மதுரை நினைவுகள்
மதுரை நினைவுகள்!
1954-- 1963
மோதிலால் 2 ஆவது தெரு
வீட்டின் உரிமையாளர் திருமதி.G.கோமதியம்மாள்!
சற்றே மாறிய கோலத்தில் பழைய வீடு!
வீட்டுக்குப் பின்னால் கிணறு!
முன்னால் பூவரசு மரம்!
நான்பிறந்தேன்! அக்காவும் தங்கையும் தம்பியும்
தான்பிறந்தார்! அம்மாவும் அப்பாவும் நாள்தோறும்
எங்களைப் பாராட்டி சீராட்டிப் பார்த்தவீடு!
தங்குதடை யின்றிப் படித்தவீடு! இல்லறம்
தந்ததே அக்காவுக்(கு) தான்.
மோதிலால் சாலை இரண்டில் குடியிருந்தோம்!
மாடியில் கோமதி யம்மா குடும்பத்தார்!
தேடிவந்து பேசி உறவினர்போல் வாழ்ந்தவர்!
ஆதிகால வீட்டிலே பின்வாசல் தாண்டினால்
தோதாய்க் கிணறிருக்கும்! அந்தக் கிணற்றிலே
வாளியை நாங்கள் கயிற்றிலே கட்டித்தான்
மேலே உருளைக்குள் அந்தக் கயிறைவிட்டே
வாளியை உள்ளனுப்பி தண்ணீர் நிரம்பியதும்
வாளிக் கயிறை இழுப்போம் விரைவாக!
வாளிவந்து சேரும்! பிடித்தெடுத்தே அண்டாவில்
நீரை நிரப்புவோம்! இன்று கிணறுகள்
வீட்டுக்கு வீடிருந்த காட்சிகள் மாறியதே!
வீட்டுக் கின்றுகளை மூடிவிட்ட காலமிது!
மாற்றமொன்றே மாறா ததாம்.
மாடிப் படிகள் கிணற்றுக் கருகிலே !
மாடியில் உள்ளவர்கள் வந்தே படிகளில்
கூடி அமர்ந்திருப்பார்! நீரிறைப்போர் நட்புடன்
பேசி மகிழ்ந்திருப்பார் எல்லாம் அரட்டைதான்!
ஈடில்லா நாள்கள் அவை.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home