Wednesday, November 26, 2014

உயிரில் கலந்த மதுரை!
--------------------------
மீனாட்சி அம்மனின் கோயிலை மையமாக்கி
மாநகர் வீதி அடுக்காய் அமைத்துள்ள
கோலத்தின் பேரெழிலோ தாமரைப் பூவிரிந்த
காட்சியைக் காட்டுது  பார்.

எந்தநேரம் என்றாலும்  இல்லையென்று சொல்லாமல்
உண்ண உணவளிக்கும் தூங்கா நகரமாகும்!
செந்தமிழைப் பாவலர்கள் காக்க தமிழ்ச்சங்கம்
அன்றுகண்ட பண்டை நகர்.

சாதிமத பேதங்கள் இன்றி சமத்துவத்தின்
நீதிக்கே என்றும் கொடிபிடிக்கும் பொன்னகரம்!
ஓடிக் கடலில் கலக்காத வைகைத்தாய்
ஊடறுத்துச் செல்லும் நகர்.

அங்காடி பள்ளிகள் கல்லூரி ஆலைகள்
வண்டிப் பணிமனைகள் வண்ணத்தால் நெய்தேதான்
கண்ணைக் கவரும் நெசவுத் தறியாளர்கள்
என்றே சுழலும் நகர்.

தூரமற்ற சுற்றளவைக் கொண்டதால் எண்ணியதும்
ஆர்வமுடன் உற்றார் உறவினர் நண்பரை
காரில் மிதிவண்டி மற்றும் நடந்தேதான்
பார்த்து மகிழ்ந்திடுவோம் நாம்.

திருப்பரங் குன்றம் பழமுதிர் சோலை
தெருவில் தினமும் நிகழ்ச்சி விழாக்கள்
பெருமை பகர்ந்திடும் மல்லிகைப் பூக்கள்
அருமை மதுரை அழகு.

தெப்பக் குளமும் மகாலும் பெயர்சொல்லும்!
நட்புடன் மும்மதக் கோயில் வழிபாடு!
கட்சி அரசியல் பேச்சில் அனல்பறக்கும்!
எப்பொழுதும் கொண்டாட்டந் தான்.

அழகர் மலையழகும் ஆனை மலையும்
அழகான நாக மலையழகு மற்றும்
சிலைபோல் பசுமலையும் கண்கொள்ளாக் காட்சி!
இயற்கையின் கைவண்ணம் பார்.

பிறந்து வளர்ந்த மதுரை நகரை
உறவில் உயிரில் கலந்த நகரை
மறக்க முடியுமா? ஏக்கச் சுமையை
மறைக்க முடியுமா நான்?

0 Comments:

Post a Comment

<< Home