Monday, September 28, 2020

பருவமாற்றங்கள்

 பருவமாற்றங்கள்!


1-5

மழலையர் பள்ளி!


தத்தி நடைபழகி கீழே விழுந்தெழுந்து

எப்படியோ காயங்கள் அங்கங்கே காணவைக்கும்!

பெற்றோரும் தாத்தாவும் பாட்டியும் ஒற்றுமையாய்

தூக்கி மழலையர் பள்ளியில் சேர்த்திடுவார்!

ஏக்கத்தில் தேம்பும் அரும்பு.


6-17

தொடக்கப்பள்ளி-- மேல்நிலைப்பள்ளி!


ஒன்றாம் வகுப்பிலே சேர்ப்பார்!படிப்படிப்பாய்

நண்பர்கள் சூழ மகிழ்ந்தே நடந்துசெல்வார்கள்!

வண்டியில் ஆட்டோவில் என்றே பலவகை

வண்டிகளில் சென்று வருவார்கள்! மாலையில்

பள்ளிகள்முன்  வீட்டுவாசல் என்றே வருகைக்குக்

காத்திருப்பார் பிள்ளைகள் உற்சாகம் பொங்கவந்தே

பாட்டியை தாத்தாவை பெற்றோரை நாடிவந்தே

ஆரத் தழுவிடுவார் பார்.


ஒவ்வொரு ஆண்டாக தேர்ந்து தெளிந்தேதான்

பள்ளியில் கற்றதைப் பண்புகளின் பக்குவமாய்

நல்லவராய் வல்லவராய் ஆற்றல் பெருகிவர

எல்லோரும் முன்னேற வாழ்வில் உழைக்கின்றார்.!

பள்ளிப் பருவம் முடிந்தேதான் கல்லூரி

உள்ளே நுழைவார் விழைந்து.


கல்லூரி!


18--23


வாழ்வை அமைப்பதற்கு ஏற்றவாறு பாடத்தை

ஏற்பார் படிப்பார் படித்து முடித்ததும்

ஆற்றல் சிறகுகளை இங்கே விரித்தேதான்

ஏற்ற துறைகளைத் தேர்ந்தெடுத்துச் சென்றிருப்பார்!

ஊற்றெடுக்கும் சாதனைகள் ஈன்ற பொழுதினும்

தாய்தந்தை நாளும் மகிழ்ந்திருக்க சான்றோனாய்

வாழ்வில் உயர்த்தும் உணர்.



பணிக்களம் -- இல்லறம்


24--60


எந்தெந்தத் துறையெனினும் அந்தத் துறையில்

தங்களது முத்திரையை ஊன்றிப் புகழ்பெறுவார்!

அன்பும் அறனும் உடைத்தாயின்

இல்வாழ்க்கைப்

பண்பும் பயனும் அதுவென்றே மாண்புற

தங்களது வாழ்க்கைத் துணைகளுடன் இல்லறத்தை

இங்கே நடத்த முனைந்திடுவார்! பிள்ளைகள்

முந்தி இருப்பதற்குப் பெற்றோர் கடமைகளை

செவ்வனே செய்வார்! குழந்தைகளும் முன்னேறி

இந்தக் குழந்தைகளின் பெற்றோர்தான் என்னதவம்

செய்தனர்? இத்தகைய அற்புதச் செல்வத்தைப்

பெற்றெடுக்க என்றே வியக்கவைப்பார். பிள்ளைகள்!

இத்தகைய தன்மையே வாழ்வு.


60 முதல்


பணிநிறைவு பெற்றே வயதாகி வீட்டில்

மணிக்கணக்கில் பேரக் குழந்தைகளுடன்  நேரம்

பரபரப்பாய்ப் போகும்!  மகனோ மகளோ

பணிக்களம் சென்றுவிட்டால் முதுமைத் தனிமை!

அவரவர் வேலை குழந்தைகள் என்றே

அலைச்சலில் மூழ்குவார்! தவறில்லை கண்ணே!

வெற்றிடத்தில் நாள்கள் யுகமாகத் தோன்ற

சுற்றிச் சுழல்வதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்










0 Comments:

Post a Comment

<< Home