Tuesday, April 26, 2011

காலைமுதல் இரவுவரை இல்லத்தரசி!

==================================
குங்குமக் கூடு திறக்கும் நளினம்போல்
மங்கையின் பூவிழிகள் தூக்கம் கலைந்தேதான்
இங்கே திறந்தன! கண்ணாடி பார்த்திருந்த
பொன்மகள் நாணினாள் பார்.

எழுந்தாள்! நடந்தாள்! கடமைகள் என்னும்
குழந்தைகள் ஒவ்வொன்றாய் வந்து -- தழுவித்
தழுவி, அடம்பிடிக்க ஒவ்வொன்றாய்ப் பார்த்தே
மலைக்காமல் கொஞ்சினாள் அங்கு.

அவரவர்க் கேற்றாற்போல் அன்பைப் பகிர்ந்தே
தவழவிட்டுப் பார்ப்பாள் மகிழ்ந்து -- அவளது
பங்களிப்புப் பண்பாட்டில் வீடே கலகலப்பாய்
இன்பத்தில் கூடிநிற்கும் சொல்.

துன்பங்கள் சூழும் பொழுதில் துவளாமல்
என்னென்ன செய்யவேண்டும் என்றேதான் -- நன்றாய்க்
கணக்கிட்டுக் கச்சிதமாய் ஆறுதலைத் தந்தே
இணக்கமுடன் நின்றிருப்பாள் வந்து.

கருத்துக்கள் வேறுபடும் நேரத்தில் கோபம்
சுருக்கென்று வந்தாலும் அந்த --ஒருபொழுதில்
சீறுவாள்! காரணத்தை ஆராய்ந்தே மாறுவாள்!
தேறுவாள்! தேற்றுவாள்! செப்பு.

தவறுகள் யாரிடம் என்பதைக் காட்டி
உரசலை நீக்கி மறப்பாள் -- தரணியில்
ஒற்றுமை காக்கும் திறமை இவளுக்கோ
கற்காமல் வந்ததைக் காண்.

பள்ளிக்கும் வேலைக்கும் செல்பவர் சென்றுவிட்டார்!
எள்ளளவும் தன்சுமை இங்கே குறையவில்லை!
நல்லவளோ உண்டது கொஞ்சந்தான்! நேரமில்லை!
தள்ளிவைத்தாள் ஓய்வை உணர்.

இரவுப் பொழுதில் அனைவரும் வந்தார்!
சரசர வென்றே கடமை -- பரபரவென்றே
மாற்ற மறந்துவிட்டாள் தன்னை! ஒருவாறாய்
ஏக்கமுடன் தூங்கவந்தாள் மாது.

காலைமுதல் மாலைவரை ஓய்வின்றி இல்லறத்தைச்
சோலையாக மாற்றியவள் தூங்குகின்ற -- வேளைதான்
ஓய்வெனினும் ஓயாமல் நாளை உழைப்பதற்கே
ஓய்வை வலிந்தேற்பாள் இன்று.

கடலலைகள் ஓயாது என்பார் கவிஞர்!
கடமை அலைகளில் ஓய்வின்றித் துள்ளி
நடம்புரியும் மங்கையைப் பார்த்ததும் இந்தக்
கடலலைகள் நாணும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home