மனிதம் என்றும் புனிதம்!
=========================
இந்தப் பிறவியில் இந்தக் குடும்பத்தில்
சந்திக்க வேண்டிய மக்களைச் சேர்த்துவைத்துச்
சந்ததிக ளாக தழைப்பதற்குக் காலந்தான்
இங்கே கணிக்கிறது காண்.
காலத்தால் நாளும் இணைந்திடும் வாய்ப்புதரும்
கோலத்தை மாற்றி அலங்கோல மாக்குவது
ஞாலத்தில் மாந்தரின் பண்பற்ற போக்குதான்!
பாலமென வாழ்தலே பண்பு.
கானல்நீர் காட்டும் கவர்ச்சியை நம்பினால்
ஊனமனம் கொள்ளவைத்து வேதனையைத் தூண்டிவிடும்!
ஆனமட்டும் ஒற்றுமைக்கே வேட்டுவைத்துப் பார்த்திருக்கும்!
ஈனமனம் நல்லதல்ல சொல்.
எந்தவழி நல்லவழி என்றேதான் சிந்தித்துப்
புண்படுத்தும் பாதையிலே போகாமல் வாழ்க்கையைப்
பண்படுத்தும் பாதையைத் தேர்ந்தெடுத்து வாழவேண்டும்!
நிம்மதியே வாழ்வின் உயிர்.
கனியிருக்க காய்களை நாடினால் வாழ்க்கை
பனிபடர்ந்த பாதைப் பயணமாக மாறும்!
மனிதனே வக்கிரச் சிந்தனையை மாற்று!
மனிதநேயச் சிந்தனையைப் போற்று.
0 Comments:
Post a Comment
<< Home