Thursday, January 11, 2007

ஒருமனித இராணுவம் மகாத்மா காந்தி


கலவரங்கள் வெடித்திருந்த கல்கத்தா நகருக்குள்
நிலைகுலையா நெஞ்சமுடன் நேர்மையாளர் நுழைந்திட்டார்!
வன்முறைக்கு உள்ளானோர் வழிநெடுகக் கூடிநின்றார்!
அண்ணலுக்கு எதிராக அனற்சொல்லால் கூச்சலிட்டார்!
எரிமலையாய்ச் சீறிநின்றார்!இடித்துரைத்தார்! சாடிநின்றார்!
கரங்கொண்டு கார்மீது கல்வீசி எதிர்த்திருந்தார்!
ஒருகையில் மேலாடை உரசிநிற்க, சமாதான
கரமெடுத்து மேலுயர்த்தி கல்மழைக்குள் நடந்துசென்றார்!
என்னையா தாக்கவேண்டும்? இதோநான் வருகின்றேன்!
கண்ணியவான் குரல்கொடுத்தார்! கலங்கவில்லை காந்தியண்ணல்!
தங்களைத்தான் நோக்கிவந்த தளிர்மேனி காந்திஜியைக்
கண்டவுடன் பொதுமக்கள் கற்சிலையாய் உறைந்துவிட்டார்!
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு சேவைசெய்ய வந்துள்ளேன்!
வன்முறையின் வெறியாட்ட மடைதிறந்தால் உயிர்துறப்பேன்!
என்றேதான் பலவாறு எடுத்துரைத்தார் நிலைவிளக்கி!
நன்முறைக்கு திரும்புமாறு நடைமுறைக்கு வித்திட்டார்!
தன்னுயிரைப் பணயமாக்கி தழைக்கவைத்தார் அமைதியினை!
வன்முறையைத் தடுத்துவிட்டார்! மனிதநேயம் சிறக்கவைத்தார்!
இராணுவத்தார் வன்முறையின் எரிமலையை அணைக்கவில்லை!
ஒருமனித இராணுவமாய் உத்தமர்தான் அணைத்துவிட்டார்!

********************************************
கவிதையை வெளியிட்ட
பாரதமணி இதழுக்கு நன்றி
********************************************
 Posted by Picasa

0 Comments:

Post a Comment

<< Home