Monday, December 18, 2017

தையே வருக! தைத்துவிட்டு வருக!

கார்த்திகைத் தாண்டவத்தில்
சீரழிந்த கோலங்கள்!
மார்கழியின் மேனியெங்கும்
மங்காத வடுக்களாக
ஊர்மக்கள் அகதிகளாய்
மருதநிலம் நெய்தலும்
நார்நாராய் கிழிந்ததம்மா!
சீராக்க வா! தாயே!

விளைநிலங்கள் விளைச்சலிலே
களைகட்டி மகிழட்டும்!
அலையாடும் கடலினிலே
மீனவர்கள் உள்சென்றே
மலைக்காமல் மீன்பிடித்தே
வளங்கண்டே வாழட்டும்!
உளைச்சலிலே வாடுவோரின்
இல்லங்கள் ஒளிரட்டும்!

தைமகளே! அத்தனையும்
சீர்செய்து புதுப்பொலிவை
தைத்தேதான் மீட்டுத்தா!
 சோதனைகள் சாதனையாய்ப்
புத்துணர்ச்சி் கொண்டேதான்
புவிமெச்ச மலர்வதற்கே
அக்கறையாய் அரவணைத்து
முத்திரையைப் பதித்துவிடு!

புத்தொளியைப் பாய்ச்சிவிடு!
புதுப்பொலிவைத் தந்துவிடு!
நற்றமிழைச் செழிக்கவிடு
நல்லிணக்கம் வளரவிடு!
எத்திக்கும் அமைதிகொடு! 
இல்லத்தில் மகிழ்ச்சிகொடு!
வற்றாத ஆற்றலுடன்
வல்லரசாய் மாற்றிவிடு!

ஆக்கபூர்வ சிந்தனைகள்
அரங்கேற்றம் காணட்டும்!
ஊக்கத்தின் சிறகுகளில்
ஊன்றட்டும் சாதனைகள்!
சூட்டுகிறோம் பாமாலை!
சூளுரைத்துத் தைமகளே
வேற்றுமையில் ஒற்றுமையோ
வேரூன்ற வந்துவிடு!

0 Comments:

Post a Comment

<< Home