Saturday, October 18, 2014

கவிதைகள்
மெய்ப்பொருள் காண்!
-----------------------
சொல்வதை எல்லாம் தவறாய்ப் புரிந்துகொண்டால்
சொல்லவும் தோணாது சொல்வதைக் காட்டிலும்
சொல்லாமல் செல்வதே மேலென்றே எண்ணுவார்!
சொல்வதில் உண்மை அறி.
கண்ணாடி
----------------------
பேச்சைப்  பரிமாறும் நேரத்தில் கேட்பவர்கள்
காட்டும் முகத்தின் உணர்ச்சிகளே,உள்ளத்தில்
ஏற்படும் தாக்கத்தைத் தெள்ளத் தெளிவாகக்
காட்டுகின்ற கண்ணாடி யாம்.
அனுசரிக்கப் பழகு
-----------------------
அனுசரித்துப் போனால் அமைதியான வாழ்க்கை!
அனுசரிக்க வில்லை அமளியான வாழ்க்கை!
அனுசரித்து வாழப் பழகிக்கொள்! கண்ணே!
குணத்தைப் பொருத்ததே வாழ்வு.
மயக்கும் மகுடி
----------------------
இலவசம் தள்ளுபடி என்பவை எல்லாம்
உலக வணிகத்தில் விற்பனை செய்யும்
களமமைக்கும் தந்திரங்கள்! மக்கள் தெரிந்தே
மயங்கும் மகுடியைப் பார்.
மழலையின் வலிமை!
-----------------------
மனைவி கணவன் கடும்சண்டை போட்டார்!
இணையர் மழலை சிணுங்கித்தான் வந்தாள்!
அணைத்துக் கொஞ்சினர்! சண்டை மறைந்து
மனையில் இறுக்கமில்லை பார்.

0 Comments:

Post a Comment

<< Home