Wednesday, January 10, 2007

காதல் வெண்பாக்கள்

மல்லிச் சரம்சூடி மங்கை நடந்துவந்தால்
கல்லும் கவிபாடும் கண்மணியே --புல்லும்
நடனமாடும்! நற்றமிழ்ப் பாவலன் நெஞ்சம்
படும்பாட்டை என்னென்பேன்? பார்த்து.

முல்லைக் குறுநகையும்,முந்தானை தென்றலிலே
செல்லமாகத் தொட்டசைந்தும் சேயிழையின் - இல்லறத்துக்
காதலுக்குத் தூதுவிட்டு பாவினத்தைக் காதோடு
காதாகப் பாடுதடி காண்.

அசையும் கொடியோ!அலையும் இடையோ!
இசையின் வடிவோ!இனிய - நகையோ
கசியும் அமுதோ!கடையிதழ்த் தேனோ!
பசியை உசுப்புகின்றாள் பார்.

கண்களால் என்மேல் கலாட்டா செய்கின்றாய்!
அம்புகளால் அய்யோ! துளைக்கின்றாய்!- உந்தன்
நிழலால் நெருங்கியே நிம்மதியைப் பந்தாய்
உருட்டி உதைக்கின்றாய்!ஏன்?

0 Comments:

Post a Comment

<< Home