Tuesday, May 11, 2010

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

==============================
பெரியாழ்வார் திருமொழி
--------------------------------------------------------
298.ஆயர்கள் கன்றுகளை இங்கே திருடித்தான்
போவதைப்போல் என்மகளின் உள்ளம் கவர்ந்தேதான்
தாய்க்குத் தெரியாமல் கூட்டித்தான் சென்றுவிட்டான்
மாயவன் கண்ணன்தான் பார்.

இத்தகைய செய்கை எனது குடும்பத்தைத்
தத்தளிக்க வைத்துத் தலைகுனிய வைக்காதா?
அக்கறையில் தாய்தான் புலம்புகின்றாள் ! கண்ணனின்
அத்தகைய வன்செயல் கண்டு.

313.காளியன் நாகத்தின் பொய்கை கலங்கிட
தாவிக் குதித்து படங்களின்மேல் நாட்டிய
ஊழியைக் கண்ணனாட அந்தோ! சரணடைந்தான்!
காளியனை மன்னித்தான் பார்.

சீதைக்கு அனுமன் தெரிவித்த அடையாளங்கள்:
=================================================
318.பரசுராமன் ஏந்திய விஷ்ணு தனுசை
கரங்களில் ஏந்தி இலக்கெது என்றே
தவத்தை அழித்ததோர் செய்தியைச் சொல்லி
உவந்தான் அடையாளம் என்று.

319.நீங்களும் ராமனும் காட்டில் தனித்திருந்து
தேன்மணந்த நேரத்தில் தங்களது மல்லிகைப்
பூமணக்கும் மாலையால் அண்ணலைக் கட்டியதை
நாமணக்க சொன்னேன் பணிந்து.


320.கூனி விரித்த வலையிலே கைகேயி
ஊனமனம் கொண்டு தசரதன் நொந்துபோக
நாணமின்றித் தன்வரம் கேட்டே இராமனைக்
கானகம் செல்லவைத்தாள்!அண்ணலின் தம்பியும்
கானகத்தில் உள்ளான் தொடர்ந்து வந்தேதான்!
ஈனமனம் பெற்றவள் கைகேயியின் வஞ்சகம்
நானளிக்கும் செய்தி அறி.

321.கங்கைக் கரையிலே வாழும் குகனுடன்
பண்புமணம் வீசுகின்ற நட்பை இராமன்தான்
தன்மனம் நாட தழைக்கவைத்தான்! இக்காட்சி
இன்னொரு செய்தியாம் கேள்.

322.வனவாசம் ஏற்றபோது சித்ரகூடந் தன்னில்
மனமுவந்து வந்து இராமனைப் போற்றி
மனந்திருமபி நாடாள வாராய் என்றான்
குணக்குன்றாம் தம்பி பரதன்தான்! இந்த
மனங்கவரும் பண்பு நிகழ்வை நானும்
மணக்கும் செய்தியாய் உங்களுக்குச் சொல்லி
மனங்களிதது நிற்கின்றேன் நான்.

323.இந்திரன் மைந்தன் ஜயந்தனோ காகமாய்
வந்தேதான் உங்களது மார்பினைத் தீண்டிவிட்டான்!
கண்டதும் இராமன் சினந்து கணைவிடுத்தான்!
அண்டமெலாம் ஓடியும் தப்ப முடியாமல்
அண்ணலிடம் வந்தே சரணடைந்த நேரத்தில்
கண்னொன்றின் பார்வையோ போகுமாறு சாபமிட்டார்!
இந்தசெய்தி உங்கள்பார் வைக்கு.

