சமுதாயக் கோடரிக் காம்பு!
==============================
எந்த உணவுப் பொருளெனினும் நம்நாட்டின்
சந்தைக்குள் விற்பனைக்கு வந்திறங்கும் முன்னாலே
நன்கு பகுப்பாய்வு செய்தே அதன்தரத்தைக்
கண்டுணர்ந்து உண்மையைச் சொல்.
சந்தைக்கு வந்தபின்பு தீமையைப் பட்டியலாய்
என்னதான் தந்தாலும் உட்கொண்டு பாதித்த
சின்னஞ் சிறுகுழந்தைக் கூட்டம் பலியாடா?
என்னகுற்றம் செய்தார் அவர்?
சந்தைக்குள் விற்கலாம் என்ற அனுமதியை
இங்கே கொடுத்துவிட்டால் அப்பொருளில் எக்குறையும்
இம்மி அளவும் இருக்கவே கூடாது!
இங்கே இருக்கிறதா? சொல்.
வேண்டியவர் வேண்டாதோர் என்றே நிறுவனத்தின்
பின்புலத்தைப் பார்க்காமல் அஞ்சா நடுநிலையில்
உண்மையைக் கண்டறிதல் என்றும் கடமையாம்!
உண்மைக் கொடியை உயர்த்து.
நலத்திற்குத் தீமை விளைவிக்கும் என்றால்
முளையிலேயே கிள்ளி தடைவிதிக்க வேண்டும்!
களைபோல வளரவிட்டு வேடிக்கை பார்த்தால்
குலமே அழியும் உணர்.
ஊடகங்கள், செய்தி இதழ்கள், விளம்பரங்கள்
வீடறிய நாடறிய இந்தப் பொருளெல்லாம்
கேடில்லை என்றுரைத்த பின்னால் சிலநாளில்
கேடென்றால் யார்பொறுப்பு ?சொல்
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமநதானே?
சட்டத்தை இங்கே ஒதுக்கிவிட்டு -- எப்படியோ
சந்தைக்குள் விற்கட்டும் என்றே அனுமதி
தந்தவர்தான் என்றும் பொறுப்பு.
தந்தவர் யாரெனினும் பாரபட்சம் இல்லாமல்
தண்டிக்க வேண்டுமிங்கே! வாழும் உயிருடன்
கண்டபடி இங்கே விளையாடும் நீசர்கள்
மன்பதையின் கோடரிக் காம்பு..
மதுரை பாபாராஜ்
2 Comments:
//தந்தவர் யாரெனினும் பாரபட்சம் இல்லாமல்
தண்டிக்க வேண்டுமிங்கே! வாழும் உயிருடன்
கண்டபடி இங்கே விளையாடும் நீசர்கள்
மன்பதையின் கோடரிக் காம்பு..//
அருமை வாழ்த்துக்கள். மதுரை என்றாலே நீதி, நேர்மை, புதுமை அதிகம் என கவிதை வரிகள் மூலம் சொல்லுது.
10:47 AM
தங்களின் அருவிநடை எழுத்துக்களைப் படிக்கப் படிக்க உவகை கூடுகிறது அய்யா! வாழ்த்துக்கள்
10:36 PM
Post a Comment
<< Home