தமிழ்தனை மறப்பவன் தமிழனா?
மூவேந்தர் முத்தமிழைக் காத்து நின்ற
முற்காலம் சங்ககாலம் பொற்கா லந்தான்!
பாவேந்தர் பேரவையில் ஆய்ந்து ஆய்ந்து
பைந்தமிழை வளர்த்ததுவும் பொற்கா லந்தான்!
களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலக்
கணக்கினிலே சேர்க்கிறது வரலா றிங்கே!
களங்கண்டு தமிழ்மொழிதான் அதனை மீறிக்
காலத்தை வென்றேதான் நிமிர்ந்த திங்கே!
எண்ணற்ற மொழிகளிங்கே கலந்த போதும்
இமைக்காமல் விழிப்புணர்வு கொண்ட தாலே
செந்தமிழின் தனித்தன்மை அழிய வில்லை!
சித்திரத்தைச் சீரழிக்க முடிய வில்லை!
இருந்தாலும் இன்றுள்ள நிலையைப் பார்த்தால்
இதயத்தில் வேல்பாய்ச்சும் கோலங் கண்டேன்!
அருந்தமிழர் வீடுகளில் ஆங்கி லத்தின்
ஆதிக்கம் வேரூன்றும் காட்சி கண்டேன்!
தமிழர்கள் தமிழ்நாட்டில் தத்தம் வீட்டில்
தமிழ்மொழியைப் பேசவுந்தான் தயங்கு கின்றார்!
தமிழ்மொழிக்கே இத்தகைய சாபக் கேடு!
தமிழர்கள் உள்ளத்தில் அடிமைக் கோடு!
தமிழ்மொழியே உயிரென்று சொன்ன வர்கள்
தடம்புரண்டுத் தடுமாறும் போக்கை ஏற்றார் !
அமுதமொழி அரசியலின் வியூகத் திற்கே
அன்றாடம் பொருளாகும் அவலம் கண்டேன்!
அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள்
அவரவரின் தாய்மொழியில் பேசு கின்றார்!
சொந்தமொழி தமிழ்மொழியை தமிழர் பேச
துவள்கின்றார்! மயங்குகின்றார்! தயங்கு கின்றார்!
தாய்நாட்டை மறப்பவர்கள் மக்க ளில்லை!
தாய்வீட்டை மறப்பவர்கள் உயர்வ தில்லை!
தாய்தன்னை மறப்பவர்கள் மனித ரில்லை!
தாய்த்தமிழை மறப்பவர்கள் தமிழ ரில்லை!
0 Comments:
Post a Comment
<< Home