324.பொன்னிற மானையோ நீங்கள் விரும்பியதால்
இன்னுயிர் ராமனும் வில்லேந்திச் சென்றவுடன்
தம்பி இலக்குவனும் தங்களின் கட்டளைக்கு
தொண்டுசெய்ய அண்ணனைத் தேடியே சென்றுவிட்டார்!
பண்பரசி! இச்செய்தியும் ஒன்று.
============================================================
325.வானரச் சேனை திசைநான்கில் சென்றதும்
ராமனும் என்னிடம் இந்த அடையாளம்
தேன்மொழியில் சொல்லித்தான் இந்தக் கணையாழி
ஏந்தியேதான் செல்லென்றார் தந்து.
============================================================
326.சிவதனுசு வில்லை முறித்த இராமன்
கரத்தில் அணிந்திருந்த மோதிரத்தைப் பார்த்தாள்!
சரியான செய்திகள் என்றேதான் சொல்லிக்
களித்திருந்தாள் சீதைதான் அங்கு.

(அனுமன் சொல்லிய அடையாளங்கள் முடிந்தன)

=================================================================
443.நெய்க்குடத்தில் ஏறும் எறும்புகள் போலத்தான்
மொய்த்திருக்கும் நோய்களே! என்னுடலை விட்டேதான்
துய்க்காமல் சென்றிடுவீர்! என்னுள் திருமால்தான்
மெய்க்காவல் காக்கின்றார் பார்.

477. ஆழிக்குள் சென்றேதான் நீரெடுத்துக் கொண்டுவந்து
ஊழியிலும் அந்தத் திருமாலின் மேனிபோல்
வானம் கறுத்தும் வலக்கரச் சக்கரம்போல்
ஊனமாக்கும் மின்னலை உண்டாக்கி, ஏந்துகின்ற
சங்காம் வலம்புரி போல இடிமுழங்க
விண்ணகமும் போற்றுகின்ற சார்ங்கமெனும் வில்லிருந்து
அம்புமழை பெய்ததுபோல் மண்மேல் மழைகொட்ட
அன்புடனே வாராய் வருணனே! வேண்டியேதான்
இங்குநாங்கள் மார்கழியில் நீராட இவ்வுலகம்
மங்கலத்தில் பொங்கவேண்டும்!வா.


609.திருவரங்க நாயகன் செல்வ வளத்தைப்
பெருமலைபோல் பெற்றிருந்தும் என்கோல் வளையை
உருவிவிட்டார்! அன்பர் குறையிதனால் தீர்ந்தே
திருப்தி அடைவாரோ? செப்பு.

612.கைப்பொருளை மட்டும் கவர்ந்திட வில்லையடி!
மெய்ப்பொருளை மேனியை எல்லாம் அபகரித்தார்!
வைத்தவிழி நோகத்தான் பார்க்கவைக்கும் எம்பெருமான்
வித்தையினை என்சொல்ல?நான்.

தேவகியின் நிலையே இன்றும் தொடர்கிறது.
================================================
கண்ணனைப் பெற்றவள் தேவகி! ஆனாலும்
கண்ணன் புரிந்த குழந்தைக் குறும்புகளைக்
கண்ணாரக் கண்டு களித்தாள் யசோதைதான்!
இன்புற தேவகி பேறுபெற வில்லையே!

இன்றிங்கே பெற்றோர் பணிகளுக்குச் செல்கின்றார்!
கண்குளிர தேன்மழலை செய்யும் குறும்புகளைக்
கண்டு கழிப்பவர்கள் தாத்தாவும் பாட்டியும்தான்!
இன்புறும் அப்பேறு பெற்றவர்க் கில்லையே!
இன்றும் தொடர்கதைதான்! பார்.
==================================================
816. திருச்சந்த விருத்தம் --(திருமழிசை ஆழ்வார்)
===================================================
நிற்பதும் ஓர் வெற்பதந்து இருப்பும்விண் கிடப்பதும்.....
===================================================
வேங்கடத்தில் மாதவன் நிற்பான்! வைகுண்டம்
ஏந்துவதோ வீற்றிருக்கும் கோலம்!அலைவீசும்
பாற்கடலில் பாம்பணையில் பள்ளிகொண்ட கோலமாம்!
பாக்கள் புகழ்பாடும் முக்கோலக் காட்சிகள்
நீக்கமற என்நெஞ்சில் அம்மா!நடக்கிறதே!
பாக்யவான் நான்தான் பார்.
=========================================================

0 Comments:

Post a Comment

<< Home