74 நாடு
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
74 நாடு
குறள் 731:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.
விளைச்சல், நெறியாளர், செல்வந்தர்
முறையாய்
அமைந்த அமைப்புதான் நாடு.
குறள் 732:
பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.
வளங்கள், விரும்புகின்ற சூழல், விளைச்சல்
நிலைத்திருக்க வாழ்வதே நாடு.
குறள் 733:
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு.
புதிய சுமைகளைத் தாங்கி வரிகள்
அரசுக்( கு)
அளிக்கும் வளமுடைத்து நாடு.
குறள் 734:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
பசியும் பகையும் பிணியுமற்ற நாடே
அகங்குளிர வாழ்கின்ற நாடு.
குறள் 735:
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.
குழுப்பகை உட்பகை மற்றும் துரோகம்
இழைப்பவர் அற்றதே நாடு.
குறள் 736:
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.
பகைவரால் சீரழிந்த போதும் வளங்கள்
குறையாத நாடுதான் நாடு.
குறள் 737:
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு.
ஆழியும் ஆறும் மலையும் அரணும் மழைப்பொழிவும்
ஈடில்லா நாட்டிற் குறுப்பு.
குறள் 738:
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.
நோயின்மை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சியும்
பாதுகாப்பும் நாட்டிற் கழகு.
குறள் 739:
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
இயற்கை வளம்நிறைந்த நாடுதான் நாடு!
வருந்துவது நாடல்ல சாற்று.
குறள் 740:
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
எல்லா வளமிருந்தும் நல்லாட்சி
யற்றநாடு
ஒன்றுமில்லா நாடென்று சாற்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home