Wednesday, July 02, 2014

பணிக்கள உறவு
---------------------------------------
பணிபுரிந்த நாளில் தினந்தோறும் பார்த்தோம்!
பணிககளம் விட்டுப் பிரித்தது  காலம்!
மணிக்கணக்கில் சந்தித்த நாமோ இன்று
நினைவிலே சந்திக்கும் வாழ்வு.
வாலியைப் போற்றுவோம்
------------------------------------------------------------------------
வாலியின் பாடல்கள் மெய்சிலிர்க்க வைத்தன!
காவியப் பாவலன் விண்னுலகப் பாவலனாய்
தூவுகின்றான் தேன்மழைச் சாரலைப் பாடலாய்!
பாவலனைக் காண்பதுதான் என்று?
அகர வரிசைக் கவிதை!
-----------------------
அன்றாடம் ஆசை இதயத்தில் ஈனமானால்
உன்னைத்தான் ஊர்சுற்றி என்றேதான்  ஏளனமாய்
ஐந்துபேரும் தூற்றித்தான் ஒண்டாமல் ஓடுவார்
ஔவைத்  தமிழால்  இகழ்ந்து.
எப்படித்தான் காண்பார் வழி?
-----------------------------------------------------------
சுற்றிவந்து சிக்கல் குறுக்கும் நெடுக்குமாய்க்
கட்டங்கள் போட்டேதான் சிக்கவைத்துப் பார்த்திருந்தால்
சிக்கித் திணறுகின்ற மக்கள் தவித்திருப்பார்!
எப்படித்தான் காண்பார் வழி?

திரைப்படமும் தூண்டுகோல்
--------------------------------------------------
பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரித்து
வன்முறையைத் தூண்டுகின்ற குற்றத்தைக கண்முன்னே
இங்கே திரைப்படத்தில் நாளும் அரங்கேற்றும்
வன்கொடுமை மாறுவ தென்று?

அனைவரும் கண்டுகொள்ளாதது ஏன்?
(
அரசியல் வாதிகள் உள்பட)
----------------------------------------------------------------------
வண்டிகளில் மாடுகளைப் பூட்டிச் சுமைகளைக்
கண்டபடி ஏற்றும் கொடுமைபோல்--இங்கே
சுமக்க முடியாமல் புத்தகத்தைத் தோளில்
சுமக்கின்றார் பிள்ளைகள் பார்.

அரசாங்கம், பள்ளிகளின் நிர்வாகம் எல்லாம்
அலட்சியம் காட்டுகின்றார்! தளிரின் முதுகு
வளைந்துவிடும் என்னும் மருத்துவர் சொல்லை
விளையாட்டாய் எண்ணுவதும் ஏன்?
இறைவனுக்கும் மேல்!
----------------------------------------------
பெற்றெடுத்த பிள்ளையைத் தொல்லையாய் எண்ணுகின்ற
பெற்றோர்கள் கண்டிக்கத் தக்கவர்கள்--தத்தெடுத்த
பிள்ளையைத் தன்பிள்ளை யாய்க் கருதும்
நல்லோர் இறைவனுக்கும் மேல்.


இதுவும் கடந்துபோகும்!
--------------------------------------------
இதுவும் கடந்துபோகும்! உண்மைதான்! ஆனால்
மெதுவாய்க் கடப்பதற்குள் நம்மைக் கடைந்தே
நொறுக்கிப் பொடியாக்கிச் செல்கிறதே! கண்மணியே!
நடுங்கவைத்துப் பார்க்கிறதே ஏன்?



தூக்கம் எப்படி வரும்?
------------------------------------------
தூக்கம் வரவில்லை! தூங்கப் பிடிக்கவில்லை!
ஈக்களால் மொய்க்கப் படுகின்ற மாம்பழம்போல்
தாக்கும் கவலைகள் இங்கே சுவைத்திருந்தால்
தூக்கம் வருவதென்று? கூறு.
-

முள்ளாய் மாறாதே!
---------------------------------------
பள்ளிக்குச் செல்லப் புறப்படும் நேரத்தில்
பிள்ளை மனம்நோகும் வண்னம் வசைபாடி
முள்ளாய்க் குதறினால் பிள்லை முகத்திலே
துள்ளுமா உற்சாகம்? சொல்.

பணம்படுத்தும் பாடு
-------------------------------------
கணவன் மனைவியாய் ஒன்றாக வாழ்ந்தும்
பணமென்று வந்தால் தனித்தனி யாக
கணக்கிட்டு வாழ்கின்றார்! இத்தகைய கோலம்
பணம்படுத்தும் பாடுதான் பார்.

நிம்மதி நம்கையில்
-------------------------------------------
மரங்களில் உள்ள பலாப்பழத்தை எண்ணி
கரங்களில் உள்ள களாக்காயை இங்கே
இழத்தல் மடமையாகும்! மானிடனே என்றும்
இருப்பதில் நிம்மதியைக் காண்

0 Comments:

Post a Comment

<< Home