என்கடமை படிப்பதே!
=======================
பள்ளிக்குச் செல்ல மனமில்லை!
தெருவில் ஆடப் போகின்றேன்!
எந்தன் கடமை விளையாட்டே!
அழைத்தால் இவைகள் வந்துவிடும்!
சேவலே சேவலே வருவாயா?
சேர்ந்தே ஆட வருவாயா?
போபோ நானோ வரமாட்டேன்!
விடியலில் கூவுதல் என்கடமை!
குருவி குருவி வருவாயா?
கூடி ஆட வருவாயா?
போ!போ! நானோ வரமாட்டேன்!
இரையைத் தேடுதல் என்கடமை!
நாயே நாயே வருவாயா?
நட்புடன் ஆட வருவாயா?
போ!போ! நானோ வரமாட்டேன்!
வீட்டைக் காப்பது என்கடமை!
காக்கா காக்கா வருவாயா?
கரைந்தே ஆட வருவாயா?
போ!போ! நானோ வரமாட்டேன்!
கூட்டைக் கட்டுதல் என்கடமை!
பசுவே பசுவே வருவாயா?
பாய்ந்தே ஆட வருவாயா?
போ!போ! நானோ வரமாட்டேன்!
பாலைத் தருதல் என்கடமை!
அனைத்தும் இங்கே நாள்தோறும்
அதனதன் கடமை செய்கிறது!
எனது கடமை படிப்பதுதான்
இன்றே பள்ளிக்கு நான்செல்வேன்!
மதுரை பாபாராஜ்
சென்னை-600 088
0 Comments:
Post a Comment
<< Home