Thursday, April 07, 2011

இது ஒரு தேர்தல் காலம்!

=============================
அண்ணனென்பார்! தம்பியென்பார்! தங்கை, தமக்கையென்பார்!
முந்திவந்து தங்களுக்கே வாக்களிக்க வேண்டுமென்பார்!
மன்னர்கள் நீங்களென்பார்! தொண்டர்கள் நாங்களென்பார்!
கண்முன்னே வேடதாரி பார்.

ஊர்வலங்கள்! தேர்தல் தெருக்கூட்டம் நாள்தோறும்!
நார்நாராய் நாட்டின் அமைதியைத் தான்கிழிப்பார்!
சேராதார் எல்லோரும் சேர்ந்தேதான் கூட்டணியில்
ஊர்நகைக்க வந்திருப்பார் பார்.

வகைவகையாய் வாக்குறுதி தந்திடுவார் வந்து!
தொகைதொகையாய் அள்ளிப் பணந்தருவார் வந்து!
திகைத்துநிற்கும் வாக்காளர் காலில் விழுந்தே
திகைக்கவைப்பார் வேட்பாளர் தான்.

தேர்தல் முடிந்தே அரசை அமைத்துவிட்டால்
யாரும் தொகுதிக்குள் எட்டியே பார்க்கமாட்டார்!
பார்ப்பதற்கு நாம்சென்றால் வாக்களித்த நம்மைத்தான்
யாரென்று கேட்பார் சிரித்து.

நம்நாட்டு மக்களாட்சித் தேர்தல் நடைமுறைகள்
இன்றும் தொடர்கதையாய் இப்படித்தான் உள்ளது!
என்றிது மாறுமோ? ஏக்கம் மறைந்திடுமோ?
அன்றுதான் இங்கே விடிவு.

0 Comments:

Post a Comment

<< Home