ராகபேதம்!
============================
ஒற்றுமை நாரில் தொடுத்த மலர்களாக
அக்குடும்பம் வாழ்ந்திருந்த கோலத்தை மாற்றியே
அக்கக்காய் இங்கே பிரிந்துநின்று வாழ்கின்றார்!
இக்கோலம் தந்தது யார்?
அக்காவும் தம்பியும் அண்ணனும் தங்கையும்
எத்தகைய வேறுபாட்டை இங்கே சுமந்தாலும்
ஒற்றுமைக் கோட்டை அழிக்காமல் வழ்ந்திடுவார்!
பற்றிப் படராது பார்.
தங்களுக் கென்றே குடும்பம் அமைந்ததும்
தங்களுக் கென்றே குழந்தை பிறந்ததும்
எங்கிருந்து வேறுபாடு எப்படித்தான் தோன்றுமோ!
கொந்தளிப்பில் வாழ்ந்திருப்பார் இங்கு.
என்வீடு உன்வீடு என்குழந்தை உன்குழந்தை
வம்புகள் வீண்பேச்சு கோபம் வெறுப்புடன்
அன்றாடம் போராட்டம் என்றே உலவுகின்றார்!
இந்தநிலை ஏனோ இயம்பு?
மலர்களின் எண்ணிக்கை கூடினால் இங்கே
வளர்ந்து மணக்கவேண்டும் ! வாழ்விலோ நாரைக்
கலைந்தெறிந்து நாளும் பிரிந்தேதான் வாழ்ந்தால்
உளைச்சல்தான் மிஞ்சும் உணர்.
பெற்றோரைப் பேணுகின்ற தங்கள் கடமையிலும்
பெற்றெடுத்த பிள்ளைகள் கூறுபோட்டுப் பார்க்கின்றார்!
நற்றமிழே! இங்கே பணச்சிக்கல் வந்துவிட்டால்
பெற்றோரும் வேம்பாவார்! கூறு.
திருமணம் செய்வதற்கு முன்பிருந்த ராகம்
திருமணம் செய்ததற்குப் பின்னிங்கே நாளும்
முரண்பட்டுக் கேட்கிறதே! இத்தகைய போக்கோ
உலகமெலாம் உள்ளதைப் பார்.
0 Comments:
Post a Comment
<< Home