Sunday, October 26, 2014

வகைவகையான  மனிதர்கள்
----------------------------
எதற்கெடுத் தாலும் கோபப் படுவோர்
எதற்கெடுத் தாலும்  சிரிப்பவர்கள் மற்றும்
முகவுணர்ச்சி காட்டாத மந்தமனம்  கொண்டோர்
தரணியில் மாந்தர் வகை.

வேகவேக மாக இடித்து  நடப்பவர்கள்!
வேகமற்ற ஆமைபோல் ஊர்ந்து நடப்பவர்கள்
ஆடலும் பாடலுமாய் ஆடி நடப்பவர்கள்
காதலில் ஒன்றிச்  சிரித்து நடப்பவர்கள்
மேதினி காட்டும் நடை.


தங்கள் பணிகளுக்கு மற்றவரை ஏவுவோர்
தன்வீட்டு வேலைகளை மட்டுமே செய்பவர்கள்
தன்வீட்டைப் பார்க்காமல் மற்றவர்க்குத் தொண்டுசெய்வோர்
அம்மா! மனிதரைப் பார்.

விட்டுக் கொடுப்போர்! முரண்டு பிடிப்பவர்கள்!
எப்படியும் சிண்டு முடியும் குணம்படைத்தோர்!
மற்றவரைப் பார்த்துப் பொறாமை அடைபவர்கள்!
இப்படியும் மாந்தர் உளர்.

இருப்பதை வைத்துத் திருப்தியுடன் வாழ்வோர்!
இருப்பதை விட்டுவிட்டு ஏக்கமுடன் வாழ்வோர்
துரும்பைத் தூணாக்கித் துள்ளிக் குதிப்போர்
அரும்பே! மனப்போக்கைப் பார்.

பணிவுடன் வாழ்வோர் பகட்டாக வாழ்வோர்
துணிவுடன் வாழ்வோர் பயத்துடன் வாழ்வோர்
கனிவுடன் வாழ்வோர் கடுகடுத்து வாழ்வோர்
மனித வகைகளைப் பார்.

0 Comments:

Post a Comment

<< Home