Friday, August 05, 2011

வீட்டின் ஒளிவிளக்கே கூட்டுக் குடும்பம்

=======================================
கூட்டுக் குடும்பம் என்பது தேனீக்கள்
கூட்டை முயற்சியுடன் கட்டும் உழைப்புதான்!
ஆக்கபூர்வ சிந்தனையில் எல்லோரும் ஒன்றுபட்டு
நாட்டமுடன் வாழும் கலை.

மரியாதை தந்து மரியாதை பெற்று
பெருந்தன்மைக் கண்ணோட்டம் தன்னை வளர்த்தே
ஒருவர்க் கொருவர் உதவிகள் செய்து
பெருமையுடன் வாழும் சிறப்பு.

குழந்தைப் பராமரிப்பில் போட்டிகள் இன்றி
குழந்தைகள் எல்லோரும் ஒன்றென எண்ணி
வளர்த்திட வேண்டும் சமநிலை தந்தே!
குழந்தை வளரும் மகிழ்ந்து.

வரவு செலவை குடும்பத்திற் கேற்ப
சரியாய்ப் பகிர்ந்து கணக்கிட்டு நாளும்
தெளிவாய் அணுகினால் சச்சரவே இல்லை!
உயிரோட்டம் காசுதான் பார்.

விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கைப் பெற்றிருந்தால்
சற்றும் பொறாமை நெருங்காமல் வாழலாம்!
புற்றாய் வளரும் புறணிக்(கு) இடங்கொடாமல்
ஒற்றுமையைக் காக்கலாம் சொல்.


கூட்டுக் குடும்பத்தில் நாளும் கடமைகள்
போட்டிபோட்டு வந்தே மலைத்திட வைக்கும்!
ஆட்டிப் படைக்கும் திரண்டேதான்! எல்லோரும்
வேற்றுமை இன்றி பகிர்ந்து செயல்பட்டால்
ஆற்றலுடன் வீட்டில் அமைதியின் தென்றலோ
வீற்றிருக்க வாழ்வோம் இணைந்து.

எந்த உறவினர் வந்தாலும் இன்முகம்
கொண்டே விருந்தோம்பல் பண்பில் உயரவேண்டும்!
வந்தோர் மனங்குளிரச் சென்றால் வளம்தழைக்கும்!
என்றும் மகிழ்ச்சிதான் இங்கு.

தன்னலம் இன்றியே மற்றவரைப் பாராட்டும்
அன்பான தன்மை மனிதநேயப் பண்பாகும்!
என்றென்றும் பேராசை இன்றி, இருப்பதே
இன்பமெனில் நிம்மதி உண்டு.

கருத்துக்கள் வேறுபட்டால் நேரடியாய்க் கேட்டுத்
தெரிந்துகொண்டால் உள்ளம் தெளிவாகும்! தேக்கிக்
கருகவிட்டால் நிம்மதியைப் பந்தாடிப் பார்க்கும்!
உருக்குலையும் ஒற்றுமை தான்.

கூட்டுக் குடும்பம் கயிற்றில் கழைக்கூத்து
காட்டுகின்ற வித்தைதான்! ஆனால் பழகிவிட்டால்
வேற்றுமையில் ஒற்றுமை பூத்து மணம்பரப்பும்!
வீட்டின் ஒளிவிளக்கே அஃது.

0 Comments:

Post a Comment

<< Home