அன்னா ஹசாரே இயக்கத்தை அரசியல் ஆக்காதே!
=============================================
இந்திய நாட்டின் ஒழுக்கத்தைச் சீர்குலைக்கும்
வன்முறைச் சூறையாம் ஊழல் ஒழிந்திடவே
அன்னா ஹசாரேதான் உண்ணா விரதத்தைத்
தன்னலம் இன்றியே மேற்கொண்டார்! ஆதரவு
பொங்கிவந்த ஆவேசம் மத்திய ஆட்சியை
சிந்திக்க வைத்தது! செப்பு.
புரட்சியை நாளும் திரைப்படத்தில் காட்டிப்
புரட்டும் தமிழ்நடிகர் யாரையும் காணோம்!
புரட்சியை ஏட்டுச் சுரைக்காயாய் மாற்ற
திரையில் கரைந்துவிட்டார்! காண்.
ஊழலை நாங்கள் விரட்டுவோம் என்றேதான்
காரமாய்ப் பேசும் அரசியல் வாதிகள்
தூரமாய் நின்றுதான் வேடிக்கை பர்த்தனர்!
ஊழலின் சிற்பிகளைப் பார்.
இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஆதரவை
முன்வந்து தந்தார்! வெளிநாடும் தன்பங்கை
முந்திவந்து காட்டியது! ஆனால் தமிழ்நாடே!
கண்மூடிக் கொண்டதேன்? கூறு.
மத்தியில் ஆளும் அரசியல் வர்க்கத்தார்
அக்கறையாய் ஊழல் எதிர்ப்பு மசோதாவை
மக்களே பாராட்டும் வண்ணம் நிறைவேற்றி
நற்பெயர் பெற்றால் நலம்.
இதையும் அரசியல் ஆக்குகின்ற போக்கைக்
கடைப்பிடித்தால் நாடே அணிதிரளும்! அன்று
தடையுடைக்கும் வெள்ளத்தை யாரும் இங்கே
தடுக்க முடியாது! சாற்று.
அன்றாடம் மக்கள் முணுமுணுத்து நொந்துபோகும்
இந்தப் பிரச்சனைக்குப் போராடி நிற்பதாலே
அன்னா ஹசாரே அதர்மத்தை வெல்வதற்கு
வந்த அவதாரம் ! வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home