரை பாபாராஜ்
900 3260 981

0 Comments:

Post a Comment

<< Home