Sunday, July 06, 2008

பாலைவனப்பயணம்(DESERT SAFARI IN DUBAI)

மகிழுந்தோ துள்ள மணற்பரப்பில் எங்கள்
மகிழுந்து சென்றது! நாங்கள்---மகிழ்ந்தோம்
மனத்திற்குள் அச்சத்தின் வேர்கள் படர
மணலில் விரைந்ததே உந்து.

கண்களுக் கெட்டிய தூரம் மணற்பரப்பே!
எங்கும் மணற்குன்று! அங்கங்கே---செங்குத்தாய்
நின்று வரவேற்க வண்டி விளையாடும்
பங்கில் கலந்திருந்தோம் பார்த்து.

பள்ளத்தில் நாமும் பயணிக்கும் நேரத்தில்
துள்ளி மணற்குன்றின் மீதுதான்---உள்ளம்
குலுங்க உயரத்தை நோக்கி விரைவோம்!
சிலிர்ப்பில் திளைப்போம் உணர்ந்து.

செங்க்குத்தாய் ஏற்றங்கள்!ஏறிவிட்டோம் என்றதுமே
செங்க்குத்தாய்ப் பள்ளம்! இவைகளே----அங்குதான்
மாறிமாறி வந்து விளையாட்டுக் காட்டவே
ஓடுதம்மா வண்டி உருண்டு.

வண்டியின் சக்கரத்தில் பாலை மணற்குன்றின்
வண்ண மணலோ சுழல்களாய்ப்---பின்னிச்
சிதறுகின்ற கோலங்கள் கண்கொள்ளாக் காட்சி!
படம்பிடித்தால் இன்புறலாம் பார்த்து.

தொடங்கிய நேரம் முதலாக நெஞ்சில்
பதற்றம் இருந்தாலும் வண்டி---தடம்பற்றி
வந்தேதான் சாலையைத் தொட்டதும் அப்பாடா!
என்போம் பெருமூச்சு விட்டு.

0 Comments:

Post a Comment

<< Home