Wednesday, April 27, 2011

வீடேது? கூடேது?
=========================
ஒருகாயம் இங்கே குணமாகும் முன்பே
குருதியைக் கொட்டும் மறுகாயம் என்றால்
பெருக்கெடுக்கும் வேதனைத் தீயிலே வெந்து
கருகுவதே வாழ்க்கையா?கூறு.

கற்கள் உறுத்த குனிந்துநான் பார்த்தபோது
கற்பாறை ஒன்றோ தலைமேல் விழுந்தது!
தட்டுத் தடுமாறி கீழே விழுந்துவிட்டேன்!
இப்படித்தான் வாழ்கின்றேன்! நான்.

யாரிங்கே எப்படித்தான் போனால்தான் என்னவென்றே
ஓரமாய் நானும் ஒதுங்கித்தான் சென்றாலும்
பாரத்தை நெஞ்சம் சுமக்கும் வலியினிலே
பாரில் துடிக்கின்றேன்! பார்.

பெருங்கடலில் துள்ளிவரும் பேரலைகள் கூட
ஒருநாள் அடங்கிவிடும் காட்சியுண்டு! ஆனால்
உருக்கும் உளைச்சலில் என்னைப் புரட்டும்
ஒருநிலை மாறாது! பார்.

ஆப்பில் அகப்பட்ட மந்தியைப் போலத்தான்
ஆட்டிப் படைக்கின்ற கூட்டத்தில் சிக்கிவிட்டேன்!
ஈட்டி முனைகளாய் வாழ்க்கையே மாறுமென்றால்
சாக்காடே பூக்காடு தான்!

வீடும், சுமந்திருக்கும் கூடும் நிலையில்லை!
ஓடுதடா வாழ்க்கை நதிபோல! ஓடியே
கூடுதடா சாவின் கடலைத்தான்! செத்தபின்
வீடேது? கூடேது? கூறு!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home